பத்துப்பாட்டு உரை
ந.சி. கந்தையா
1. பத்துப்பாட்டு உரை
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. பத்துப்பாட்டு உரை
பத்துப்பாட்டு உரை
ந.சி. கந்தையா
நூற்குறிப்பு
நூற்பெயர் : பத்துப்பாட்டு உரை
ஆசிரியர் : ந.சி. கந்தையா
பதிப்பாளர் : இ. இனியன்
முதல் பதிப்பு : 2003
தாள் : 16.0 கி. மேப்லித்தோ
அளவு : 1/8 தெம்மி
எழுத்து : 11 புள்ளி
பக்கம் : 20 + 148 = 168
படிகள் : 1000
விலை : உரு. 75
நூலாக்கம் : பாவாணர் கணினி
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 17.
அட்டை வடிவமைப்பு : பிரேம்
அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
20 அஜீஸ் முல்க் 5வது தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
கட்டமைப்பு : இயல்பு
வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
328/10 திவான்சாகிப் தோட்டம்,
டி.டி.கே. சாலை,
இராயப்பேட்டை, சென்னை - 600 014.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.
‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’
என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.
ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.
அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.
ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.
இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.
பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.
தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.
திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-
திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.
பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.
“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”
வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!
தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.
அன்பன்
கோ. தேவராசன்
அகம் நுதலுதல்
உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.
உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.
எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.
இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.
வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.
உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.
இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.
சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.
அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.
உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.
நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.
அன்பன்
புலவர் த. ஆறுமுகன்
நூலறிமுகவுரை
திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.
இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.
திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.
இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.
ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்
58, 37ஆவது ஒழுங்கை, கார்த்திகேசு சிவத்தம்பி
வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்
கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.
தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.
தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.
உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.
மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.
நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.
தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.
ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
பேரா. கு. அரசேந்திரன்
பதிப்புரை
வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.
இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.
ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.
தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.
தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.
நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.
வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.
ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?
தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.
மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.
இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிப்பகத்தார்
பதிற்றுப்பத்து வசனம்
முகவுரை
சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகிய பதிற்றுப் பத்துச் சேர அரசரின் கீர்த்திப் பிரதாபங்களைக் கூறுகின்றது. சேர அரசர் பலரின் சரித்திரங்களை அறிதற்கு இந்நூல் துணைபுரிகின்றது. இந்நூலைக் கற்பதினால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் தமிழ் நாடு எவ்வகையான நாகரீகம் அடைந்திருந்த தென்பதைப் பட்டப்பகல் போல அறிந்து கொள்ளுதல் கூடும். உள்ளதை உள்ளவாறே கூறும் மெய்ம்மொழிப் புலவர்கள், ஆறு மலை சோலை காடு முதலியவற்றின் வளங்களும், மக்களின் நடை உடை பாவனைகளும், வேந்தரின் மாட மாளிகை கூடகோபுரம், நாடு நகரம், முடி கொடி குடை ஆல வட்டம், தேர் யானை குதிரை காலாள், போர்க்களம் பாசறை ஆதியனவும் பிறவும் நமது மனக் கண்ணுக்கு இனிது புலப்படுமாறு, தமது பாடல்களாகிய திரையில், அழகுபெறச் சித்திரித்திருக்கின்றனர். நமது பழைய தமிழகத்தின் ஒரு பகுதியாகிய சேரர் உலகம் பண்டு இருந்த தன்மையை இன்று நம் மனக் கண்களாற்கண்டு களிகூர்தல் எவ்வளவு மகிழ்ச்சிக்குரிய தாகின்றது.
பதிற்றுப்பத்திற் பலவழக்கு வீழ்ந்த சொற்கள் காணப்படுதலின் அந்நூலை எளிதிற் பொருள் விளங்கிப் பயில்தல் அரிதாகின்றது. 1இந்நூல், உயர்தரப் பரீட்சைகளுக்குப் பாடமாக வைக்கப்பெற்று வருகின்றமையின் இதனைப் பயில்வோர் மிகச்சிரமம் உறுகின்றனர். இந்நூல், பரீட்சைக்குப் பயில்வோர் செய்யுட்களைப் பயில்வதற்குத் துணையாயிருக்கும் பொருட்டு மூலத்திலுள்ள ஒரு சொல்லேனும் விடுபடாமல் வசனமாக எழுதப்பெற்ற தொன்றாதலின், வசனங்களைக் குறுக்குவது இயலாதாயிற்று. ஆயினும் இதனைப் பயில்வோர் பதிற்றுப் பத்திற் கூறும் செய்திகளை அறிந்து மகிழ்வாரென்பதில் ஐயமில்லை.
“குணநாடிக் குற்றமும்நாடி அவற்றின்
மிகைநாடி மிக்க கொளல்.”
தமிழ் நிலையம்
நவாலியூர்
1-8-1937.
ந.சி. கந்தையா.
ஆராய்ச்சி உரை
சங்கத் தொகைநூல் எட்டனுள் பதிற்றுப்பத்து நான்காவதாயுள்ளது. இந்நூலின் முதற்பத்தும் இறுதிப் பத்தும் கிடைத்தில. கிடைத்துள்ள எட்டுப் பத்துகளும் எட்டுப் புலவர்களால் வெவ்வேறு எட்டுச் சேர அரசரின் வீரம் கொடை ஆகியவற்றைப் புகழ்ந்து பாடப்பட்டனவாகும். இப்பாடல்களைப் பாடிய புலவர்களுக்கு அச் சேர மன்னர் மிகுந்த பொன்னையும் நாடுகளை யும் பரிசிலாக வழங்கினர். பதிற்றுப் பத்தைப் பாடிய புலவர்கள் கி. பி. இரண் டாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கினார்கள். தமிழ் இலக்கண நூவார் குறிப்பிடுவதுபோலச் சேர நாடு கொடுந்தமிழ் நாடுகளுள் ஒன்று. இந்நூலகத்து இக்காலம் வழக்கு வீழ்ந்த சொற்களும், சொல் வழக்கும், பழைய இலக்கண முடிபுகளும் தற்கால மலையாளரின் முன்னோராகிய மேற்குக் கரைத் தமிழரின் பழக்க வழக்கங்களும் காணப்படுகின்றன.
குமட்டூர்க் கண்ணனார், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மீது இந்நூலின் இரண்டாம் பத்தைப் பாடினார். இவ் வரசன் உதியன் சேரலாதற்கு வேள்மான் நல்லினியிடம் பிறந்தான். இவன் கடுஞ்சொல்லுடைய யவனரைவென்றான். இவன் இலங்கை வேந்தனாகிய முதலாம் கயவாகுவின் கி. பி. (169-191) காலத்தவனும் செங்குட்டுவனின் தந்தையுமாவன். இவன் 58 ஆண்டு அரசாண்டான். இந்தச் சேர அரசனும் கண்ணனார் என்னும் புலவரும் 2ஆம் நூற்றாண்டின், மத்திய காலத்தவர்களாவர். இவன் வெண்ணிப் பறந்தலையில் கரிகாலனோடு போர் செய்து புண்ணுற்று, (அகம் 55.) நாணித் தான்கொண்ட வாளோடு வடக்கிருந்தான். இவன் கடலிற்சென்று பகைவரது கடம்பினை அறுத்து அதனால் வீர முரசம் செய்தான். மற்றொருமுறை வடநாடு சென்று ஆரியரை அலறத்தாக்கி, அவர் அரசரைச் சிறைசெய்து இமயவரையில் தனது விற்பொறியைப் பொறித்தான். இச்சிறந்த வீரன் பகைவர்பால் சிறந்த பொன்னாபரணங்களையும் வயிரம் முதலிய இரத்தினங் களையும் எண்ணிறந்த அளவு திறையாகப்பெற்றதோடு, ஒரு பொற்பாவை யையும் பெற்றானெனத் தெரிகிறது (அகம் 127). இவற்றை இவன் மாந்தை முற்றத்திற் குவித்து விட்டுப் புண்ணுக்கு நாணித் துறவு பூண்டு வடக் கிருந்தான் (அகம் 127).
மூன்றாம் பத்தால் பாலைக் கௌதமனார் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாடினார். இப்புலவரை இளங்கோவடிகள் ‘தண்டமிழ் மறையோன்’ எனக்கூறுவர். இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் தெய்வ பக்தி நிறைந்தவனாதலின் இருபத்தைந் தாண்டு ஆட்சி புரிந்தபின் துறவு பூண்டான். இவன் கௌதமனார் பொருட்டு நெடும்பாரதாய னார் என்னும் புரோகிதர் வாயிலாக பத்து வேள்விகள் வேட்டான். பத்து வேள்வியின் பின் கௌதமனார் மனைவியுடன் மறைந்து தேவருலகம் எய்தினர் என்று சொல்லப்படுகின்றது. சிலப்பதிகாரமும் இச்சம்பவத்தைக் கூறும். அயிரைமலையிலுள்ள குலதெய்வத்தை அவன் அலங்கரித்தான் என்றுஞ் சொல்லப்படுகின்றது.
நாலாம் பத்தால் காப்பியாற்றுக் காப்பியனார் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைப் பாடினார். இச்சேரன் நெடுஞ்சேரலாதற்கு வேளாவிக் கோமான் மகள் பதுமன் தேவியிடம் பிறந்தவன். இவன் பூழி நாட்டை வென்று நன்னனைத் தோற்கடித்தான். இவன் சேரலாதனுக்குப் பின் சிம்மாசன மேறினான். இவனுக்குரிய இயற்பெயர் விளங்கவில்லை. இவன் சூடுதற்குரிய முடியைப் பகைவர் கவர்ந்தமையின் கழங்காயாலும் நாராலும் செய்த முடியைச் சூடினான்; அக்காரணத்தால் கழங்காய்க்கண்ணி நார் முடிச்சேரல் என்னும் பெயர் பெற்றான். இவன் 25 ஆண்டு அரசு வீற்றிருந்தான்.
ஐந்தாம் பத்துப் பாடியவர் பரணர். இப்பத்துக்குரியவன் செங்குட்டுவன். இவன் இலங்கை அரசனாகிய முதலாம் கயவாகுவின் காலத்தவன். அக்காலத்திருந்த சோழ அரசர் உருவப் பஃறேர்இளஞ்சேட்சென்னியும் வேற் பஃறடக்கைப் பெருநற்கிள்ளியும்; பாண்டிய அரசர்: நெடுமாறனும் வெற்றிவேற் செழியனும். இவன் ஆரிய அரசராகிய கன்ன விசயரைக் கங்கையின் வடகரையில் வென்றான்; ஒன்பது சோழ அரசரை உறையூருக்கு அணித்திலுள்ள நேரிவாயிலில் தோற்கடித்தான்; மோகூர் மன்னனாகிய பழையனைப் பணிவித்தான். இவன் இளங்கோவடிகளின் தமையனும் சிலப்பதிகாரத்துள்ள வஞ்சிக் காண்டத்தின் கதாநாயகனுமாவன். இவன் 55 ஆண்டு அரசு வீற்றிருந்தான். இவன் காலம் கி. பி. 150-225.
ஆறாம் பத்தால் காக்கை பாடினியார் நச்செள்ளையார் ஆடு கோட்பாட்டுச் சேரலாதனைப் பாடினார். இவன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலின் தம்பியாகிய குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கு வேளாவிக்கோமகன் மகள் பதுமன் தேவியிடம் பிறந்தவன். இவன், தண்டாரணியத்திலுள்ளவர் களாற் கவரப்பட்ட பசு நிரைகளை மீட்டு தொண்டியில் கொணர்ந்து சேர்ப்பித் தமை பற்றி இப்பெயர் பெற்றான். இவன் அந்தணருக்கு பசுக்களையும் நிலங்களையும் தானஞ்செய்தான். இவனுக்குத் தலை நகரம் தொண்டி. இவன் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவன் 38 ஆண்டு அரசு வீற்றிருந்தான் என்ப.
ஏழாம் பத்தால் கபிலர் செல்வக் கடுங்கோவாழி ஆதனைச் சிறப்பித்தார். இவன் அந்துவஞ்சேரலிரும் பொறைக்கு ஒரு தந்தை ஈன்ற மகளாகிய பெருந்தேவியிடத்திற் பிறந்தவன். யானைக்கட்சேய் என்பது இவனுக்கு மறு பெயர். இவன் பெருங்கொடையாலும் அருங்குணங்களாலும் பெயர் பெற்றவன்; திருமால் பத்தியிற் சிறந்து விளங்கியோன். கபிலர் தம் உயிர்த்துணைவனாக விளங்கிய வேள்பாரி உயிர் நீத்ததும், அப்பாரியின் உத்தமகுணங்கள் பலவும் இச்செல்வக்கடுங்கோவிடம் உள்ளனவாகக் கேள்வியுற்று இவனைக் காணச்சென்று ஏழாம் பத்தை இச் சேரன் முன் பாடினர். அவர் பாடலைக்கேட்ட செல்வக்கடுங்கோ, அவ் வந்தணப் பெரியார்க்கு நூறாயிரம் காணம் அளித்ததோடு நற்றா என்னுங் குன்றில் தானும் அவரும் ஏறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டி அப்புலவர்க்கு அளித்தான். இவன் மனைவி நெடுஞ்சேரலாதற்கு மகட் கொடுத்த வேளாவிக்கோமானுடைய மற்றொரு மகளாவள். ஆகவே நெடுஞ்சேரலாதனும் செல்வக் கடுங்கோவும் சகலமுறையினர். இவ்வேந்தர் பிரான் இருபத்தைந்தாண்டு வீற்றிருந்தான். இவன் சிக்கற்பள்ளி என்னு மிடத்திற் துஞ்சினான்.
கபிலர் பாண்டியநாட்டில் திருவாதவூரில் பிறந்த அந்தணன். தான் பிறந்த நாட்டுக்குரிய பாண்டிய ரெவரையாவது இவர் பாடவில்லை. இவர் இளமையிலேயே பாண்டிய தேசம் விட்டுச் சேரநாட்டிற் சென்று வாழ்ந்ததே இதற்குக் காரணமாயிருக்கலாம். இவர் பெரும்பாலும் மலைவளங்களையும் மலைநாட்டு அரசர்களையுமே சிறப்பித்திருக்கின்றனர். இவர் செய்த நூல்கள்: ஐங்குறு நூற்றில் ஒரு நூறு, குறிஞ்சிப்பாட்டு, இன்னா நாற்பது, நற்றிணை குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு முதலியவற்றிற் சில செய்யுட்கள் ஆதியனவாகும் இவர் பலதேவன் விஷ்ணு சிவன் முதலிய கடவுளரைத் தமது பாடல்களிற் சிறப்பித்திருக்கின்றனர். பதினோராந்திருமுறையிற் காணப்படும் பாடல்கள் பிறிதொருவர் செய்தனவாயிருக்கலாம். இவர் காலத்தைய புலவர்கள் இவரைப் ‘பொய்யாநாவிற் கபிலன்’ என்று சிறப்பித் திருக்கின்றனர்.
எட்டாம் பத்தால் அரிசில்கிழார் பெருஞ் சேரலிரும்பொறையைச் சிறப்பித்தார். இவன் செல்வக்கடுங்கோவுக்கு வேளாவிக் கோமான் மகள் 1பதுமன் தேவியிடம் பிறந்த மகன். இவன் அதிகமானது தகடூர் மேற்படை யெடுத்துச் சென்று பெரும்போர் புரிந்து, அவ்வூரையும் அதிகமானையும் அழித்தனன். இப்போர்ச் செயலே தகடூர் யாத்திரை என்னும் பண்டைநூலிற் சிறப்பித்துக் கூறப்படுவது. இவ் வெற்றி பற்றி ‘தகடூ ரெறிந்த’ என்னும் அடையுடன் இவன் வழங்கப்படுவன். அரிசில் கிழார் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த இச்சேரன், தானும் தன் மனைவியும் வெளியே வந்து நின்று, தன் கோயிலிலுள்ள வெல்லாம் கொள்க என்று ஒன்பது நூறாயிரம் காணத்தோடு தன் அரசு கட்டிலையும் புலவர்க்குக் கொடுப்ப, அவன், ‘யானிரப்ப நீயாள்க’, என்று அவற்றைத் திரும்பக் கொடுத்து அவ்வரசனுக்கு அமைச்சுப்பூண்டார். இச்சேரன் பதினேழாண்டு வீற்றிருந்தான். இப் பெருஞ் சேரர்க்கு மனைவி அத்துவஞ்செள்ளை. இவன் உக்கிரபாண்டியன் காலத்தவன்.
ஒன்பதாம் பத்தால் பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரலிரும் பொறையைச் சிறப்பித்தார். இவன் குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழான் வேண்மாளந்துவஞ் செள்ளையிடம் பிறந்தவன். இவன் கடல் அடங்கவேலோட்டியவரும், அயிரைமலைத்தெய்வத்தை அலங்கரித்தவரு மாகியவர்களின் சந்ததியில் வந்தவன் என்று சொல்லப்படுகின்றது.
சங்க நூல்கள் தொகுத்து முடிந்தது கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை யில் என்று கருதப்படுகின்றது. இறையனாரகப் பொருளுரையில் தொகை நூல்களைக் குறிப்பிடுமிடத்துப் பதிற்றுப்பத்தும் காணப்படுகின்றது. ஆகவே இறையனாரகப் பொருளுரை எழுதப்படுவதன் முன் பழந்தமிழ்ச் செய்யுட்கள் தொகுக்கப்பட்டுள்ளன வென்பது தேற்றம். இறையனாரகப் பொருள் நீலகண்டனாரால் கி. பி. ஆறாம் நூற்றாண்டு வரையில் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்பது பல்லோர் கருத்து.
இந் நூல் தொகுத்தவராலேயே பதிகங்களும் பாடப்பட்டிருத்தல் வேண்டும். ஆசிரியர் நச்சினார்க்கினியர் அடியார்க்கு நல்லார் முதலிய உரையாசிரியர்கள் இப் பதிகங்களைத் தமது உரைகளில் எடுத்தாண்டிருக் கின்றனர். இவர்களின் காலம் கி. பி. 12ஆம் நூற்றாண்டு வரையில்.
இனிச் சேர அரசர் கபிலர், பரணர், பாலைக் கௌதமனார் பெருங்குன் றூர்கிழார் அரிசில்கிழார் முதலிய புலவர்களதும் காலத்தை ஆராய்வோம். பதிற்றுப் பத்திலுள்ள அரசர்களின் பரம்பரை இருவகைப்படும்.
இவ்வரசர்களுக்கும் தலைநகரம் தொண்டி.
இவ்வரசர்களுள் செங்குட்டுவன் காலம் மாத்திரம் தீர்மானமாகக் கணிக்கப்பட்டுள்ளது. அது கி. பி. 175-225 ஆகும். ஆகவே சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலம் கி. பி. 200க்கும் 225-க்குமிடையில் இருக்கலாம். மேலே குறிக்கப்பட்ட 1ஆம் அட்டவணையின் 1ஆம் 2ஆம் 3ஆம் அரசர்களதும் 2ஆம் அட்டவணையிற் குறிக்கப்பட்ட 3ஆம் அரசனதும் கீர்த்திப்பிரதாபங் களைச் சிலப்பதிகாரங் கூறுகின்றது. ஆகவே இவ்விரண்டு பரம்பரைகளிலு முள்ள அரசர்கள் செங்குட்டுவனுக்கு முற்பட்ட காலத்தவர்களாக வேண்டும். பரணர், (4) செங்குட்டுவனையும் (1) சேரலாதனையும் பாடியிருக்கின்றார். இன்னும் புகாரிலிருந்த உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி (கரிகாலனின் தந்தை) உறையூரிலிருந்த வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி முதலியோரை யும் பாடினர். 1ஆம் அட்டவணையிற் காட்டப்பட்ட 1 முதல் 4 வரையுமுள்ள அரசர்களின் ஆட்சிக் காலத்தைக் கணக்கிடின் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகின்றது. இது ஒருபோதும் பரணருடைய வயதாயிருக்கமுடியாது. ஆகவே ஒவ்வொரு அரசரின் ஆட்சிக் காலமென்றது முடிசூடுவதன்முன் சேர நாட்டின் சில பகுதிகளுக்கு அதிபதிகளா(Viceroys)யிருந்து அவர்கள் ஆட்சிபுரிந்த காலமும் சேர்ந்ததேயாகுமென்க. இந்த இரண்டு அட்டவணை யிலும் காட்டிய அரசர்கள் கி.பி. 125-க்கும் 225-க்கும் இடையில் ஆண்டவர்க ளாதல் வேண்டும்.
சிலப்பதிகாரத்தில் ஈரிடங்களில் கயவாகுவின் பெயர்வந்துள்ளது. சிலப்பதிகாரத்திலுள்ள வஞ்சிக்காண்டத்தின் பாட்டுடைத்தலைவன் செங்குட்டுவன். ஆகவே செங்குட்டுவன் கயவாகுவின் காலத்தவன் என்பது தடையின்றித் துணியப்படும். இம்முடிபினையே டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் முதலிய ஆராய்ச்சியாளர் கைக்கொண்டனர். இங்கிலீஷ் மொழியில் ‘தமிழர் சரித்திரம்’ என நூல் எழுதிய பி.தி. ஸ்ரீனிவாச ஐயங்கார வர்கள் இக்கொள்கையை உதறித்தள்ளி சிலப்பதிகாரம் கயவாகு காலத்துக்குப் பிற்பட்டதெனச் சாதிக்க முயன்று கயவாகு என்பது எழுதுவோரால் பிழை யாக எழுதப்பட்டிருக்கலாமெனக் கூறினர். கால ஆராய்ச்சியைப் பற்றிய அக்கறை ஏற்படாத காலத்து ஏட்டுப் பிரதிகளைப் பிரதி செய்யும் போது ‘கயவாகு’ என்னும் பெயரை யாராவது வேண்டுமென்று நூலிற் புகுத்தி யிருப்பார்களா? அப்படிப் புகுத்தினும் பேரா. சுந்தரம்பிள்ளை அவர் காலத்து அல்லது அதற்குப் பின் இது நிகழ்ந்திருக்கவேண்டும். வான்மீகி இராமா யணம் தென்னிந்தியாவைக் குறிப்பிடும் பகுதி இடைச் செருகல் எனக் கூறுவதன் முடிபும் இப்படியே. தமிழ் நூல்களுக்குக் கூடிய வயதைக் கொடுக்கக்கூடாதென்பது சில சரித்திரகாரர் கோட்பாடு. ஆகவே அவர்கள் தங்கள் கொள்கைக்கேற்ப நியாயங்களைக் கண்டு பிடிப்பதில் தலையை உடைக்கின்றனர்.
பத்துப்பாட்டு உரை
முன்னுரை
சங்க நூல்களின் பொருள் புலவர்களுக்கும் எளிதில் விளங்குவதன்று. அதற்குக் காரணம் அந்நூல்கள் செய்யப்படுகின்ற காலத்து வழங்கிய சொற்களிற் பெரும்பாலான இன்று வழக்கு வீழ்ந்து விட்டமையேயாகும். பொருள் விளங்குதற் கருமையுடைய இந்நூல்கள் வித்துவான், பண்டிதர், புலவர்களால் மாத்திரம் பயிலப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் சங்க நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் பொருள்கள் எவை என்பதை அறியமாட்டார்கள். அவர்கள் சங்க நூற்பொருள்களை எளிதில் அறிந்து கொள்ளும் முறையில் அவற்றை உரைநடைப்படுத்த வேண்டுமென்னும் உணர்ச்சி இற்றைக்குப் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் நமது உள்ளத் தெழுந்தது. ஆகவே சங்க நூற்களிற் பலவற்றை உரைநடைப் படுத்தலாயி னேம். அவ் வுரைநடைகள் பெரிதும் பயனுடையன வென்று தமிழ் அறிஞர் தமது கருத்தைத் தெரிவித்தார்கள்; மாணவர் பலரும் அவ்வாறே அறிவித்த னர். இப்பதிப்பில் கூடியளவு வசனங்களைக் குறுக்கியும் கடிய சொற்களை நீக்கியும் உள்ளோம். நமது நூல் களைத் தமிழ் உலகு அறியுமாறு இந்நூலின் முதற்பதிப்பையும் பிற நூல்களையும் வெளியிட்ட ஒற்றுமை நிலையத் தலைவர் திரு எம். ஈ. வீரவாகு பிள்ளை அவர்களுக்கு எனது நன்றியும் கடப்பாடும் என்றும் உரியன.
ந. சி. கந்தையா.
சென்னை
10-3-1949
1. திருமுருகாற்றுப்படை
தோற்றுவாய்
முருகக்கடவுள் வீற்றிருக்கும் இடங்களிற் சென்று அவர் அருளைப் பெற்று மீள்கின்ற முருகனடியான் ஒருவன் முருகன் அருளைப் பெறுதற்குப் பக்குவம் வாய்ந்த ஒருவனை வழியிடத்தே எதிர்ப்பட்டுத், தான் சென்று அருள்பெற்ற வரலாற்றை அவனுக்கு எடுத்துக்கூறி அவனையும் முருகன் பாற் சென்று அவன் அருளைப் பெறுமாறு செலுத்துவதாக அமைந்துள்ளது இப்பாடல்.
“அகவற் பாவால் விறலிபாணர்
கூத்தர் பொருநர் நால்வரு ளொருவர்
பரிசிற்குப் போவாரைப் பரிசு
பெற்று வருவா ராற்றிடைக் கண்டு
தலைவன் கீர்த்தியுங் கொடையுங் கொற்றமும்
அறைவ தாற்றுப் படையா கும்மே”
திருமுருகாற்றுப்படை என்னும் பாடலைச் செய்தவர் கடைச்சங்கத் திறுதிக்காலத்தில் சங்கத்துக்குத் தலைமை தாங்கியிருந்த ஆசிரியர் நக்கீரனாராவார். அவர் காலம் கி. பி. 100-130. இக்காலக் கணக்கும் பின்னால் வருவனவும் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முந்திய தமிழர் என்னும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளபடி உள்ளன.
திருப்பரங்குன்றம்
(முருகன் அருள்பெற்றுமீளும் அடியவன் அக்கடவுளின் அருளைப் பெற விழைவுற்றிருக்கும் மற்றொரு அடியவனைப் பார்த்துக் கூறுகின்றான்:)
முருகக் கடவுளின் தோற்றம்
முருகக்கடவுள் குற்றமில்லாத கற்பினையுடைய தெய்வயானையாரின் கணவர். உலகிலுள்ள உயிர்கள் எல்லாம் மகிழும்படி ஞாயிறு மேருவை வலஞ்செய்யும். முருகக்கடவுள் அஞ்ஞாயிறு கடலிடத்தே தோன்றினாற் போன்று இடைவிடாது ஒளி செய்கின்ற திருமேனியையுடையர்; தம்மை அடைந்தாரது தீவினையைப் போக்கும் வலிய தாள்களுடையவர்; இடியை ஒத்த வலியும் பகைவரைஅழித்த ஆற்றலுமுடைய கைகளையுடையர்; கார் காலத்தில் கடல் நீரை வயிறு நிரம்பும்படி குடித்த முகில் ஞாயிறும் திங்களும் கிரணங்களை வீசும் ஆகாயத்தில் துளிகளைச் சிதறிக் காட்டில் முதல் மழையைப் பெய்யும். அதனால் காடு குளிர்ச்சியடையும். அக்குளிர்ந்த காட்டில் செங்கடம்பு இருண்டு தழைத்து வளரும். அதன் தேருருள் போன்ற மலர்களால் தொடுத்த மாலைகள் முருகக் கடவுளின் திருமார்பிற் கிடந்து அசையும்.
தெய்வமகளிர்
மூங்கில் தேவருலகைத் தொடும்படி மலையிடத்தே வளரும். அங்குத் தெய்வமகளிர் உறைவர். அவர்கள் விளங்குகின்ற தமது சிறிய பாதங்களில் சிறிய சதங்கைகளை அணிந்திருப்பர். அவர்களின் கால்கள் திரட்சியுடையன; இடை வளைந்து அசையும் தன்மையது; தோள்கள் பெருமையுடையன. அவர்கள் உடுத்திருக்கும் பட்டாடை தம்பலப் பூச்சி போன்று சிவந்த இயற்கை நிறமுடையது. அவர்கள் மணிகள் கோத்த வடங்களை அரை யிடத்தே அணிந்திருப்பர். அவர்களின் அழகு கையினால் அழகு செய்யப் படாது இயற்கை வனப்பு அமைந்துள்ளது. அவர்கள் அணிந்திருக்கும் அணி கலன்கள் சாம்பூநதமென்னும் உயர் செம்பொன்னினால் செய்யப் பட்டவை. அவர்களின் தூய நிறம் தூரத்தே விளங்கித் தோன்றும் ஒளியுடையது. இவ்வியல்பினராகிய தெய்வமகளிர் சோலையிடத்தே கூடுவார்கள்; நெய்பூசப் பெற்ற தமது மயிரில் சிவந்த காம்பை யுடைய வெட்சிப்பூவை விடு பூவாகத் தூவுவார்கள்; அவற்றின் நடுவே குவளை மலரின் இதழ்களைக் கிள்ளி விடு பூவாகத் தூவுவார்கள்; பொட்டிட்ட தமது நெற்றியில் சுறாவின் திறந்த வாய்போற் செய்த தலைக்கோலத்தை அணிவார்கள்;
1சீதேவியார் என்னும் தலைக் கோலத்துடனே வலம்புரிச் சங்கின் வடிவாகச் செய்த தலைக்கோலத்தையும் வைத்தற்குரிய இடத்தே வைப்பார்கள்; முடிய வேண்டிய வகையில் முடியப்பட்டுள்ள கொண்டையில் சண்பகப்பூவைச் செருகுவார்கள்; அதன்மேல் விளங்குகின்ற பூங்கொத்துக்களை வைப் பார்கள்; நீரின் கீழ் நின்று மேலே எழும் கிளைகள் நீட்டிய அரும்பினால் தொடுத்த மாலையைக் கொண்டையில் வளையமாகச் சுற்றுவார்கள்; இரு காதுகளிலும் அசோகந் தளிரைச் செருகுவார்கள்; அவை, அணிகலன்க ளணிந்த அவர்கள் மார்பிடத்தே கிடந்து அசையும். இவ்வாறு தம்மை அழகு செய்து கொண்ட தெய்வமகளிர் கோங்கின் மொட்டை ஒத்த தமது தனங் களிடத்தே சந்தனக் குழம்பை அப்புவார்கள். அச்சந்தனப்பூச்சு, மணமுள்ள மருதம் பூவை அப்பியது போலத் தோன்றும். சந்தனக் குழம்பின் ஈரம் உலர் வதன் முன் வேங்கைப் பூவின் தாதையும் அவர்கள் அதன்மேல் அப்பு வார்கள்; விளாமரத்தின் சிறிய தளிரைக் கிள்ளித் தப்பாமல் ஒருவர்மேல் ஒருவர் எறிந்து “கோழிஉயர்ந்த வெற்றிக்கொடி நெடிது வாழ்வதாக” என்று வாழ்த்தி மலை இடங்கள் எல்லாம் எதிரொலி செய்யும்படி பாடி ஆடுவார்கள்
முருகக் கடவுள் திருமுடியில் சூடிய செங்காந்தள் மாலை
அத்தெய்வமகளிர் இவ்வாறு ஆடல் பாடல் புரியும் சோலையை யுடைய மலையில் மரங்கள் நெருங்கி வளர்ந்திருக்கும்; ஆகவே மந்திகளும் அம்மரங்களில் ஏறி அறியா. இம்மர நெருக்கம் உடைய மலையிடத்துள்ள செங்காந்தள் மலரால் தொடுத்த மாலையை முருகக் கடவுள் திருமுடியில் சூடியிருப்பார்.
பேய்மகள்
முருகக் கடவுள் குதிரை முகத்தையும் மக்கள் யாக்கையையுமுடைய சூரபன்மாவோடு போர் செய்தார். அப்பொழுது சூரபன்மா கீழ் நோக்கிப் பூத்த கொத்துகளையுடைய மாமரவடிவாக மாயையினால் வடிவுகொண்டு நின்றான். அப்பொழுது முருகக்கடவுளின் செவ்வேல் விரைந்து சென்று அவனை அவனுடைய 1அறுவகைப் படைகளும் அஞ்சும்படி அழித்தது. அப்பொழுது பேய்மகள் வெற்றிக்களத்தைப் பாடித் தோளை அசைத்துத் 2துணங்கைக்கூத்து ஆடினாள். பேய்மகள் போர்க்களத்தில் அச்சந்தோன்றும் படி உலாவவும் விரும்பினாள். அவளது குறுகிய மயிர்கள் உலர்ந்தவை; பற்கள் தெற்றியவை; பசியகண்கள் கோபத்தாற் சுழல்வன; பார்வை அச்சம் விளைப்பது; காதுகள் மார்பு அளவும் நீண்டு அசைவன; அவை அச்சந்தரும் பாம்பும் பிதுங்கிய கண்களையுடைய ஆந்தையுமாகிய குண்டலங்களைப் பூண்டவை; உடல் சொரசொரப்புடையது; நடை கண்டோரால் அஞ்சத்தக்கது; கூரிய நகங்களுடைய வளைந்த விரல்கள் இரத்தம் அளைதலால் சிவப்பு ஏறப் பெற்றவை; கைகள், முடைநாற்றமுடையவும் கண்களைத் தோண்டி உண்ணப்பட்டனவுமாகிய கரிய தலைகளை ஏந்துவன; பெரிய வாய்கள் நிணந்தின்பன.
(இவ்வாறு பேய்மகள் வெற்றிக்களத்தே ஆடினாள்.) அவுணர் களுடைய வெற்றி அடங்கிற்று, கடல் நிலை குலைந்தது.
திருப்பரங்குன்றம்
பாடவல்ல புலவனே! இவ்வாறு பெருமை பெற்ற முருகக் கடவுளின் திருவருளைப்பெற நீ மிக விரும்புகின்றாயாயின், நீ அதனை இப்பொழுதே தப்பாமல் பெறுகுவை. அவர் எங்கு உறைவார் என நீ கேட்பாயாயின். அதனை யான் கூறுவேன் கேட்பாயாக. மதுரைமா நகரின் கோபுரவாயிலில் வெற்றிக்கொடி அசையும்; வரிந்து கட்டப்பட்ட பந்தும்பாவையும் அறுப்பாரின்றித் தொங்கும். நகரில் பல மாடங்களுடைய தெருக்களுண்டு. இவ்வகை அழகு வாய்ந்த மதுரைக்கு 3மேற்கே பெரிய நெல்வயல்கள் உண்டு. கரிய சேற்றினையுடைய அவ் வயல்களில் முறுக்கவிழ்ந்த தாமரை மலர்கள்மீது வண்டுக்கூட்டங்கள் இராப்பொழுதில் துயில்கொள்ளும்; விடியற்காலத்தில் தேன் மணக்கின்ற நெய்தற்பூவை ஊதும்; ஞாயிறு தோன் றியபின் சுனை மலரில் இருந்து ஆரவாரஞ் செய்யும் இவ்வகை அழகிய விடத்தேயுள்ள திருப்பரங்குன்றம் என்னும் கோயிலில் முருகக்கடவுள் எழுந்தருளியிருப்பார். (இது அவர் இருக்கும் வீடுகளுள் ஒன்றாகும்)
2. திருச்சீரலைவாய்1
முருகக் கடவுள் யானைமீது இருக்கும் தோற்றம்
முருகக்கடவுள் பிணிமுகம் என்னும் யானைமீது எழுந்தருளுவார். பிணிமுகம் என்னும் யானையின் நெற்றி அங்குசம் வெட்டுதலால் தழும்பு ஏறப்பெற்றது. நெற்றியில் பொன்னரிமாலையும் நெற்றிப்பட்டமும் கிடந்து அசையும்; இருபக்கங்களிலும் மணிகள் கிடந்து ஒலிக்கும். அதன் நடைபிற ரால் தடுத்தற் கரிய கடுமையுடைய தாதலின் கூற்றுவனை ஒக்கும். முருகக் கடவுள் அணிந்திருக்கும் 2ஐந்து வேறு வடிவுடைய முடிகளில் ஒளிவிடும் இரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவர் காதிலணிந்திருக்கும் பொற் குழைகள் மதியைச் சூழ்ந்து நீங்காத 3விண்மீன்களைப்போல் விளங்கும். அவரது திருமுகம் தவத்தை முடிப்பவர்களது உள்ளத்தில் விளங்கும் ஒளிபோல் விளங்கும்.
ஆறு முகங்களின் தொழில்கள்
முருகக் கடவுளின் ஒரு முகம் இருண்ட பெரிய உலகம் குற்றமின்றி விளங்கும் பொருட்டுப் பல கதிர்களைத் தோற்றுவிக்கும்; ஒரு முகம், அன்பர்கள் துதிக்க அதற்கு மகிழ்ந்து அவர்கள் வேண்டும் கருமங்களை முடித்துக்கொடுக்கும்; ஒரு முகம் அந்தணரது யாகங்களில் தீமை வராமற் காக்கும்; ஒரு முகம் மந்திரமுடைய வேதமுறையில் ஒழுகும் அந்தணரது யாகங்களில் தீமைவராமற் காக்கும்; ஒருமுகம் வேதத்தின் மறை பொருள் களை ஆராய்ந்த இருடிகள் மகிழும்படி அவற்றை உணர்த்தித் திங்கள் போலத் திசைகளை எல்லாம் விளக்குவிக்கும். ஒரு முகம் மாறுபட்டுப் போர்க் கெழுந்த பகைவரைக் கொன்று கோபித்த உள்ளத்தோடு போhக் களத்தை விரும்பும்; ஒரு முகம் குறவரின் இளமையுடைய மகளாகிய வள்ளி யுடன் மகிழ்ச்சியைப் பொருந்தும்.
பன்னிருகரங்கள் புரியும் தொழில்கள்
முருகக் கடவுளின் திருமார்பினின்று தோளளவும் உத்தம இலக்கண மாகிய மூன்று வரைகள் நீண்டு கிடக்கும். அவரது வலிய தோள்கள் பகைவர் மேல் படைக்கலங்களை எறிந்து மார்பைப்பிளந்து வாங்கும் பெருமை யுடையவை. அவர் திருக்கரங்களிலொன்று ஆகாயத்தே இயங்குகின்ற இருடிகளுக்கு அபயங்கொடுக்கும்; உயர்த்திய அக் கையின் இணைக்கை பக்கத்தே கிடக்கும்; ஒரு கை தொடைமீது ஆடைமேற் கிடக்கும்; ஒருகை யானையை அங்குசத்தால் செலுத்தும்;இரு கைகள் கரிய கேடகத்தையும் வேலையும் வலமாகச் சுழற்றும்; ஒருகை முனிவர்களுக்குத் தத்துவங்களைக் கூறி உரையிறந்த பொருளை உணர்த்தும் காலத்து மார்பிடத்து விளங்கும்; ஒருகை திருமாலையைத் திருத்தும்; ஒரு கை பாரவளையோடு சுழலும்; ஒருகை இனிய ஓசையுடன் ஆடுகின்ற மணியை ஒலிக்கும். ஒரு கை நீல ஆகாயத்தில் மிக்க மழையைப் பொழியும். ஒருகை இந்திரன் மகளாகிய தெய்வயானைக்கு மணமாலை சூட்டும். இவ்வகை பன்னிருகைகளும் ஆறு முகங்களுக்குப் பொருந்தும் வகை தொழில்புரியா நிற்கும்.
சீரலைவாயில் முருகக் கடவுள் எழுந்தருளும் தோற்றம்
ஆகாயத்தில் துந்துமி ஒலிக்கும். வயிரமுடைய கரியகொம்பு வாத்தியங்களும் வெண்சங்கும் முழங்கும். இடியேற்றின் இடிப்புப்போன்ற ஓசையுடைய முரசு அதிரும். பல புள்ளிகள் உள்ள இறகுகளுடைய மயில் வெற்றிக் கொடியிலிருந்து ஒலிக்கும். முருகக் கடவுள் இவ்வகைப் பல ஆர்ப்புடன் ஆகாயமே வழியாக விரைந்துசென்று மிக்க அழகுடைய சீரலை வாய் என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருப்பார். இதுவே அவரது நிலை பெற்ற குணமாகும்.
3. திரு ஆவினன்குடி1
முனிவர் தோற்றமும் இயல்பும்
திரு ஆவினன்குடியிலே முனிவோர் முருகக் கடவுளை வழிபடுவர். அவர்கள் தைத்துப் பொருந்திய மரவுரி உடையினர்; அவர்களின் நரைத்த முடிகள், வடிவு நிறம் அழகு முதலியவற்றால் வலம்புரிச் சங்கை ஒத்தவை. அவர்களின் உடம்பு நீராடுதலால் அழுக்கின்றி விளங்குவது. பட்டினியிருந்து விரதங் காத்தலால் அவர்கள் மார்பிடத்து என்புக் கோவைகள் தோன்றும்; அவர்களின் போர்வை பொருத்தித்தைத்த மான்தோலாகும்; அவர்கள் பல நாட்கள் பட்டினியிருப்பர்; வெறுப்பும் சினமும் அவரிடம் தோன்றுவதில்லை. அவர்களின் அறிவு எவ்வகைப் பொருளைக்கற்ற வல்லுநரும் அறியமுடியா தது. பலவற்றைக் கற்றார்க்கும் அவர் தலைமையாயிருக்குந் தன்மையர்; காமம், வெகுளி முதலியவை அவிந்த தோற்றத்தினர்; மெய்வருத்தம் உளவேனும் மனவருத்தம் சிறிதும் அறியாத இயல்பினர்.
நாற்பெருங்கடவுளர்
வெள்ளிய நச்சுப் பற்களையும் அழல்போன்ற மூச்சையுமுடைய பாம்பைச் சாக அடிக்கும் கருடனை ஊர்தியாகவும் கொடியாகவும் உடைய திருமால் காத்தற்றொழில் புரிவர். முப்புரத்தை அழித்த வெற்றியையும், மூன்று கண்களையும், இடபக்கொடியையும், பாகத்தே உமாதேவியாரையு முடைய உருத்திரன் அழித்தற்றொழில் புரிவர். நிலத்தில் தோய்கின்ற வளைந்த துதிக்கையினையும் நான்கு மருப்பினையுமுடைய ஐராவதமாகிய வாகனமும், ஆயிரம் கண்களுமுடைய இந்திரன் நூறு வேள்விகள் வேட்டு அதன் பயனால் பகைவரை அடக்கிய வெற்றியுமுடையன். முப்பத்துமூவர் என்னும்தேவர்குழுவினர் நான்குபிரிவினராவர். கந்தருவர் மெல்லிய வார்த்தையையும், முறுக்கவிழ்ந்த மலர் மாலைசூடிய மார்பையும், புகையைக் கையினாலள்ளினாற் போன்ற மாசேறாத உடையையும் யாழ்வாசிக்கும் திறமையையு முடையர். காந்தருவமகளிர் மக்களுக்குரிய நோயில்லாத உடம்பும், பொன்னுரை விளங்கினாற் போன்ற அழகிய தேமலும் மாந்தளிர் போன்று விளங்கும் நிறமும் உடையர்.
முருகக் கடவுள் ஆவினன் குடியில் வீற்றிருக்கும் தோற்றம்.
ஒரு காலத்தில் செருக்குற்றிருந்த பிரமனை முருகக் கடவுள் சிறையி லிட்டார். அக்காலத்துப் படைப்புத் தொழில் இல்லை ஆயிற்று. அதனால் திருமால் உருத்திரன் முதலானோர்க்குரிய காத்தல் அழித்தற் றொழில்களும் இல்லையாயின. தமக்குரிய காத்தல் அழித்தற் றொழில்களைப் பழமைபோல் பெறவிரும்பிய திருமாலும் உருத்திரனும் முருகக் கடவுளின் கோபத்தைத் தணித்துப் பிரமாவைச் சிறையினின்றும் மீட்க எண்ணினார்கள்; எண்ணி இந்திரன் பதினெண்கணங்கள் முப்பத்துமூவர் முதலிய தேவர்களுடன், விண்மீன்கள் போன்ற தோற்றமும், காற்றில் நெருப்புத்தோன்றினாலொத்த வலியும், இடி ஒத்த குரலும் உடையராய் அந்தரத்தே சுழன்று திரிந்தனர். கந்தருவர் தமது மகளிரோடு யாழ்வாசித்துப் பின்னே செல்ல முனிவர்கள் முன்னே சென்றனர். இவ்வகைத் தோற்றத்துடன் முருகக்கடவுள் தெய்வ யானையாருடன் ஆவினன் குடியில் எழுந்தருளுவர்.
4. திரு ஏரகம்1
அந்தணர் இயல்பு
அந்தணர் ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் ஆறு தொழில்களும் உடையர்; தூய மரபில் உதித்தோர்; நாற்பத் தெட்டு ஆண்டு பிரமசாரியங் காக்கும் இயல்பினர்; தருமத்தையே எந்நாளும் கூறும் கொள்கையர், நாற்சதுரம், முச்சதுரம், வில்வடிவமாகிய ஆகவனீயம், தக்கணாக்கினி, காருகபத்தியம் என்னும் முத்தீ ஓம்பும் செல்வமுடையர்; நூலணிதற்குமுன் ஒன்றும் அணிந்தபின் ஒன்றுமாகிய இருபிறப்புடையர்; நீராடுங்கால் தோய்த்த ஆடையைப் புலரும்படி உடுக்கும் இயல்பினர். இவ்வகைப் புனிதமுடைய அந்தணர் நறிய பூவைக் கையிலேந்தி, “நமோகும ராயா” என்னும் மந்திரத்தை நாப்புடையபெயர உச்சரித்து முருகக் கடவுளை வழிபடுவர். அதற்கு மகிழ்ந்து அவர் திரு ஏரகத்தில் எழுந்தருளுவர்.
5. குன்றுதோறாடல்
முருகக் கடவுள் குறமாதரோடு ஆடும் காட்சி
குன்றிடங்களில் வாழும் வேடர் வில்லாற் கொலைத் தொழில் புரியும் இயல்பினர்; தேனைப் புளிக்கவிட்டுச் செய்த கள்ளை மூங்கிற்குழாயிலிட்டு முற்றும்படி வைப்பர்; அக்கட்டெளிவை மலை உச்சியிலுள்ள சிறுகுடிச் சுற்றத்துடன் உண்டு களிப்பர்; தொண்டகப்பறை கொட்டிக் குரவை ஆடுவர். அதனைக்கண்ட பெண்மான் போன்ற சாயலையுடைய பெண்கள் தாமும் 1குரவையாடுவர். அதனைக் கண்ணுறும், கச்சினையும், தண்டையையும், சிறுவாத்தியங்களையும், கிடாயையும், மயிலையும், கோழிக் கொடியையும், நெடுமையையும், தோள்வளையையும், துகிலினையுமுடைய முருகக்கடவுள் தாமும் ஆடலை விரும்புவர்; விரும்பி மார்பிலே சந்தனம் பூசிய வேலன் என்னும் வெறியாட்டாளன் பச்சிலைக் கொடியையும், சாதிக்காயையும் இடை யிட்டுத் தக்கோலக்காய், காட்டு மல்லிகை, வெண்டாளி முதலியவற்றைக் கலந்து கட்டிய மாலையை அணிவர்; சிவந்த ஆடையை உடுத்து, அசோகந் தளிரைக் காதிற்செருகி யாழோசைபோலுங் குரலுடைய பாடுமகளிரோடு குன்றுகள்தோறும் சென்று 1குரவை ஆடும் குறத்தியர் கைகளைத் தழுவி, ஏந்தி, முன் கைகொடுத்து விளையாடுவர். இது முருகக் கடவுளுக்கு நிலை பெற்ற குணமாகும்.
6. பழமுதிர் சோலை2
முருகக் கடவுள் எழுந்தருளும் இடங்கள்
முருகக் கடவுள் தங்கியிருக்கும் இடங்களாவன: சிறுதினை அரிசியைப் பூவுடனே கலந்து வைத்து ஆட்டு மறியை அறுத்துக், கோழிக் கொடியை நிறுத்தி ஊர்கள் தோறும் கொண்டாடுகின்ற விழாக்கள், அன்பர்கள் துதித்து மனம் பொருந்தி இருக்கின்ற இடங்கள், வேலன் வெறியாடுகளம், காடு, சோலை, ஆற்றிடைக்குறை, பல ஊர்கள், நாற்சந்தி, முச்சந்தி, புதுப்பூவினையுடைய கடம்பு, ஊருக்கு நடுவே இருக்கும் மரத்தடி, ஆதீண்டு குற்றி முதலியன.
குறமாது முருக பூசை செய்யும் வகை
குறமாது அகன்ற நகரிடத்தே கோழிக் கொடியை நிறுத்துவாள்; நெய்யும் வெண்கடுகும் அப்புவாள்; வழிபடும் மந்திரங்களை உச்சரித்து அழகிய மலர்களைத் தூவுவாள்; மாறுபட்ட நிறமுடைய இரண்டு பட்டாடை களை உள்ளொன்றும் புறம் ஒன்றமாக உடுப்பாள்; சிவந்த நூலை கையிற் காப்பாகக் கட்டுவாள்; வெண்பொரியைத் தூவுவாள். இரத்தத்தோடு பிசைந்த வெள்ளரிசியைச் சிறுபலியாகத் தூவுவாள்; பச்சை மஞ்சளோடு வாசனை மிகுந்த சந்தனம் முதலியவற்றைத் தெளிப்பாள்; செவ்வலரி மாலைகளையும் பிறமாலைகளையும் ஒரேமட்டமாக அறுத்து அசையும்படி தூக்கி, “மலைப் பக்கத்துள்ள ஊர்களைப் பசியும் பிணியும் பகையும் வருத்தா தொழிக” என்று வாழ்த்துவாள்; நறிய புகை காட்டிக் குறிஞ்சிப் பண்பாடி மலை அருவியோடு பல வாத்தியங்கள் ஒலிக்கச் சிவந்த மலர்களைத் தூவி, இரத்தமளைந்த தினை அரிசியைப் பரப்பி முருகக்கடவுள் மகிழும்படி வாத்தியங்களை ஒலிக்கச் செய்து வழிபடுவாள். இவ்வாறு அச்சந்தரும் முருகபூசை செய்யப்படும் அகன்ற நகரிடத்தும் முருகக் கடவுள் உறைவார்.
வெறியாடுவோன் வெறியாடுகளம் ஒலிக்கும்படி பாடிப், பல கொம்பு களை ஊதி மணியை ஒலித்துப் பிணிமுகம் என்னும் யானையை வாழ்த்தி வேண்டினார் வேண்டிய வரங்களைப் பெறவேண்டுமென்று வழிபட முருகக் கடவுள் அவ்விடத்தில் எழுந்தருளுவார்.
பழமுதிர் சோலையின் இயற்கை வளம்
மலையிடத்தினின்றும் கொடிச் சீலைகளைப்போன்று ஆரவாரத் துடன் அருவிகள் குதித்தோடும். அவை அகில் மரத்தை அடித்துக் கொண்டு வரும்; சந்தன மரத்தைத் தள்ளும்; கிளைகள் அந்தரிக்கும்படி மூங்கிலின் வேர்களைக் கிளறும்; தேன்கூடுகளைக் கெடுத்துப் பலாச்சுளைகளை வாரிச் சுரபுன்னை மலரை உதிர்த்துப் பெண் குரங்கையும் ஆண் குரங்கையும் நடுங்கச் செய்யும்; பெண்யானைகள் குளிரால் வருந்தும்படி நீரைவீசி, பொன்னும் இரத்தினமும் ஒளிவிட்டு இலங்கும்படி குதித்து, பொன் பொடியைக் கரையில் வீசி, வாழை முறியவும் தெங்கின் இளநீர்க் குலைகள் உதிரவும் மோதும்; மிளகுக் கொடியின் கரிய பூங்கொத்துகளைச் சாய்த்து, மயில்களும், பேட்டுக் கோழிகளும் பயந்தோடச் செய்து, ஆண் பன்றிகளும் கரடிகளும் கல்அளைகளில் நுழையவும், கொம்புடைய காட்டுமாடு முழங்கவுஞ்செய்து ஆரவாரிக்கும். இவ்வகை அருவிகள் உடைய பழமுதிர் சோலையில் முருகக் கடவுள் அமர்ந்திருப்பார்.
முருகக்கடவுள் காட்சி அளித்து அருள் வழங்கும் தோற்றம்
யான் கூறிய அவ்வவ்விடங்களிலாயினும் பிறவிடங்களிலாயினும் முருகக்கடவுள் வீற்றிருப்பார். நீ அவரைக் காணும்போது கைகூப்பி வணங்கு. பின்பு பின்வருமாறு துதி: இமயமலையினுச்சியில் தருப்பை வளர்ந்த சுனை யில் அங்கியங்கடவுள் தன் உள்ளங்கையில் வாங்கி விட அருந்ததி அல்லாத அறுவராற் பெறப்பட்ட ஆறு வடிவு பொருந்திய செல்வனே! கல்லாலின் கீழிருக்கும் கடவுளின் புதல்வனே! பெரிய மலை அரையன் மகனே! பகைவர் கூற்றே! வெற்றி அளிப்பவளும் அணிகலன்களணிந்தவளுமாகிய காடு கிழாள் குழவியே! வளைந்த வில்லையுடைய தேவர் படைத்தலைவனே! எல்லா நூல்களையும் அறிந்த அறிவுடையோனே! போர்த் தொழிலில் நிகரில்லாதவனே! வெற்றியுடைய இளமைப் பருவத் தோனே! அருமறை யுணர்ந்த அந்தணர் செல்வனே! சான்றோர் புகழ்ந்து சொல்லும் சொற்களின் பொருளாயிருப்பவனே! தெய்வயானையாருக்கும் வள்ளியம்மையாருக்கும் கணவனே! வீரர்க்கு இடபமே! வேல் தாங்கிய கையையுடைய செல்வனே! கிரௌஞ்ச மலையைப் பிளந்த வெற்றி யுடையவனே! அமரருலகைத் தீண்டும் உயர்ந்த மலைகளை யுடைய குறிஞ்சி நிலத்துக் குரிமை உடைய வனே! கல்வியில் மதயானை போன்றவர்க்குச் சிங்க ஏறு போன்றவனே! பிறர்க்குப் பெறற்கரிய வீட்டினையுடைய முருகனே! வீடுபேற்றினைப்பெற விரும்பி வந்தவர்க்கு அதனை நுகர்வித்தலால் பெரிய புகழை ஆளுத லுடையவனே! பிறரால் வருத்தமுற்று வந்தோர்க்கு அருள் செய்யும் சேயே! பெரிய போர்களை முடித்து வென்று பகைவரைக் கொல்கின்ற நின்மார் பிடத்துப் பொன்னாபரணங்களை அணிந்த சேயே! இரந்து வந்தோரை வேண்டுவன கொடுத்துப் பாதுகாக்கும் நெடிய வேளே! தேவரும் முனிவரும் ஏத்தும் திருப்பெயரு யுடைய தலைவனே! போர் வலியால் சூரபன்மாவின் குலத்தை அழித்த மதவலி என்னும் பெயருடையவனே! இவ்வாறு நீ அறிந்த துதிகளைக் கூறிப் புகழ்ந்து பாடி, ஒப்பில்லாத மெய்ஞ்ஞானத்தை யுடையவனே! உமது தன்மைகளை எல்லாம் முற்ற அளவிடுதல் பல்லுயிர் களுக்கெல்லாம் அரிது ஆதலின் நின் பாததாமரைகளைப் பெற எண்ணி வந்தேன், என்று நீ கருதிய வீடுபேற்றை விண்ணப்பஞ் செய்வாயாக. உடனே முருகக் கடவுளைச் சேவித்து நிற்கின்ற வேறு வேறு வடிவினையுடைய குறுகிய பல பூதங்கள் தோன்றிப், “பெருமானே! நீ அருளத்தக்கவனாகிய அறிவு முதிர்ந்த புலவனொருவன் நின் புகழினை விரும்பிக் கேட்போர்க்கு உறுதி பயக்கும் இனிய பல வாழ்த்துரைகளைக் கூறி வந்தான்” என்று கூறும். அப்போது பழமுதிர் சோலையில் எழுந்தருளியிருக்கும் முருகக்கடவுள் அச்சந்தரும் தெய்வத் தன்மையை உள் அடக்கிக்கொண்டு தனது இளைய வடிவைக் காட்டி, “நீ வீடுபெற நினைந்து வந்த வரவை நான் முன்னமே அறிவேன்; அதனை நினைந்து எய்துதல் அரிது என்று அஞ்ச வேண்டாம்” என்று உன்மேல் அன்புடைய நல்வார்த்தைகளைப் பலகாலும் அருளிச் செய்வார். பின் இவ் வுலகில் நீ ஒருவனுமே பிறர்க்கு வீடளித்தற்கு உரியவ னாகத் தோன்றும்படி திருவருளாகிய பரிசிலைத் தந்தருளுவார்.
2. 1பொருநராற்றுப்படை
பாணன் ஒருவன் கொடை வழங்கும் வள்ளல்களைத்தேடி அலைந்து திரிகின்றான். அவன் பின்னே அவன் மனைவியாகிய விறலியும் கரிய பெரிய சுற்றத்தினராகிய சிறுவரும் செல்கின்றனர். அவர்கள் செல்கின்ற இடம் காட்டுவழி.
பாடினி சிறந்த அழகி. அவள் கூந்தல் ஆற்றின் கருமணல்போன்று இருண்டு நெளிந்தது; நெற்றி பிறைபோன்றது; புருவம் கொலைத்தொழி லுடைய வில்லை ஒப்ப வளைந்தது; அழகிய கடைகளுடைய கண்கள் குளிர்ந்த நீர்மையின; இனிய சொற்களை மிழற்றும் சிவந்தவாயோ இலவிதழ் போன்றது; பற்கள் முத்தை நிரைபட வைத்தாற் போன்றவை; மகரக்குழைகள் அசைந்து ஊசலாடும் காதுகள் கத்தரிகையின் குழைச்சுப்போல் அமைந்து அழகுறுவன; கழுத்தோ நாணம் வருத்துதலால் பிறரை நோக்காது முன் வளைந்திருக்கும் இயல்பினது; தோள்கள் பருத்துத் திரண்ட மூங்கில்போலத் திரண்டவை; அவர் முன்கையில் ஐதமயிருண்டு; அவள் விரல்கள் உயர்ந்த மலைகளில் வளரும் காந்தட்பூப் போன்றவை; நகங்கள் கிளியின் அலகு போல் சிவந்து விளங்குவன; தனங்கள் சுணங்கணிந்து ஈர்க்கிடை போகாத எழுச்சியும் அழகுமுடையன; கொப்பூழ் நீர்ச்சுழி போன்றது; இடை உண்டு என்று பிறரால் அறிய முடியாது ஒடுங்கி அசையும் இயல்பினது; அரை பல மணிகள் கோத்த மேகலாபரணம் அணியப் பெற்றது; துடைகள் பெண்யானை யின் தும்பிக்கைபோன்று திரட்சியுடையன; அடிகள் ஓடி இளைத்த நாயின் நாக்குப் போன்றன; வாய் மயிர் ஒழுங்கு பெற்ற கணைக்காலுக்குப் பொருத்த மானவை.
பாடினி யாழ் வாசித்துத் தெய்வத்தைத் துதித்தல்
இவ்வாறு பேரழகு வாய்ந்த பாடினி, சாதிலிங்கம் உருக்கி வார்த்தாற் போன்று சிவந்த நிலத்திலே நண்பகல் வெய்யிலில் நடந்து செல்கின்றாள்; கால்களில் கூரிய சுக்கான்கற்கள் உறுத்துகின்றன; அதனால் பன்னைப் பழம் போன்று கால்களிற் கொப்புளங்கள் உண்டாகின்றன. அவள் மேலும் நடத்தற்கு இயலாதவளாகின்றாள். யானைகள் உலாவுகின்ற காட்டுப்பாதை யின் ஓரத்தே இலைகள் உதிர்த்த மராமரம் நிற்கின்றது. அதன் நிழல் வலை விரித்தது போன்ற ஐதாகக் காணப்படுகின்றது. அந் நிழலில் பாடினி சிறிது தங்கி இருந்து இளைப்பாறுகின்றாள். அவள் தனது பாலையாழை எடுக்கின் றாள். அங்கு உறையும் தெய்வங்கள் மகிழும்படி நரம்புகளைவாரியும், வடித்தும், உந்தியும், உறழ்ந்தும் தெய்வங்களைத் துதிக்கும் பாடல்களைப் பாடுகின்றாள்.
யாழின் வடிவு
அப் பாலையாழின் 1பத்தர் மானின் குளம்பு அழுத்தின இடம் போன்று இரண்டருகுந் தாழ்ந்து நடு உயர்ந்துள்ளது. இரண்டு தலையும் கூட்டித் தைக்கப்பெற்ற போர்வை பொன்னிறத் தோலினாலானது. இரண்டு பத்தருஞ் சேர்வதற்குக் கடாவிய ஆணிகள் நண்டின் கண் போன்றவை; வாய் எட்டாநாள் திங்கள்போன்று உண்ணாக்கில்லாதது; கரிய தண்டு பாம்பு தலையை நீட்டினாற்போன்ற தோற்றமுடையது. வார்க்கட்டுக்கள் பெண்கள் கையிலணியும் வளையல்கள் போன்றவை. விரலால் அலைத்து வாசிக்கப்படும் நரம்புகள் தினையின் குற்றலரிசி போன்றவை.
பரிசில் பெற்றுவரும் பாணன் பொருநனை எதிர்ப்படல்
இவ்வாறு பாணன் விறலியுடனும் தனது சுற்றத்துடனும் இளைப்பாறி யிருக்க அவ்வழியே இன்னோர் பாணன் தனது சுற்றத்தோடு வருகின்றான். அவன் கரிகாற் பெருவளத்தானைப் பாடிப் பரிசில் பெற்று வருகின்றவ னாவன். வறுமையால் மெலிவுற்றிருக்கின்ற பாணனை அவன் நோக்கிக் கூறுகின்றான்.
விழாக் கொண்டாடுங்காலத்துச் சுற்றத்துடன் மிகுந்த சோற்றை உண்டு மகிழ்ந்தும் அது கழிந்தபின் பிறி தோர்விழாக் கொண்டாடும் ஊரை அடைந்தும் திரிகின்ற பொருநனே! யாழையுடைய கூத்தருக்குத் தலைவனே! பிறர் புகழை அரசர் சபையில் உயர்வடைவிக்க வல்ல வனே! யான் கூறுகின்றவற்றை விரும்பிக் கேட்பாயாக. வழி அறியாமையால் இவ்வழியைத் தப்பி வேறொரு வழியிற் சென்று விடாதே. இவ் வழியிடத்தே நீ என்னைக் கண்டது நீ முற்பிறப்பிற் செய்த நல்வினையின் விளைவாகும். உன்னையும் உனது கரிய சுற்றத்தையும் என்றும் வருத்துகின்ற பசியைப் போக்கிக்கொள்ள விரும்புகின்றாயாயின் விரைவில் எழுந்திரு. யானும் பழ மரங்களைத் தேடி அலையும் பறவைகளைப்போலப் பரிசில் தருவாரைத் தேடி அலைந்தேன்.
தன்னைக் கரிகால் வளவன் வரவேற்றுப் பரிசில் வழங்கிய வகையினைப் பாணன் எடுத்து மொழிதல்
ஒரு நாள் கரிகாற் சோழனது ஆரவாரமிக்க கோபுரவாயிலை அடைந்தேன்; வாயில் காப்போ னிடமுங் கூறாது உள்ளே சென்றேன். செல்கின்ற மகிழ்ச்சியினால் எனது இளைப்பு நீங்கிற்று. எனது உடுக்கையின் கண்கள் கைபடுதலினால் பாம்பின் படத்திலுள்ள பொறிகள் போன்ற தழும்புகள் பெற் றிருந்தன. நான் அதனிடத்தே இரட்டைத் தாளத்தைப் பிறப்பித்து எனது வறுமை தீரும்படி ஒரு பாட்டுப் பாடினேன். அப்போது விடிவெள்ளியின் வெளிச்சம் தோன்றும் விடியற்காலம்.
உடனே அரசன் உறவினரைப்போலத் தன்னிடத்தில் நான் உறவு கொள்ளும்படி பல முகமன் மொழிகள் கூறினான்; தான் எப்பொழுதும் பார்க்கக்கூடிய அண்மையில் என்னை இருக்கும்படி செய்தான்; என்னை அன்புடன் பார்த்தான்; அப்பார்வையால் எனது எலும்புகள் உருகும்படி குளிர்ந்தன; எனது ஆடையில் ஈரும் பேனும் இருந்து ஆட்சி செய்தன; அது பல தையல்களிடப் பட்டதாயும் வியர்வையால் நனைந்ததாயும் இருந்தது. அவன் எனது பழைய ஆடையைக் களையும்படி செய்தான். அதற்குப் பதில் நூல்போனவிடம் எது என்று அறிய முடியாத நுண்மையுடையதும், பூ வேலைப்பாடுடையதுமாகிய பாட்டாடையை உடுக்கும்படி தந்தான். அரண் மனையிலே அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்கள் இருந்தார்கள். அவர்கள் பாட்டாலும் கூத்தாலும் அரசனை மகிழ்வித்தார்கள். அவர்கள் பொன் கிண்ணத்தில் 1கள்ளை வார்த்துத் தந்தார்கள்; அவர்கள் தரத்தர வழி நடந்த வருத்தம் தீரும் படி அதனை நிறைய உண்டேன்; உண்டதனால் இது வரையும் கள்ளுண்ண வில்லையே என்னும் வருத்தத்தைப் போக்கினேன். மாலைக் காலத்தில் களிப்பு மிகுந்தவனாய் அரண்மனையின் ஒரு புறத்தில் தங்கினேன்;
தவஞ் செய்வார் தமது உடம்பை அழியவிடாது அத்தவத்தாற் பெறும் பயனைப் பெறுவதுபோல வழி நடந்த வருத்தம் சிறிதும் இல்லாமல் போக்கினேன். கள் ளுண்டதனால் உண்டான மெய்வருத்தமல்லாது வேறு வருத்தம் யாதுமின்றி நித்திரை விட்டெழுந்தேன். அரசனைக் காண்பதற்கு முதல்நாள் சொல்லுக் கடங்காத வறுமையுடையவனாயிருந்தேன். அரசனைக் கண்ட மற்ற நாட் காலையில் என்னைக் கண்டோர், நேற்று வந்தவன் இவனல்லன் என ஐயுற்ற னர்.
நான் பலவகை நறுமணப் பொருள்களை உடலிற் பூசியிருந்தேன்; அதனால் வண்டுகள் இடையறாது என்னை மொய்த்தன. இது கனவாயிருக் கலாமென்று நினைத்தேன். இது கனவன்று நனவு என்று எனது நெஞ்சு துணிந்து சொல்லிற்று. கொடிய வறுமையால் வருந்திய எனது சுற்றத்தினர் மகிழ்ச்சி யடைந்தனர். “இப்பொழுது மாறுதலடைந்திருந்த போதும் நேற்று வந்த இரவலனே நீ” என்று என்னுடன் வந்த இளைஞர் சொன்னார்கள். அதனைக் கேட்ட அரசன் அவர்களைக் காவலாளர்கள் மூலம் அழைத்து அவர்களுக்குச் செய்யும் முறைமைகளைச் செய்தனுப்பினான். யானும் என் சுற்றத்தினரும் புல்லாற்றிரித்த பழுதையைத் தின்று வளர்ந்த செம்மறிக்கிடா யின் புழுக்கிய இறைச்சியை உண்டோம்; இரும்புக்கம்பியில் கோத்துப் பொரித்த கொழுத்த இறைச்சிப் பொரியலை வாயின் இடப்புறத்தும் வலப் புறத்தும் சேர்த்தி ஆற்றி உண்டு களித்தோம்.
இவ்வாறு இறைச்சிப் பொரி யலையும் இறைச்சிப் புழுக்கலையும் உண்டு அலுத்தோம். இன்னும் பல வடி வினையுடைய பலகாரங்களையும் உண்டோம். கள்ளுண்டு பல நாட்களைக் கழித்தோம். நீங்கள் சோறும் உண்ணுதல் வேண்டும், என்று கூறி முல்லை முகை போன்ற சோற்றையும் பொரிக் கறியையும் கழுத்துவரையும் நிரம்பும் படி அரசன் உண்ணத்தந்தான். பகலு மிரவும் இறைச்சியைத் தின்றதனால் எங்கள் பற்கள் கொல்லை நிலத்தை உழுதகொழுப்போல முனை மழுங்கிப் போயின. இளைப்பாற நேரமின்றி உணவுகளை உண்டு வெறுத்தோம். நாங்கள் நமது ஊருக்குச் செல்லுதல் வேண்டுமென ஒருநாள் அவனிடத்தில் மெதுவாகக் கூறினோம். அதைக் கேட்டுக் கோபித்தவன்போல் அவன் யாம் வருந்தும்படி பார்த்து, “எமது கூட்டத்தை விட்டுப் போகின்றீரோ” எனக் கூறினான். அவன் யானைகளைக் கன்றுகளுடன் கொடுத்தான்; இன்னும் ஊர்திகள், ஆடைகள், அணிகலன்கள் முதலியவற்றையும் தந்தான். அவற்றை வாரிக்கொண்டு இனி எக்காலமும் எமக்கு வறுமை இல்லையாகும்படி நாம் வருகின்றோம்.
கரிகாலனின் சிறப்புக்கள்
இரவலனே! கரிகாற் பெருவளத்தானின் சிறப்புக்கள் சிலவற்றைக் கூறு கின்றேன் கேள்! அவன் முருகக் கடவுளின் சீற்றம்போன்ற கோபமுடைய வன். அவன் தாய் வயிற்றிலிருந்தே அரசுரிமையைப் பெற்றுப் பிறந்தான். தவழுங்காலம் தொட்டே அவன் மிக வலிமை பெற்றிருந்தான். அவன் ஆத்தி மாலையைத் தரித்திருப்பான். பனங்குருத்தினாற் கட்டிய மாலையணிந்த சேரனையும், அரத்தின்வாய் போன்ற வேப்பிலையாற் றொடுத்த மாலையைத் தலையிலணிந்த பாண்டியனையும் அவன் வெண்ணி என்னும் போர்க் களத்தே பொருது வென்றான்.
இரவலனே! அவன்முன் நீ உனது சுற்றத்துடன் உனது வறுமை தோன்றும்படி நிற்பாயாயின் கற்றா தனது கன்றுக்குப் பால் சுரந்து கொடுக்க விரும்புவது போல அவன் உங்கள் வறுமை நீங்கப் போதுமான பரிசில் தருவான்; உங்கள் பாடல்களைக் கேட்பதன்முன் கொட்டைப் பாசியின் வேர் போல அழுக்கையும் தையல்களையுமுடைய உங்கள் துணிகளைக் களையும் படி செய்வான்; சிறு குஞ்சங்களைக் கரையிலுடைய பட்டாடைகளை உடுக்கும்படி தருவான்; பூமணங் கமழ்கின்ற காரமுள்ள கள்ளைப் போதும் போதும் என்னும்படி பொன் வள்ளத்தில் வார்த்து நாள்தோறும் நல்குவான்; பாடினியின் சுருண்ட மயிரிடத்தே பொற்றாமரை மலரைச் சூட்டுவான்; அணிந்துகொள்வதற்குப் பொன்னரி மாலையையும் முத்துமாலையையும் கொடுப்பான். யானைத் தந்தத்தினால் செய்த தாமரை முகையினையுடைய தேரில் நான்கு குதிரைகளைப்பூட்டி அதில் உன்னை ஏற்றி ஏழடி பின் சென்று வழிவிடுவான்; பின் “நிலையில்லா உலகத்துப் புகழை நினைந்து நீ பெற்ற பரிசிலைப் பிறர்க்குங் கொடுத்துச் செல்லுதி” எனக் கூறிப் பல மருத நிலத்து ஊர்களையும், பல யானைகளையுந் தருவான்.
சோழநாட்டு வளம்
சோழநாடு மிக்க செழிப்புடையது. திடர்கள் தோறும் நெற்கூடுகள் (குதிர்)கிடக்கும். மக்கள் தென்னஞ் சோலைகளின் நடுவே வீடுகளமைத்து வாழ்வர். காக்கைகள் இரத்தம் அளைந்த சோற்றை உண்ணும்; உண்டு வீட்டைச் சூழ்ந்த நொச்சிச் செடியின் நிழலிற் பொரித்த ஆமைப்பார்ப்புகளை எடுத்துப் பசிக்கும் போது உண்பதற்கு மறைத்துவைக்கும். கடற்கரை மணற் குன்றுகளில் உழத்தியர் வண்டல் இழைத்து விளையாடுவர். பாகற் பழத்தை யும் பலாப்பழத்தையும் தின்ற மயிற் சேவல்கள் வளைந்த காஞ்சி மரத்திலும் மருதிலும் இருந்து பெடைகள் அழைக்கும்போது பறந்து செல்லும்; சென்று யாழின் ஓசை போன்ற வண்டின் பாடலைக் கேட்டு அதற்குப் பொருந்த நிலவுபோன்ற மணலில் நின்று ஆடும்.
நாட்டிலே கரும்பும் நெல்லும் செழித்துவளரும்; அடும்பும் பகன்றையும், புன்கும், ஞாழலும் ஏனைய மரங்களும் நெருங்கி நிற்கும். அங்குறைவோர் நாட்டு வாழ்க்கையை வெறுத்தாராயின் நீல நிறமுடைய முல்லைக் கொடிபடர்ந்த காடு சார்ந்த நிலத்தே சென்று வாழ்வர். அங்குத் தளவும், முல்லையும், தேற்றாவும், கொன்றையும் காயாவுமாகிய மரஞ் செடிகொடிகள் தழைத்து நிற்கும். முல்லை மருத நிலத்து வாழ்வோர் அங்கு வாழ்தலை வெறுத்தாராயின் வேறு நிலத்தே சென்று வாழ்வர். கடலிடத்தே இறால் மீனைத் தின்ற நாரை புன்னைக் கொம்பில் வந்து தங்கும்; பின்பு புன்னை மரத்தின்மீது கடல் சிந்துகின்ற நீரின் ஆரவாரத்துக்குப் பயந்து எழுந்து வாழை மரத்தில் தங்கும்.
கடற்கரை ஊர்களிலே குலைகளையுடைய தெங்குகளும், குலைக்கமுகும், குலைவாழைகளும், பூக்கள் மலர்ந்த சுரபுன்னையும் காட்சி அளிக்கும். அவற்றின் செறிவிலே பேராந்தைகள் உறையும். அங்கு உறையும் பரதவர் நெய்தல் நிலத்தை வெறுத்தார்களானால் குறிஞ்சி நிலத்தே சென்று வாழ்வர்; தேனும் கிழங்கும் விற்ற குறிஞ்சி நில மக்கள் மீனின் நெய்யோடு கள்ளையும் பண்டமாற்றுச் செய்து போவர். மருத நிலத்து வீடுகளில் நிற்கும் கோழிகள் தினையை உண்ணும். மலையிடத்தே திரிகின்ற மந்திகள் உப்பங்கழியில் மூழ்கும்; கழியிலிருந்து எழும்பிய நாரைகள் மலையிடத்துத் தங்கும். இவ்வகை நான்கு நிலங்களும் மயங்கி இருக்கும் உலகத்துக்கு அருள் செய்தற்குச் செங்கோலை எடுத்த தலைவன் வாழ்வானாக!
வெய்யிலின் வெப்ப மிகுதியால் தாமரையும் குல்லையும் தீயும்; மரக் கொம்பர்கள் கரியும்; மலையிடத்து அருவிகள் வறளும்; மேகங்கள் கடல்நீரை முகத்தல் செய்யா. இவ்வகையான வறட்சிக் காலத்தும் நுரையைத் தலையிலுடைய காவிரிநீர் நறைக் கொடியையும், நரந்தம் புல்லையும், அகிலையும், சந்தனமரத்தையும் நீராடும் துறைகள்தோறும் தள்ளிக் குளத்தி லும் மருதநிலத் தூர்களிலும் புகும். நீராடு மகளிர் நீர் விளையாடுவர். நெல் அறுப்போர் அரிவாளால் அரிந்த நெற்போரினை மலைபோல் உயரும்படி அடுக்குவர். உழவர் தினமும் கடாவிட்டுப் போரினை உழக்கி நெல்லைத் திரட்டுவர்; திரட்டிய நெல்லைக் குதிர்கள் நிறையும்படி கொட்டுவர். வரம்பு களையுடைய வேலிநிலத்தில் ஆயிரம் கலம் நெல் விளையும். கரிகாற் பெருவளத்தான் இவ்வாறு வளம் பொருந்திய காவிரி நாட்டுக்குத் தலைவன். (இரவலனே! நீ காலந்தாழாது இப்பொழுதே அவன்பாற் சென்று பாடி உனதும் உனது சுற்றத்தினரதும் வறுமையைக் கடிதிற்போக்கி இனிது வாழ்வாயாக.)
3. 1சிறுபாணாற்றுப்படை
முதுவேனிற் காலம்
மூங்கிலைத் தோளாகவுடைய நிலமகளுக்கு மலைகள் மார்பிடத்தே பொருந்திய பெரிய தனங்களாகும். மலை உச்சியினின்றும் இறங்கி ஆற்றிடைக் குறைகளில் பிளவுபட்டுப் பின் ஒன்று சேர்ந்து செல்லும் காட்டாறு அவ்வழகிய தனங்களில் அணியப்படும் முத்து வடமாகும். காட்டாற்றினால் குளிர்ச்சியடைந்த மரங்கள் மலர்களை நிறையப் பூக்கும். குயில்கள் அலகினால் கோதுதலால் உதிர்ந்த பூக்கள் உலர்ந்து கருமை அடைந்திருக்கும்; அத்தோற்றம் இளவேனிலாகிய மாது தனது கூந்தலை விரித்தாற் போன்றது. காட்டிடத்தே வேல்போற் கூரிய பருக்கைக் கற்கள் கிடக்கும்; முதுவேனிற் காலத்தில் வெயிலால் வெப்பமடைந்த அவை வழி நடப்போரின் கால்களைக் கிழிக்கும்; ஆகவே அவர்கள் மென்மையாக நடந்து கடப்பமர நிழலில் இருந்து இளைப்பாறிப் போவர். முதுவேனிற் காலம் ஞாயிற்றின் வெப்பத்தால் பாலைத்தன்மை உடையதாயிருக்கும். பாலைத் தன்மையாவது காலையும் மாலையும் நண்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவல் மாறி நீரும் நிழலுமின்றி நிலம் பயந்துறந்து புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெருகுவதொரு காலம்.
விறலியின் தோற்றம்
இவ்வாறு பாலைத்தன்மையுடைய காட்டுவழியே, அழகிய முல்லை சூடுதற்கமைந்த கற்புடைய விறலி நடத்தலினால் களைப்படைந்து கடம்பமர நிழலில் தங்கி இருக்கின்றாள். அவளுடைய நோக்கு மான் போல் மருண்ட தன்மையுடையது; கூந்தல் கருமையுடையது; அடிகள் ஓடி இளைத்த நாயின் நாக்குப் போன்றவை; வாழைத்தண்டுபோற் பருத்து ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடைகள் யானையின் துதிக்கை போன்றவை; கொண்டை வாழைப் பொத்தி போன்றது; அங்கு தேமல் படர்ந்த தனங்கள் கோங்கின் முகை போன்றவை; பற்கள் அழகு வாய்ந்தவை.
பாணன்
பாணன் பொற்கம்பி போன்று முறுக்கிய நரம்புடைய சீறியாழை இடப் பக்கத்தே தழுவி நட்ட பாடை என்னும் பண்ணை வாசிக்கின்றான். பரிசில் அளிக்கும் வள்ளல்களைப் பெறாமல் காட்டிடத்தே இப்பாணன் இவ்வாறு இருந்து வருந்தும் போது, நல்லிக் கோடனைப் பாடிப் பரிசில் பெற்று மீள்கின்ற ஒரு பாணன் அவனை எதிர்ப்பட்டுக் கூறுகின்றான்:
சேர நாட்டின் செழுமை
பாணர் தலைவனே! மேற்கே உள்ள சேரநாடு மிக்க செழிப்புடையது. அங்கு எருமைகள் கொழுத்த மீன்கள் நொறுங்கும்படி வயல்களில் நடந்துசென்று செங்கழுநீர்ப் பூவை உண்ணும்; உண்டு மிளகு படர்ந்த பலாமர நிழலில் காட்டு மல்லிகையாகிய படுக்கையில் கிடக்கும்; காற்றுக்குக் கொடி அசையும்; மஞ்சளின் மெல்லிய இலைகள் அதன் முதுகைத் தடவும்; இவ்வாறு கிடந்து அது தான் உண்ட செங்கழுநீர்ப்பூவைத்தேன் நாறும்படி மென்று அசையிட்டுத் துயில்கொள்ளும். இவ்வாறு செழுமை மிகுந்த நாடுகளை யும், வலிய தோளினையும், ஓடுகின்ற தேரினையுமுடைய சேரனது வஞ்சிமூதூரில் கிடைக்கும் பரிசிலோ நல்லியக் கோடன் கொடுக்கும் பரிசிலைவிடக் குறைவுடையது.
கொற்கை நகரின் வளம்
தெற்கே உள்ள கொற்கை நகருக்குத் தலைவன் பாண்டியன். அந்நகர் திரை கொழிக்கும் கடலை எல்லையாகவுடையது. கடற்கரைகளிலிருந்து உப்பு வாணிகரின் வண்டிகள் செல்லும். 1அவ்வண்டிகளின் அச்சுத்தங்கும் குடங்கள் தாது பனிக்கின்ற பூக்களுடைய முற்றிய நுணாத்தடியை உளியினால் கடைந்து செய்து செவ்வரக்கு பூசப்பட்டவை. கிடேச்சையால் செய்த பூமாலையை செவியடியில் நெற்றிமாலையாக அணியப் பெற்ற வலிய எருதுகள் வண்டியை இழுத்துச் செல்லும். உப்பு வாணிகர் பிள்ளைகளைப் போல வளர்க்கின்ற குரங்குகள் வண்டிகளோடு வரும். உப்பு வாணிகரின் குழந்தைகள் பெண்களின் பற்கள் போன்ற வெள்ளிய முத்தையும் வாள்போன்ற கிளிஞ்சிலையும் 2அரையிலே ஆபரணமாக அணிந்திருப்பர். அக்குழந்தைகளோடு மந்திகள் கிலுகிலுப்பையைக் கையில் வைத்துக் கிலுக்கி விளையாடும். தமது கணவரைத் தழுவும் உமட்டியர் கூந்தலை ஐந்து வகையாகக் கோதி முடிந்திருப்பர். இவ்வாறு சிறப்புடைய கொற்கை நகரை யும் வெண்கொற்றக் குடையையும் தேரையும் முத்து மாலையையுமுடைய பாண்டியனிடத்திற் சென்று பெறும் பரிசிலிலும் பார்க்க நல்லியக்கோடனிடம் பெறும் பரிசில் பெரியதாகும்.
சோழ நாட்டின் சிறப்பு
சோழநாட்டிலுள்ள மருத நிலத்தே மலைபோல வளர்ந்த கடம்ப மரங்கள் நெருக்கமாகப் பூத்திருக்கும். அம்பூக்களின் தம்பலப் பூச்சிகளைப் போன்ற தாது உதிர்ந்து பரந்திருத்தலால் நீருண்ணும் துறையின் கரை ஓவியம் போல் அழகு பெற்று விளங்கும். அத்துறையிடத்தே மலர்ந்திருக்கும் தாமரை மலராகிய பீடத்தில் தும்பிகள் தமது பெடையைத் தழுவி மகிழ்ந்திருந்து ‘சீகாமரம்’ என்னும் பண்ணைப்பாடும். கிழக்குப் பக்கத்தே இவ்வாறு செழிப்பு மிக்குள்ள நாட்டுக்குத் தலைவனாகிய சோழன் தூங்கெயில் எறிந்த வீரவளை விளங்கும் கையுடையன். அவ்வரசனது உறந்தை நகரிற் சென்று பெறும் பரிசில் நல்லியக் கோடனிடம் பெறும் பரிசிலைவிடச் சிறியதாகும்.
பருவம் பொய்யாது மழை பெய்தலால். செல்வமிகுந்த மலைப் பக்கத்தே திரியும் மயில் கூவியதைக் கேட்ட பேகன் என்னும் வள்ளல் அது குளிர் மிகுதியால் கூவுகின்றது என எண்ணித் தனது போர்வையை அதற்கு அளித்தான். சிறிய பூக்களையுடைய முல்லைக் கொடி, சிறுபுன்னையின் நறியபூ தேன் துளிக்கின்ற வழியிடத்தே கொழுகொம் பின்றிக் கொழுந்து எறிந்து நின்றது. அதனைக் கண்ட பறம்புமலைக்குத் தலைவனாகிய பாரி அது படர்தற்குத் தனது தேரைக் கொடுத்தான்.
கொடைப் பெரும் வள்ளல் எழுவர்
காரி என்னும் வள்ளல் மணியையும் தலையாட்டத்தையு முடைய குதிரையோடு தனது நாட்டையும் இரப்பவர்க்குக் கொடுத்தான். ஆய் என்னும் வள்ளல் பாம்பு ஈன்று கொடுத்த ஒளியுடைய நீலப் பட்டாடையை ஆலின் கீழ் அமர்ந்த கடவுளுக்கு அன்பு மிகுதியால் கொடுத்தான்.
இளமையைக் கொடுத்தலின் அமிழ்தத்தின் தன்மையுடைய நெல்லிக்கனியைக் கமுகம் பூக்களுடைய பக்கமலையினின்று பெற்ற அதிகன் அதனை ஒளவையாருக்கு அளித்தான். நள்ளி என்னும் வள்ளல் தன்னை நட்புச் செய்தோர் மகிழ்ந்து இல்லறம் நடத்துதற்கு வேண்டும் பொருள்களை அவர்க்கு நாடோறும் நல்கினான்.
காரி என்னும் குதிரையைப் பெற்ற காரி என்னும் வள்ளலுடன் போர் செய்த ஓரி என்னும் வள்ளல் முதிர்ந்த சுரபுன்னையும் குறிய மலைகளு முடைய நல்லநாடுகளைக் கூத்தாடுவோருக்குக் கொடுத்தான்.
நல்லியக் கோடனின் ஓங்கு புகழ்
பாணர் தலைவ! இவ்வெழுவருடைய கொடைகளையும் தாங்கி நிற்கும் ஒருவனாகிய நல்லியக் கோடனிடத்து நீ உனது சுற்றத்துடன் செல்வா யாக. அவன் பகைவரது மார்பிலும் முகத்திலும் வெட்டின வீரவாளையும், புலிபோன்ற வலிமையையு முடையன்; ஓவியர் குடியில் உதித்தோன். நறும் பூக்களையுடைய சுரபுன்னையையும், அகிலையும், சந்தனமரத்தையும் நீராடுந் துறையில் புனலாடும் மகளிர்க்குத் தெப்பமாகத் தருகின்ற நீர்மோதும் மாவிலங்கையின் அரசர் தோன்றுதற்கு இடனாயுள்ள ஓவியர் குடியிற் பிறந்தோன். அவனது பின்னிடாத அடிகளில் வீரக்கழல் கிடந்து அசையும்; மழைபோன்று வழங்குகின்ற அவன் கைகளோ கூத்தரை வரவேற்றுப் பிடிகளைக் கொடுக்கும்.
பரிசில் பெற முன் இரவலனின் வறுமை
இரவலனே! யாங்கள் நல்லியக்கோடனையும் அவன் தந்தையின் மலையிடத்தேயுள்ள செல்வத்தையும் பாடிச் சென்றேம். அப்பொழுது நமது வறுமை சொல்லுக்கடங்காததாக விருந்தது. நமது வீட்டில் தாயின் முலை உண்ணாமல் இருக்கமாட்டாத நாய்க்குட்டிகள் பசி மிகுதியால் சத்தமிட்டன. அடுக்களையின் இறப்புத் தடிகள் கட்டறுந்து கீழே விழுந்தன. சுவரில் எழுந்த கறையான் வீட்டின் வரிச்சுகளை உண்டது. ஒடுங்கிய நுண்ணிய இடையும் வளையலணிந்த கையும் உடையவளும் பசியால் வருந்துகின்றவளுமாகிய கிணையனுடைய மகள் குப்பையினின்றும் நகத்தினாற் கிள்ளிய கீரையை உப்பில்லாமல் சமைத்துக் கரிய சுற்றத்துடன் பசி நீங்கும்படி உண்டாள். இவ்வகையான கொடிய வறுமையும் பசியும் இனி நமக்கு ஒருபோதும் இல்லையாகும்படி நாம் மதஞ்சொரியும் யானைகளையும் பெரிய தேரையும் பெற்று அவ்விடத்தினின்றும் வருகின்றோம்.
நெய்தல்நிலம்
இரவலனே! கடற்கரையிடத்துள்ள தாழை அன்னம் போல் பூவை ஈனும்; செருந்தி பொன் போற் பூவை மலரும்; கழியிடத்துள்ளமுள்ளி நீலம்போற் பூவை மலர்த்தும்; புன்னை முத்துப்போல அரும்புகளை முகிழ்க் கும். இவ்வகைக் கழிசூழ்ந்த ஊர்களையும் குளிர்ச்சி பொருந்திய குளங்களை யுமுடைய எயிற்பட்டினத்தே செல்வாயாக. அங்கு முறுக்கவிழ்ந்த அரும்பு களால் கட்டிய மாலையை அணிந்தவனும் தோட்டங்கள் பல உடையவனு மாகியகிடங்கில் என்னும் ஊர்க்கரசனைக் காண்பாய். அவனைப் பாடுவாயா யின் அவன் அதற்கு மகிழ்ந்து விறலியும் உனது சுற்றமும் மகிழ்ந்து உண் ணும்படி சுட்ட குழல்மீனைத் தருவான்; பரதவர், நீவிருண்ணும்படி கள்ளை யும் தருகுவர். அவர் உங்களுக்குக் கொடுக்கும் கள், திரையினாற் கொண்டு வரப்பட்டு உறங்குகின்ற ஒட்டகம் போற்குவிக்கப்பட்ட அகில் விறகைப் பெரிய தோளும் மதி போல் மறுவில்லாத முகமும் வேல்போன்ற கண்ணு முடைய நுளைச்சியர் தீமூட்டி எரித்துக் காய்ச்சி அரித்ததாகும்.
முல்லை நிலம்
நெய்தல் நிலத்தைக் கடந்து காட்டுவழியே செல்வாயானால் அங்கு அவரை பவளம்போல் பூத்திருக்கும்; காயா மயிலின் கழுத்துப்போல் பூத்த கரிய அரும்புகளை உடையதாயிருக்கும்; காந்தட்கொடிகள் கைவிரல்கள் போல் மலர்ந்து காட்சியளிக்கும்; வழியிற் செல்லுமிடத்து வானவில் தோன்றும்; முல்லைக் கொடிகள் படர்ந்திருக்கும். வெடிப்புகளில் நீர் குதிக்கும் அருவிகளையுடைய மலையில் ஞாயிறு மறையும். இவ்வாறு எழும் மாலைக் காலத்தே நீ வேலூரை அடைவாயாயின் நீ உனது சுற்றத்துடனே உண்டு பசி தீரும்படி சமைத்த சோற்றைப் புளிங்கறியோடும் ஆமானின் சூட்டிறைச்சி யோடும் எயிற்றியர் தருவர்.
ஆமூரின் மருத நில வளம்
மாலை தொடுத்தாற் போன்று மலர்ந்த பூக்களுடைய கிளைத்த காஞ்சிமரத்தின் கிளைகளில் இருக்கும் பொன்னிற வாயினையும் நீல மணியின் நிறத்தினையுமுடைய சிச்சிலிப் பறவை நீரில் மூழ்கி மீன்களைப் பிடிக்கும். சிச்சிலிப் பறவையின் கால்கள் கிழித்த இலைகளுடைய தாமரை யின் பூக்களில் தேன் நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணினையு முடைய வண்டுகள் திங்களைச் சேர்ந்த கரும் பாம்பு போலத் தோன்றும்.
இவ்வாறு அழகிய வயல்களையுடைய ஆமூர், அரிய காவலையும், அகன்ற வீடுகளையும், அந்தணர் குடியிருப்பையும் உடையது. வீட்டின் உள்ளே இருக்கும் உழவருடைய மனைவியர் யானையின் துதிக்கை போன்று பின்னால் தொங்கும் பின்னிய கூந்தலையும், வளை அணிந்த கையினையு முடைய தம் பிள்ளைகளைக்கொண்டு நும் எல்லோரையும் போகாதபடி தடுப்பர்; தடுத்துப் பூணுலக்கையாற் குத்திய அரிசியைச் சமைத்த சோற்றை நண்டும் பீர்க்கங்காயும் கலந்த புழுக்குடன் உண்ணும்படி தருவர்.
நல்லியக்கோடனின் மூதூர்
நல்லியக் கோடனது விழாக் கொண்டாடும் மூதூர் சேய்மையி லன்று. மேல் நோக்கி எரிகின்ற நெருப்புச் சாய்ந்தால் ஒத்த நாக்கும், வெள்ளாட்டு மறிகள் கிடந்து அசைகின்ற காதும், கவைத்த காலுமுடைய பேய்மகள் நிணத்தைத் தின்று சிரிக்கும்போது விளங்கித் தோன்றுகின்ற பற்கள் போன்ற வும், போர்க்களத்தே பிணத்தலைகளைப் பெரிய கால்களால் தள்ளுதலால் சிவப்பேறினவுமாகிய நகங்களையுடைய யானைகளின் மதஅருவி சிந்தித் தெருவில் எழும் தூசியை அடக்கும்.
அவனது கோபுரவாயில் பாணருக்கும் அறிவுடையோருக்கும் அடைக்கப்படாது
கோபுரவாயில் மேரு கண்விழித்துப் பார்த்தாற்போல், தோன்றும். கிணைப் பொருநருக்கும், அறிவுடையோருக்கும் அந்தணருக்கும் அதன் வாயில் ஒருபோதும் அடைக்கப்படாது; ஏனையோருக்கு அடைக்கப்பட் டிருக்கும். அரசன் பிறர் தனக்குச் செய்த நன்றியைச் செய்வான்; அறிவும் ஒழுக்கமும் இல்லாதார் அவனிடத்தில் இடம் பெறார்.
நல்லியக்கோடனின் இனிய பண்புகள்
தன்னை நோக்கினார்க்கு அவன் எக்காலமும் இனிய முகமுடையன். தனது வீரத்தைக் கண்டு அஞ்சி அடிபணிந்தார்க்குத் தன்னுடன் இருப்போர் புகழும்படி அருளுவான்; போர்முகத்தே கெட்ட தனது படையைத் தாங்கி வாள்வலியிற் சிறந்த வீரர் புகழும்படி தான் விரும்பியவற்றை முடிப்பான்; பெண்கள் வசத்தனாகாத தன்மையன்; பரிசிலர் தரமறிந்து அவர் பெறத்தக் கவற்றைக் கொடுக்கும் இயல்பினன். கல்வி யில்லாத பரிசில் வேண்டுவோர்க் கும் கொடாதிருத்தலை மேற்கொள்ளாது அவர்கள் தரத்துக்குத் தக்கவற்றைக் கொடுப்பான்; இயலிசை நாடகங்களாலும் இனிய மொழிகளாலும் மகிழ்ச் சியைத் தரும் கூட்டத்தினரோடு பல விண் மீன்களுக்கு நடுவிருக்கும் மதியம் போல் விளங்குவான்.
குரங்கன் கையைப் பாம்பு சுற்றியது போன்ற யாழின் வார்க்கட்டு
இரவலனே! நீ இவ்வியல்புடையனாய் இருக்கும் நல்லியக் கோடனைக்கண்டதும், குரங்கு பாம்பின் தலையைப் பிடித்தால் அப்பாம்பு ஒருகால் இறுகவும் ஒருகால் நெகிழவும் அதன் கையை எப்படிச் சுற்றுமோ அப்படியே யாழ்த்தண்டினிடத்தே நெகிழ வேண்டிய இடத்து நெகிழ்ந்தும் இறுக வேண்டிய இடத்து இறுகியும் சுற்றின நரம்பு துவக்கும் வார்க்கட்டும், காவி நிறம் ஊட்டப்பட்ட போர்வையும், அமிழ்தத்தைத் தம்மிடத்தே பொதிந்த தன்மையுடைய நரம்புகளுடைய சீறியாழைக் கையில் எடுப்பாயாக. எடுத்து அரசன், உவாத்தியாயன், தாய், தந்தை, தமையன் முதலியோர்க்குப் பலகாலும் குவித்த கையை யுடையவனே! வீரர் எறிதற்கு மகிழ்ந்து கொடுத்த மார்பையுடையவனே! ஏரினையுடைய குடிகளுக்கு நிழல் செய்யும் செங்கோலுடையவனே! என்று அவனது சில புகழ்களைக் கூறுவாயாக.
அரசன் பாணர்க்குப் பரிசிலளிக்கும் முறைமை
நீ அவ்வாறு கூறுவதன்முன் மூங்கில் ஆடையை உரித்தாற்போன்ற குற்றமில்லாத உடையை உடுக்கும்படி தருவான். பாம்பின் நஞ்சு ஏறி மயங்கினாற் போல மயக்கம் தரும் கட்டெளி வைத்தருவான். வீமசேனனது மடைநூலில் கூறிய முறைப்படி சமைத்த சோற்றைப் பொற்கலத்தி லிட்டுத் தான் உடன் நின்று உண்ணும்படி செய்வான். முடிவேந்தரின் அரண்களை அழித்து அப்பகைவர் நாட்டிற் பெற்ற பொருளைக் கொண்டு தம்மை விரும்பிவந்தவர்களதும், பாணரதும் வறுமையைப் போக்குவான். தச்சர் உளிகொண்டு வேலைப்பாடு செய்த தேரோடு யானை, குதிரை, அணிகலன் முதலியவற்றைத் தந்து உன்னைச் செல்லும்படி வழி விடுவான். ஆதலால், நீ குறிஞ்சி நிலத்தையுடையவனும் தழைவிரவித் தொடுத்த மாலை யணிந்த வனும் பெரும் புகழுடையவனுமாகிய நல்லியக்கோடனிடத்துச் செல்வாயாக.
4. 1பெரும்பாணாற்றுப்படை
பாணனும் சுற்றத்தினரும் அலைந்து திரிதல்
முதுவேனிற் காலத்தில் ஒருநாள் பல கதிர்களையுடைய ஞாயிறு பரந்த ஆகாயத்தில் நிறைந்த இருளைப்போக்கி விளங்குகின்றது. ஞாயிறும் திங்களும் வலஞ்செய்கின்ற மேருவை உடையதும் கடல் சூழ்ந்ததுமாகிய இவ்வுலகிலே தம்மை ஆதரிப்பார் இன்மையால் யாழை இடப்பக்கத்தே அணைத்த பெரும்பாணன் ஒருவன் தனது கரிய பெரிய சுற்றத்துடன் அலைந்து திரிகின்றான். அவன் தோட்புறத்தே அணைத்திருக்கும் யாழ் உள்நாக்கில்லாத வறுவாயுடையது; அதன் கவைக்கடை பிறை ஏந்தினாற் போன்றது. வார்க்கட்டுப் பெண்கள் கையில் அணியும் வளையலை ஒப்ப நெகிழவேண்டிய இடம் நெகிழ்ந்து இறுக வேண்டிய இடம் இறுகப்பெற்றது; கரிய பெரிய தண்டு நீலமணி ஒழுகினாற்போன்றது; நரம்புகள் இழுக்கப்பட்ட பொற்கம்பிகள் போன்றன; போர்வை விரியாத கமுகம் பூவைப்போலத் தையலழுந்தும்படி தோலை மூட்டிச் செய்யப்பட்டன.
பரிசில் பெற்று வரும் பாணன் பெரும் பாணனை எதிர்ப்பட்டது
இவ்வகை யாழை இடத்தோள்மீது சார்த்திய பாணன், மழை இல்லாமையால் பழுத்த மரத்தைத் தேடத் திரியும் பறவைபோல ஓரிடத்தில் தங்காமல் ஆவிசூழ்ந்த மலையிடத்தில் ஓடித்திரிகின்றான். தொண்டைமான் இளந்திரையனைப்பாடி அவன்பால் பரிசில் பெற்று மீள்கின்றபாணன் ஒருவன் இப்பெரும் பாணனை வழியிடத்தே எதிர்ப்படுகின்றான்; அவன் இவனுடைய மெலிவைக் கண்டு கூறுகின்றான்: பொலி விழிந்த தோற்றத்தினையும் கல்வியை வெறுத்துக் கூறுகின்ற நாவினையும் உடைய இரவலனே! யான் இளந்திரையனது அரசிருக்கையாகிய காஞ்சி நகரினின்றும் பிறர்க்குக் கொடுக்கக் குறைவுபடாத செல்வத்தையும், வெள்ளிய தலையாட்டத்தை யுடைய குதிரைகளையும் யானைகளையும் பரிசிலாக வாரிக்கொண்டு வருகின்றேன். சேரசோழ பாண்டியரினும் மிக்க தலைமை யுடையவனும் சோழர் குடியிற் பிறந்தவனுமாகிய இளந்திரையனை நீயும் உனது சுற்றத் தினரும் நினைப்பீராயின் உங்கள் வறுமை ஒழிந்துவிடும். நீவிர் செல்ல வேண்டிய வழியின் இயல்பினைக் கூறுகின்றேன். கேட்பீராக!
இரவலனே! அவனுடைய நகரில் வழிப்போக்கரை அலறும் படி வெட்டி அவன் பொருளைக் கொள்ளை கொள்ளும் தீயோர் இல்லை. அவனுடைய காட்டில் இடியேறும் இடியாது; பாம்புகளும் தீண்டா; புலி முதலிய விலங்குகளும் தீங்கிழையா. இவ்வியல்புடைய காட்டிடத்தே நீங்கள் இருந்து இளைப்பாறிச் செல்லுங்கள்.
உப்பேற்றிச் செல்லும் உமணர் வண்டிகள்
காட்டிடத்தே செல்லும் கவர்பட்ட வழிகள் உண்டு; அவ்வழி களில் உமணரின் உப்பேற்றிய வண்டிகள் செல்லும். அவ்வண்டி களின் அச்சுமரம் தங்கும் குடங்கள் மத்தளத்தின் வடிவின. அக்குடங் களில் அச்சுமரம் மாட்டப்பட்டிருக்கும். அச்சுமரத்தினூடே ஏணிக் கால் போன்று நீண்ட திரண்ட மரங்கள் கடாவப்பட்டிருக்கும். அம் மரங்களில் குத்துக்கால்கள் போல உயரமான கம்புகள் நாட்டப்பட் டிருக்கும். கம்புகள் நாட்டிய முன்புறம் தொத்துளிப்பாயால் வேயப்பட் டிருக்கும். அது, தினைப்புனத்தை யானைமேயாது இருந்து காவல் செய்வ தற்கு அமைத்த பரண்மீது கட்டிய குடிலைப்போல் தோற்றமளிக்கும். அதன் முன்புறத்தே கோழிக் கூடுகள் கிடக்கும். மேலே மரத்தினாற் செய்ததும் யானையின் முழந்தாள் போன்றதுமாகிய உறி துளை இட்டுக் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். அதன்மீது, நாடகமகளிர் ஆடுகளத்தில் கொட்டப்படும் மத்தளத்தை ஒப்ப வரிந்து கட்டப்பட்ட காடிப்பானைகள் வைக்கப்பட் டிருக்கும். உமணப் பெண் வண்டியின் முன்புறத்தே யிருந்து எருதுகளை அடித்து ஓட்டுவாள். அவள் கையிடத்தே பிள்ளையையும் அதற்குக் காவலாக பூவோடு கூடிய வேப்பிலையையும் வைத்திருப்பாள். வலுவேறின உடலின ராகிய உமணர் தழையினால் தொடுத்த மாலையை மார்பிடத்தே அணிந் திருப்பர்; வண்டியை இழுத்துச் செல்லும் எருதுகள் இளைத்து விட்டால் அவைக்குப் பதில் பூட்டுதற்குப் பல எருதுகளை அடித்து ஓட்டிச் செல்வர். பல துளைகளையுடைய நுகத்தில் ஒருமுகப்படக் கயிற்றினாற் கட்டிய பல எருதுகள் வண்டிகளை இழுத்துச் செல்லும். உமணர் அவற்றின் பக்கத்தே அச்சு முறியாதபடி காத்துச்சென்று உப்பின் விலையைக் கூறுவர். இவ்வகை வண்டிகள் பல கவர்பட்ட வழிகளிற் செல்லும்.
வணிகர் மிளகு பொதிகளைக் கழுதைகளில் ஏற்றிச் செல்லும் காட்சி
பிற நாடுகளினின்றும் வந்த வணிகர் மாணிக்கம், முத்து, சந்தனம் முதலியவற்றை எவ்விடங்களிலும் கொண்டு சென்று விற்பர். அவர்களின் மார்பில் அம்புகள் கிழித்தலால் உண்டான புண்கள் ஆறிய தழும்புகள் கிடக்கும். அவர்கள் அரையிற்கட்டிய உடையிலே உடைவாள் செருகி யிருப்பர்; யானைத் தந்தத்தைக் கடைந்து வாளையிட்டு அதனை வரியுடைய துணியில் கோத்துத் தோளிடத்தே தொங்கவிட்டிருப்பர்; காலில் செருப்புத் தரித்திருப்பர். இவ்வியல்பினராகிய வணிகர் பலாப்பழத்தைப் போன்று ஒத்த கனமாகச் சேர்க்கப்பட்ட மிளகு பொதிகளைச் சுமந்து செல்லும் கழுதை களின் பின்னே கவர்பட்ட வழிகளாற் செல்வர். கழுதைகளுக்கு நீண்ட செவிகளும் முதுகிலே தழும்புகளும் உண்டு.
பாலைநில மக்களின் குடிசைகள்
இவ்வாறு வண்டிகளும் கழுதைகளும் செல்கின்ற வழிகள் கூடுகின்ற சந்தியில் அரசனால் நியமிக்கப்பட்ட சுங்கங்கொள்வோர் விற்படையுடன் காத்து நிற்பர். அவர் தங்கிநிற்கும் காட்டிடத்தில் எயினர் குடியிருப்பு உண்டு. எயினரின் சிறு குடிசைகள் அணிலும் எலியும் நுழைய முடியாதபடி ஈந்தின் ஓலையால் வேயப்பட்டு முட்பன்றியின் முதுகுபோலத் தோன்றும். பிள்ளை களைப் பெற்ற எயிற்றியர் அக்குடிசைகளின் ஒருபுறத்தே மான் தோலில் முடங்கிக் கிடப்பர். ஏனைய பெண்கள் பாரையினால் கரம்பை நிலத்தைக் கிளறி எறும்பு சேர்த்துவைத்த புல்லரிசியை எடுத்து வருவர்; எடுத்துவந்து 1பார்வைமான் கட்டி நிற்கும் விளாமரம் நிழல் செய்கின்ற முற்றத்திலே தோண்டப்பட்டுள்ள நில உரலில் இடுவர்; இட்டு வயிர உலக்கையினால் குத்துவர்; ஆழ்ந்த கிணற்றில் உவர்நீரை மொள்வர்; மொண்டு கொண்டுவந்து பழைய ஒறுவாய் போன பானையிலே உலைவார்த்து முரிந்த அடுப்பிலே வைத்து ஆக்குவர். அவர் குடிசைகளை நீவிர் அடைவீராயின் அவர்கள் தாம் சமைத்த புல்லரிசிச் சோற்றை உப்புக் கண்டத்துடன் உண்ணும்படி தேக் கிலையில் இட்டுத்தருவர்.
கானவர் பன்றி வேட்டையாடுதல்
பாலை நிலத்தே நீரின்மையால் அலைந்து திரிகின்ற மான்களின் அடிச்சுவடுடைய வழிகள் உண்டு. அவ்வழிகளின் பக்கத்தே மழை வறண்ட காலத்து நீர் நிற்றற்குத் தோண்டிய குழிகள் காணப்படும். கானவர் அவற்றிற் பதுங்கியிருந்து நடு இரவில் நீருண்ண வருகின்ற அத்திப்பூப்போன்று வளைந்த மருப்புடைய பன்றிகளை வேட்டையாடுவர். பகற்காலத்தே வளைந்த வேலியிடத்தே வலைகளை மாட்டி, அங்காந்த வாயுடைய நாய் களுடனே சென்று புதர்களை அடித்துத் தாமரைப் பூவின் புறவிதழ் போன்ற செவியுடைய முயல்களை அவற்றிற்கிடவாமல் வலையிடத்தே செல்லும்படி ஓட்டி வேட்டையாடுவர்.
இவ்விடத்தேவிட்டு அப்பாற் செல்வீர்களானால் எயினரின் கோட்டை தோன்றும். அதன் உயர்ந்த மதிற்சுவர் ஊகம்புல்லால் வேயப்பட்டிருக்கும். உள்ளே முள்வேலியாலும் அதன் புறத்தே காவற் காட்டாலும் சூழப்பட்ட அகன்ற வீடுகள் காணப்படும். அவற்றின் வாயிலில் சங்கிலியிற் கட்டிய நாய்கள் காவல் காத்து நிற்கும். திரண்ட மரங்களினால் வீடுகளின் உட் கதவுகள் தாழிடப்பட்டிருக்கும். கழுகுகள் நிரையாக இருக்கும் வீடுகளின் உட்புறத்தே பகைவரைக் குத்தியதால் கூர்மழுங்கிய வேல்களும், மணி கட்டிய பரிசைகளும், விற்களும், அம்புகளும் சார்த்திவைக்கப்பட்டிருக்கும். தலைவாயில்களில் மலையிடத்துள்ள தேன்கூட்டைப் போன்ற கீழ்ப்புறத்தை உடைய அம்புக் கட்டுகளும் மிக்க ஓசையுடைய பறையும் தூங்கும். இவ் வியல்பினதாகிய ஊரிடத்தே செல்வீராயின் ஈந்தின் விதைபோன்ற சோற்றை நாய் வேட்டையாடிக் கொண்டுவந்த சங்குமணி போன்ற முட்டைகளை யுடைய உடும்பின் பொரியலாலே மறைத்து எயினர் தர நீவிர் மனைகடோறும் பெறுகுவிர்.
குறிஞ்சி நிலத்து மறவன்
பாலை நிலத்தைக் கடந்து அப்பாற் செல்வீராயின் குறிஞ்சி நிலத்தை அடைவீர்கள். அந்நிலத்துத் தலைவன் தோன்றிய மறக்குடியிலுள்ளோர் வலிமையால் கொள்ளையடித்துண்ணும் உணவினையும், வாட்போர் செய்யும் தொழிலையுமுடையர். அக்குடியிலுள்ள சூற்கொண்ட மகளிர் யானை எதிர்ப்பட்டாலும், பாம்பு தம்மீது ஏறி ஊர்ந்து சென்றாலும், மேகம் இடிந்தாலும் அஞ்சார். இவ்வாறு மறம் மிக்க குடியிற் பிறந்த அந்நாட்டுத் தலைவன் தனது சொற்கேளாத பகைவருடைய நாட்டகத்தே துணைவர் களுடன் குறிவைத்த விலங்கைத் தப்பாமற் பிடிக்கின்ற வேட்டை நாயைப் போற் செல்வான்; அவர்களின் பசுக்கூட்டங்களைக் கவர்ந்துவந்து கள்ளுக்கு விலையாகக் கொடுப்பான். பின் தனது வீட்டிலே வடிக்கப்பட்ட கள்ளை உண்டு பலரும் கூடும் ஊர்நடுவே உள்ள மரத்தடியிலே கிடாயை அறுத்து அதன் இறைச்சியை உண்டு மத்தளங்கொட்ட இடத்தோளை வலப்புறத்தே வளைத்து மகிழ்ச்சி உண்டாகும்படி ஆடுவான்.
முல்லை நிலத்து ஊர்
இவ்வியல்பினதாகிய ஊரைக் கடந்து சென்றால் முல்லை நிலத்து ஊர்களை அடைவீர்கள். அங்கு வீடுகள் குறுகிய தடிகளைக் காலாக இறுக்கி அவைகள் மீது கட்டப்பட்டிருக்கும். கால்களில் ஆட்டு மந்தைகள் நின்று தின்னும்படி தழைகள் கட்டப்பட்டிருக்கும். வீட்டின் வாயில்களில் சிறு புதர்கள் காணப்படும். வீட்டின் கதவுகள் கயிற்றால் வரியப்பட்டவை. கயிற்றி னால் வரிந்து வரகு வைக்கோல் பரப்பப்பட்ட படுக்கையில் கிடாயின் தோலை விரித்து அதன் மீது முதியவன் காவலாகப் படுத்திருப்பான். முற்றத்தே அறையப்பட்டுள்ள முளைகளில் பசுக்களைக் கட்டும் கயிறுகள் கிடக்கும் ஊரைச் சூழ்ந்து வேலியின் பக்கத்தே வெள்ளாடும் செம்மறியாடும் படுத் திருக்கும்.
மோர் விற்கும் இடைப்பெண்
இவ்வியல்பினதாகிய முல்லை நிலத்து ஊரிடத்தே பறவைகள் துயில் எழுகின்ற விடியற்காலத்தே இடைப் பெண்கள் மத்துகள் ஆரவாரிக்கும்படி தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுப்பர். தாளுருவி அசைகின்ற காதும் பொன்னிற மேனியுமுடைய ஆய்மகள் புள்ளியாகத் தயிர்தெறித்த பானையி லுள்ள மோரைப் பூவாற்செய்த சும்மாட்டின் மீது தலையில்வைத்துக் குறிஞ்சி நிலத்தே சென்று விற்பாள்; விற்றதனால் கிடைத்த நெல் முதலியவற்றைக் கொண்டு சுற்றத்தாரை உண்ணும்படி செய்வாள். குறிய கரிய கூந்தலை யுடைய இடைமகள் தான் நெய்யை விற்றவிலைக்குக் கட்டியாகிய பசும் பொன்னை வாங்காளாய் பாலெருமையையும், நல்ல பசுவையும் எருமை நாகையும் கொள்வாள். இவ்வியல்பினராகிய பெண்களும் வாயைமடித்துச் சீழ்க்கை அடிக்கின்ற வருமாகிய இடையரும் உறையும் குடியிருப்பில் தங்குவீராயின் அவர்கள் சிலுத்த தினையரிசிச் சோற்றைப் பாலுடன் தருவார்கள்.
இடையர் மந்தை மேய்க்கும் புல்வெளி
முல்லை நிலத்து ஊரைக் கடந்து செல்லும் போது மந்தைகளை மேய்க்கும் இடையரைக் காண்பீர்கள். செருப்புத் தரித்திருத்தலால் அவர் அடிகளில் தழும்பு ஏறியிருக்கும்; கோடாரியைக் கையில் பிடித்திருப்பதால் அவர்களின் கை காய்த்து விறைத்திருக்கும். அவர் கையிலே பசுக்களை அடித்து ஓட்டுகின்ற கோலை வைத்திருப்பர். காவடியின் இரண்டு தலைகளி லும் உறிகளைத் தூக்கிச் செல்வதால் தோள்கள் காய்த்து மயிருடையனவா யிருக்கும். அவர்கள் மயிரிடத்தே பாற்கறையைத் தடவியிருப்பர்; மரக் கொம்பு களின் உச்சியிலிருந்தும், கொடிகளிலிருந்தும் பறித்த பூக்களை மாலையாகக் கட்டி அணிந்திருப்பர்; அரையில் ஒரு உடையை உடுத்திருப்பர்; பாற்சோற்றை உணவாகக் கொள்வர்; கன்றுகளுடைய பசுக் கூட்டத்தைக் காட்டில் மேயும் படி விட்டுத்தாம் மரநிழல்களிலிருந்து, நெருப்புக் கொள்ளியால் இட்ட துளை களையுடைய குழல்களில் பாலைப் பண்ணை இனிமையாகப் பாடுவர்; குழலை ஊதி வெறுத்தார்களாயின் குமிழின் கொம்பை வளைத்துக்கட்டிய அரலையின் தும்பாகிய நரம்பைக் கையினால் தெறித்து, வண்டினங்கள் தம்மினத்தின் ஓசையென்று காதுகொடுத்துக் கேட்கும்படி குறிஞ்சிப்பண் பாடுவர்.
தானியம் விளைத்தும் மந்தை மேய்த்தும் வாழும் இடையர் குடியிருப்பு
இவ்வகைப் புல்லடர்ந்த இடத்தைக் கடந்து முள்ளடர்ந்த விடர்த்தர் மரங்கள் சூழ்ந்த மாடு தங்குமிடத்தையுடைய ஊர்களிற் செல்வீராயின், வீடுகளின் முற்றத்தே யானைக் கூட்டம் நின்றாற்போல வரகு முதலிய தானி யங்கள் நிறைக்கப்பட்ட குதிர்கள் தோன்றும். தலைவாயில்களில் யானையின் கால்கள்போன்ற குதிர்கள் நடப்பெற்றிருக்கும். புகைபிடித்த கொட்டில்களின் சுவர்களில் வண்டிச் சக்கரங்களும் கலப்பைகளும் சார்த்தி வைக்கப்பட் டிருக்கும். வீடுகளின் கூரைகள் கரிய வரகு வைக்கோலால் வேயப்பட்டு மாரிகாலத்து மேகம்போலத் தோன்றும். இவ்வியல்பினவாகிய குடியிருப்பு களை அடைவீராயின் வரகுடன் அவரை விதையை இட்டுச் சமைத்த சோற்றினை உண்ணும்படி அங்குள்ளார் தருவர்.
மருத நிலக்காட்சி
இக்குடியிருப்பைக் கடந்து செல்வீர்களாயின் வீடு நிறைந்த உணவுப் பொருள்களுடைய உழவரின் வீடுகளைக் காண்பீர்கள். உழவர் எருதுகளை நுகத்தில் பூட்டிப் பெண்யானையின் வளைந்த வாய் போன்ற கலப்பையின் உடும்பின் முகம் போன்ற பெரிய கொழுக்கள் மறையும்படி அமுக்கி உழுது விதைத்த பயிர்கள் தோட்டங்களில் விளைந்து காட்சி அளிக்கும். அவற் றினிடையே தங்கியிருந்த காடை அறுப்புக் காலத்துக்களமரின் ஆரவாரத்துக் கஞ்சித் தனது பறக்கலாற்றாதவும் கடம்பின் பூப்போன்று வெண்ணிற முடையனவுமாகிய குஞ்சுகளைக் கூட்டிக் கொண்டு முல்லை நிலத்தே சென்று தங்கும்.
அமுக்கி ஊதுகின்ற உலையில் தொழில் செய்கிற் கொல்லனது முறிந்த குறட்டைப்போன்ற கவர்பட்ட கால்களுடைய நண்டுகள் வயல்களிலே, புற்றுகளில் வாழும். கோரைப் புல்லை வேருடன் கொம்பால் குத்தி எடுக்கின்ற எருதுகள் நண்டுப் புற்றுகள் அழியும்படி அங்கு நின்று ஒன்றோடு ஒன்று சண்டையிடும். இவ்வியல்பினதாகிய வயலை உழவர் ஒப்புரவு செய்து நாற்று முடிகளை நடுவர். வயல்களில் வேலை புரிவோரின் இரும்புத் தகடுபோன்று திரையாத மெல்லிய தோலுடைய பிள்ளைகள் சண்பகக் காயின் தாதை மார்பிடத்தே பூசியிருப்பர். அவர்கள் களை பறிப்போர் பிடுங்கிப் போட்ட நெய்தற் பூவை அணிவதை வெறுத்தார்களாயின் முள்ளியின் பூவைப் பறித்துப் பல்லினால் மென்று கிழித்து முடிந்த கோரைநாரால் அதனை மாலையாகக் கட்டி ஈருடைய கரியதலை நிறையும்படி சூடுவர்.
அவர்கள் பழஞ்சோற்றை வெறுத்து வரம்பிலே கட்டப்பட்டுள்ள சிறிய குடிலின் முற்றத்தில் அவலிடிப்பர். அவ்வோசைக்கு அஞ்சிக் கிளிகள் பறக்கும். நெல்லறுப்போர் வளைந்த கதிருடைய முற்றிய நெல்லின் தாள் களை அறுப்பர்; அறுத்துக் களங்களில் உறையும் தெய்வங்கள் பலி கொள் ளும்படி பாம்புறையும் மருதமர நிழலில் போரடுக்குவர். போர்களின் அடிப் பக்கங்களில் துணங்கையாடும் பூதங்களின் வெள்ளாடைகளைப் போல் சிலந்தி நூல்கள் சூழ்ந்து கிடக்கும். போர்களின் அடியைப்பிடித்து விரித்துக் கடாக்களால் மிதித்து வைக்கோலையும் கூளத்தையும் மணியினின்றும் பிரித்து ஈரம் புலரும்படி மேல் காற்றில் கையினால் தூவித் தூற்றின பொலி மேருவைப் போல உயர்ந்து தோன்றும். இவ்வாறு சிறப்பு மிக்க மருத நிலஞ் சூழ்ந்த குடியிருப்புகளிலே வீடுகளின் பக்கத்து இறுக்கப் பெற்ற முளைகளில் ஆன்கன்றுகளைக் கட்டும் கயிறுகள் கிடக்கும்; தலையைத் திறந்து தானியங்கள் உள்ளே கொட்டப்பெற்ற குதிர்கள் தோன்றும். தச்சச்சிறார் செய்த சிறு தேர்களை உருட்டிச் சென்ற களைப்பால் பின்ளைகள் செவிலித் தாயருடைய பாலை நிறையவுண்டு படுக்கையிலே கண்வளர்வர். இவ்வாறு வறுமை தெரியாத குடியிருப்பினையுடைய ஊரிலே செல்வீராயின் அங்குள்ளார் நெற்சோற்றினைக் கோழிப்பேட்டின் பொரியலோடு தருவர்.
கரும்பு ஆலைகள்
வயல்களிலே புகைசூழ்ந்த கொட்டில்கள் காணப்படும். அங்குக் கரும்பு ஆலைகள் ஆடுகையினாலே மலையிடத்தில் சிங்கம் பாய்தலால் யானை பயந்து சத்தமிட்டாற் போன்று ஆரவாரம் உண்டாகும். இவ்வாறு ஆட்டிப்பிழியப்பட்ட கருப்பஞ் சாற்றை அங்குள்ளார் கட்டியாகக் காய்ச்சு வர். அக்கொட்டில்களிற் செல்வீராயின் கருப்பஞ்சாற்றையும் கற்கண்டையும் உண்ணும்படி பெறுகுவிர்.
மீன் பிடிப்போர் குடியிருப்பு
இக்கொட்டில்களைக் கடந்து அப்பாற் சென்றால் ஏரிகளிலும் மடுக்களிலும் மீன் பிடிப்பாரின் குடியிருப்பைக் காண்பீர்கள். அவர்களின் வீடு காஞ்சி வஞ்சி முதலிய மரங்களின் கொம்புகளைக் கைமரங்களுக்கு நடுவே தூணாக நாட்டி மூங்கிற்றடிகளை வரிச்சாக நிரைத்து வைத்துத், தாழை நாராற் கட்டித் தருப்பைப் புல்லால் வேய்ந்த இறப்புகளை உடையன. தலை வாயில்கள் புன்னைக் கொம்பினால் கட்டப்பட்டிருக்கும். அவற்றின் கூரை களில் படரவிடப்பட்ட சுரைக் கொடிகளில் காய்கள் தொங்கும். முற்றத்தே மீன்களை வாரி எடுக்கும் வலைகள் கிடக்கும். இளையவர்களும் முதியவர் களும் தலைவாயிலில் தங்கி இருப்பார்கள்; பின்பு இறாலும் கயல் மீனும் பிறழுகின்ற ஆழ்ந்த குளங்களில் உலாவி மீன்களைப் பிடிப்பார்கள். அவர்கள் குற்றாத கொழியலரிசியைக் கழியாகத் துழாவி அடுவர்; அட்ட கூழை அகன்ற வாயுடைய தட்டுப்பிழாவிலே விட்டு ஆற்றுவர்; பாம்பு இருக்கும் புற்றிற் கிடக்கும் புற்றாம் பழஞ்சோற்றை ஒத்த புறத்தினையுடைய நெல் முளையை இடித்துச் சேரும்படி அதிலே கலப்பர்; பின்பு விரலாலே கலக்கி அரிப்பர். அவர் குடியிருப்பில் தங்குவீராயின் இவ்வாறு அரித்துச் சாடியில் விட்டு முற்றிய காரமுள்ள கள்ளை மீன் சூட்டோடு பெறுகுவிர்.
இக்குடியிருப்பைக் கடந்து சென்றால் அங்கு நீர்நிலைகள் காணப் படும். தூண்டிலில் கோக்கும் இரையை இட்டு வைக்கும் தோற்பையை உடையவனும் மீனைத் தப்பாமற் பிடிக்கும் திறமையுடையவனுமாகிய பாணன் மூங்கிற்றடியிற் கட்டிய கயிற்றிடத்துள்ள தூண்டிலில் இரையைக் குற்றி நீருள்விடுவான். அவ்விரையைக் கவர்ந்து அகப்படாமற் போன வாளைமீன் நீர் நிலையின் பக்கத்தே நின்ற பிரம்பின் நிழலைக்கண்டு அஞ்சும். அந்நீர் நிலையில் பூத்த கடவுள் சூடுதற் குரிய தாமரைப் பூவைச் சூடாது, பொய்கைகளில் வானவிற் போன்று பூத்துள்ள குவளையையும் நீலத்தையும் பிற பூக்களையும் அவற்றைப் பறிப்பார் உங்கட்குத்தர நீவிர் அவற்றைப் பெற்றுச் சூடிக் கொண்டு அப்பாற் செல்வீராக.
பார்ப்பார் இல்லம்
அப்பாற் சென்றால் பார்ப்பார் இல்லங்களைக் காண்பீர்கள். பசுக்கள் பசும் புற்றரைகளைத்தேடி மேயச் செல்ல அவற்றின் செழிய கன்றுகள் பந்தற் கால்களில் கட்டி நிற்கும். கோழி, நாய் முதலியவை அவ் வில்லங்களுள் செல்லமாட்டா. சாணியால் மெழுகப்பட்டிருக்கும் வீடுகளுள் வழிபடு தெய்வங்களின் உருவங்கள் காணப்படும். கிளிகள் வேதம் படிக்கும். அருந் ததியைப்போன்ற சிறந்தகற்பும் நல்லொழுக்கமும் வளையணிந்த கை களுமுடைய பார்ப்பனப் பெண்கள் நல்ல சுவையுள்ள உணவுகளை ஆக்கு வார்கள். அவ்வீடுகளை அடைந்தால் இராசான்னம் என்னும் சோற்றினையும், மாதுளங்காய்களைப் பில்லைகளாக அரிந்து மிளகுத்தூள் தூவிக் கருவேப்பிலை கூட்டி நெய்யில் வெதுப்பிய பொரியல்களையும், மாங்காய் ஊறுகாய் முதலியவற்றையும் உண்ணும்படி பெறுகுவிர்.
நீராடுந் துறை
நீராடுந் துறைகளிலே மகளிர் விளையாடிப் போகவிட்டுப் போன குழையினை நீல நிறமுடைய சிச்சிலிப் பறவை எடுத்துக்கொண்டு பறவைகள் நிறைந்திருக்கும் பனையிற் செல்லாது, அந்தணர் யாகசாலையில் நட்ட யூபத்தின் மேலிருக்கும். அது சோனகர் பாய்மரத்தின் மேலேற்றிய அன்ன விளக்கைப் போலவும் விடி வெள்ளியைப் போலவும் ஒளிவிட்டு விளங்கும்.
துறைமுகக் காட்சி
கடற்கரையிலே மேற்குத் திசையிலுள்ள குதிரைகளையும் திசையிலுள்ள பண்டங்களையும் கொண்டு வந்த மரக்கலங்கள் சூழ்ந்து நிற்கும். மணல் மிக்குடைய வீதிகளில் தொழிலாளர் காவல்புரியும் பண்ட சாலைகளும் பரதவர் வாழும் வானை முட்டும் மாளிகைகளும் காணப் பெறும். வீடுகளில் விளைபொருள்கள் நிறைந்து கிடக்கும். வயல்களில் உழுகின்ற எருதுகளைப் பசுக்கள் நெருங்காதபடி ஆட்டுக்கடாக்களும் நாய்களும் சுழன்று திரியும்.
பெண்கள் பந்தாடுதல்
உயர்ந்த மாடங்களில் உறையும் பேரணிகலன்களை அணிந்த மகளிர் பசிய மணிகோத்த வடங்கள் உடைய அரையில் கிடக்கின்ற மெல்லிய துகில் அசைய மலையிலே ஆரவாரிக்கின்ற மயில்கள் போல உலாவுவர்; காலிடத்துள்ள பொற் சிலம்புக ளொலிக்க நூலினால் வரிந்து செய்யப்பட்ட பந்தினை அடித்து விளையாடுவர்; மெத்தெனக் கையிற் றரித்த வளைகள் அசையும்படி பொற்கழங்கு கொண்டு முந்தை ஒத்த வார்ந்த மணலில் விளையாடுவர்.
கட்கடை
கள்ளுண்பார் பலரும் புகுகின்ற கள் விற்கும் கடை வாயிலில் பசிய கொடிகள் ஆடிக்கொண்டிருக்கும். முற்றத்தே தெய்வத்துக்குத் தூவின பூ வாடல்கள் காணப்படும். அவ்விடத்தே கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வீட்டில் கழுவியநீர் வடிதலின் நிலம் சேறாடியிருக்கும். அச் சேற்றில் புரளு கின்ற பெண் பன்றியோடு சேர்க்கைக் கருத்தால் செல்லாமல் குழியில்விட்டு, இடித்தமாவை உணவாகக் கொடுத்து ஆண்பன்றி வளர்க்கப்படும். நீவிர் நெய்தல் நிலத்திலுள்ள பட்டினத்திற் றங்கு வீராயின் அப்பன்றியின் தசையோடு கள்ளையும் உண்ணும்படி பெறுகுவிர்.
கலங்கரை விளக்கம்
துறைமுகத்தில் வானை முட்டும்படி உயர்ந்ததும் கற்றை முதலிய வற்றால் வேயப்படாததுமாகிய கலங்கரை விளக்கம் தோன்றும். அது கடலிற் செல்லும் மரக்கலங்கள் தாம் சேரும் இடத்தை அறிந்து செல்லும்படி அமைக் கப்பட்டது. அவ்விடத்தைக் கடந்து சென்றால் தென்னங்கீற்றால் வேய்ந்த கூரையையும் முற்றத்தே மஞ்சட்செடிகளையுமுடைய வீடுகளைக் காண் பீர்கள். அவ்வீடுகளில் தங்குவீராயின் இளநீரையும், வாழைப் பழத்தையும், பனையின் நுங்கினையும், வேறு பண்டங்கiயும் முற்றின வள்ளிமுதலிய கிழங்குகளையும் உண்ணும்படி பெறுகுவிர். இச்செல்வம் பொருந்திய பட்டினத்தே வழிச்செல்வோர் பசி தீரும்படி சோற்றை ஆக்குகின்ற பானை அசைந்து விழும்படி கமுகின் பக்கத்தே நிற்கும் தெங்கின்காய் விழும்.
திரு எஃகா
இப்பட்டினத்தை விட்டுச் சென்றால் பல மரங்கள் அடர்ந்த இடங்களில் அமைக்கப்பட்ட விண்ணைத்தொடும் மாடங்கள் விளங்கும். ஊர்களில் பெண்கள் வள்ளிக்கூத்து ஆடுவர். இவ்வகைப் புறநாடுகளைக் கடந்தபின் காந்தள் வளர்கின்ற மலையிடத்து யானை கிடந்தாற் போலப் பாம்பணை யிலே திருமால் பள்ளி கொள்கின்ற திரு எஃகாவை அடைவீர்கள்.
அங்கு வெய்யில் நுழையாதவும் இலை நெருக்கத்தால் குயில்கள் நுழைகின்றவுமாகிய இளமரச் சோலைகள் உண்டு. அச்சோலைகளுள் உள்ள காஞ்சி மரத்திலே படர்ந்திருக்குதம் குருக்கத்திக் கொடியின் வரிகளை யுடைய பூக்கள், வார்ந்த மணலிடத்தே குழிகளில் நிற்கும் நீரில் விழுந்து அப்பவாணிகர் சுட்ட அப்பம் பாலிலே கிடந்தாற் போல் தோன்றும். முன்பு நீர்நின்ற அப்பொழில்களிடத்தே, இளம்பிறையைக் கரும்பாம்பு பற்றினாற் போல மகரவாயென்னும் தலைக்கோலமும், வண்டுகள் சூழும் நெற்றியும், கள்ளுண்ணலால் குளிர்ச்சி பொருந்திய கண்களுமுடைய மகளிர் பகற் பொழுதில் விளையாடுவர். அவர்களோடு நீவிரும் விளையாடுவீர்களாக. பின்பு, நீங்கள் பெரிய நீராடும் துறையில் இளவேனில் இன்பம் நுகர்பவர் களோடு இருந்து இளைப்பாறுங்கள்; சூல் கொண்ட கமுகின் வயிற்றைப் போன்ற பச்சைக் குப்பிகளை (தொன்னைகளை) உண்டு கழித்து நாடோறும் பெரிய மகிழ்ச்சிக்குரிய அவ்விடத்தே இருங்கள்; நும்முடைய கரிய தண்டினையுடைய இனிய யாழை வாசித்துத் திரு வெஃகாவிலிருக்கும் கடவுளை வாழ்த்தி அவ்விடத்தினின்றும் செல்லுங்கள்.
காஞ்சி மூதூர்
அப்பாற் சென்றால் காஞ்சி மூதூரை அடைவீர்கள். அங்குச் சோலை களில் பரிக்கோலைக் கையிலேயுடைய யானைப்பாகர் சோர்ந்திருக்கும் போது, சூலுடைய மந்தி யானைக்கு நெய்யுடன் கலந்து வைக்கப்பட்ட அரிசியைத் திருடிக்கொண்டு சென்று உண்ணும். தேர் ஓடுதலால் தெருக்கள் குழிந்திருக்கும். புகழுடைய மூதூரிடத்து வாழும் மக்கள் கடைகளில் விற்ற லும் வாங்கலும் செய்வர். உலகத்தே கொடுப்பாரைக் கொடாது தடுத்த1 அம் மூதூர் பரிசிலர்க்கு அடையாத வாயிலுடையது; செங்கற்களால் எடுக்கப் பட்ட மதில்கள் காவற்காடு சூழ்ந்த பக்கங்களை உடையன. அந்நகர், புலால் நாற்ற முடைய கடல் சூழந்த இவ்வுலகில், புறாக்களிருக்கின்றவும் பூவாமற் காய்க் கின்றவும் மரங்களுட் சிறந்த பலாவைப் போன்று சிறப்புடையது; பலசமயத்த வர்கள் தொழும்படி எடுக்கப்படும் விழாக்களால் சிறந்தது.
ஐவர் நூற்று வரை வென்றது
ஐவர் தாமரைமுகையுடைய நெடிய தேரை உடையர். தருமன் முதலானோர், பிறையை மேலே சூடி அந்திக் காலத்தே உலாவுகின்ற முகிலைப் போன்றவும், வெள்ளிய கொம்புடையவுமாகிய யானைகளின் பிணத்தை இரத்த ஆறு இழுத்துச் செல்லும்படி பொருது துரியோதனன் முதலிய நூற்றுவரும் மடியும்படி வென்றான். அத்தருமன் முதலானோர் போல இளந்திரையன் மட்டுக் கடங்காப் படையுடன்; அவன் வந்த பகைவரை வென்று பரிசிலை விரும்பி அடைக்கலமாகச் சென்றார்க்குப் பாதுகாவலாகக் காஞ்சி நகரில் வீற்றிருக்கின்றான்.
அரசன் காஞ்சி மூதூரில் இரவலர்ப்புரந்து வீற்றிருக்கும் இயல்பு
தன்னோடு மாறுபட்ட அரசனின் மன்றுகளில் மக்களின்றாம்படி அழித்தலும், தன்னை விரும்பிவந்தோர் நாடு திருமடந்தைபொலிவு பெற்றிருக்கும்படி அளித்தலும் அவனுக்கு எளிது. மலையிடத்தினின்றும் இழிகின்ற அருவி அம் மலையிலுள்ள பண்டங்களை வாரிக்கொண்டு வந்து கடலுக்குக் கொடுத்தாற் போலத் திறைகளுடன் வந்த பலநாட்டு வேந்தர் அவனுடைய தலைவாயிலில் காத்துநிற்பர். அன்னோர், கங்கையைக் கடக்க விரும்பினோர் தோணிக்குக் காத்திருந்து தூங்கினது போலயானை முதலிய செல்வங்களோடு நெருங்கி நின்று காலம் பார்த்திருப்பர்.
இளந்திரையனின் நல்லியல்புகள்
மாடத்திருக்கும் சேவற்புறா, யானைக்கு வளைந்த பூண் செய்கின்ற கொல்லனது கூடத்தில் எழுந்த ஓசைக்கு வெருவித் துயில் நீங்கும். கடவுள் இருப்பதற்கும் இலக்குமி உறைவதற்கும் இடமாயுள்ள இத்தொன்னகரில் வேந்தன் இருப்பான். அவன் கடலின் நடுவே ஞாயிறு தோன்றி ஒளிசெய்தாற் போல மயக்க மில்லாத அறிவுடையன். அவன் வறியராய் நலிவெய்தி னோர்க்கும் வறுமையுற் றிரந்தோர்க்கும் விரும்பியவற்றைக் கொடுப்பான்; புலவருக்கு ஆபரணங்களை அளிப்பான்; பரிசிலருக்கு அளித்துக் கொடுமை இல்லாத அமைச்சரோடு வீற்றிருப்பான். நீ அவனைப் பார்த்து, “யானையைக் கண்ட சிங்கக்குட்டி அதன் மத்தகத்தைக் கொள்ள விரும்பி னாற் போலப் பகைவரது மதில்களை அழித்து அரசருடைய முடிக்கலம் முதலியவற்றை வாங்கிக்கொண்டு வீரமுடி புனையும் வெற்றியினையும், பகைப் புலத்துக்கொண்ட கொள்ளையாகிய உணவினையும், மாறுபட்ட அரச ரோடு சந்துசெய்யும் விருப்பமின்மையையும் உடையவனே! தொண்டைக் கொடியைச் சூடிய மரபில் உதித்தவனே! வீரர்க்கு வீரத்தைக் கொடுக்கின்ற வனே! கொடியார்க்குக் கொடியவனே! செல்வமுடையோர்க்குக் கொடுத்தலை விரும்புகின்றவனே! போர்த்தொழிலில் புகழ்பெற்றவனே! கடலிடத்தே சென்று சூரனைக் கொன்ற முருகனைப் பெற்ற பெருமையுடைய வயிற்றை யும் பேய்களாடும் துணங்கைக் கூத்தையுமுடைய இறைவிக்குப் பேய்மகள் சில நொடி சொன்னாற்போலக் குறையாத கொடையுடைய நின்புகழிற் சில வற்றைக் கூறிப் புகழ்ந்து வந்தேன்; நெடிது வாழ்க!” என்று சொல்லி யாழை வாசிக்கும் முறைமையில் வாசிப்பாயாக. மயில்கள் ஆரவாரிக்கின்ற இளமரக் காட்டில் மந்திகள் பாய்வதால் சிந்திக்கிடக்கும் மலர்களையுடைய காடும், தெய்வங்கள் உறைகின்றவும், கின்னரப் பறவை பாடுகின்றவும், முற்றத்தே மானும் புலியும் துயில்கொள்ள யானை முறித்துக்கொண்டு வந்த விறகால் முனிவர் ஓமஞ்செய்கின்றவுமாகிய சாரல்களும் பல அருவிகளுமுடைய மலைகளுக்குத் தலைவனாகிய அரசன் செல்வமும் யாக்கையும் நிலை யில்லாத இவ்வுலகில் புகழைப் பெறுதல் நன்று என உணர்ந்து உன்னை விரும்பி அழைப்பான்;
இளந்திரையன் இரவலர் புகழக்கேட்டுப் பரிசில் வழங்கும் தன்மை
அழைத்து உனது அரையிற் கிடக்கும் கொட்டைப் பாசியின் வேரைப் போன்ற கிழிந்த உடையைப் போக்கிப் பாலாவியை ஒத்து விளங்குகின்ற நூலால் செய்த பட்டாடைகளை நீயும் உனது சுற்றத்தினரும் உடுக்கும்படி தருவான். வளைந்த அரிவாளைப் பிடித்தலால் கைகாய்ப்பேறின மடையன் ஆக்கிய இறைச்சியையும் சோற்றையும் இனிய சுவையுடைய பிற உணவு களையும் வெள்ளிக் கலங்களிலிட்டு உனது பிள்ளைகளினிடையே வைத்து ஆசையுடன் உண்ணும்படி செய்வான். கார் காலத்து மின்னல் தோன்றினாற் போன்று விறலி மயிரிடத்தே சூடும்படி பொன்மாலையையும் பொற்றாமரைப் பூவையும் அளிப்பான்; சங்கின் நிறம்போன்ற வெள்ளிய குதிரைகள் பூட்டிய பொற்றேரினைத் தருவான்; அதோடு அமையாது பகை அரசரிடமிருந்து கவர்ந்த குதிரைகளையும் சேணத்தையும் கொடுப்பான்; நாவலந் தண் பொழில் குற்றமின்றி விளங்கும்படி இவை ஒழிந்த பரிசில்களையும் வழங்கு வான். இரவலனே காலந் தாழ்த்தாது கடிதில் அவன்பால் ஏகுக.
5. 1முல்லைப்பாட்டு
நற்சொற்கேட்டல்
முல்லைக்குரிய கார்காலம் நேர்ந்தது. போர்வயிற் பிரிந்த தலைவரின் பிரிவைப் பொறுக்கமாட்டாத இராசமாதேவி துயருற்றுத் துயில் கொள்ளப் பெறாளாயினாள். அவள் கண்கள் முத்துப்போற் கண்ணீரை உதிர்த்தன. அவள் தனது நெகிழ்ந்த கைவளைகளைத் திருத்தினாள்; அம்பு தைத்த மயில்போல நடுநடுங்கி அணிகலன்கள் நெகிழப்பெற்றாள். அதனைக் கண்டு வருந்திய முதுபெண்டு பல இனியமொழிகளைக் கூறினாள்; தலைவனது மானம் புகழ் முதலியவற்றையும், அரசியல் நடப்பதற்கு அவன் பிரிய வேண்டிய இன்றியமையாமையையும் எடுத்துக்காட்டினாள். தலைவிதனது ஆற்றாமை மிகுதியால் முதுபெண்டு கூறியவற்றைத் தெளியும் திறமை இல்லாளாயினாள். அஞ்ஞான்று அம்முதுபெண்டு இராசமாதேவியை நோக்கி, “படைத்தலைவர் ஊர்ப்புறத்துள்ள பாக்கத்தே நற்சொற்கேட்பாரைப் போக்கினார். அவர்கள் தாம் நாழியிற்கொண்டு சென்ற நெல்லையும் முல்லை மலரையும் தூவித் தெய்வத்தை வணங்கி நற்சொற் கேட்க நின்றார்கள். குளிரால் நடுங்கும் இடைச்சி தோளிற் கட்டின கையளாய்ப் போந்து, தாம்பிற் பிணிக்கப்பட்டு நிற்பனவும் முலையுண்ணாமையால் சுழன்று வருந்துகின்றவு மாகிய கன்றுகளை நோக்கி, ‘உங்கள் தாய்மார் நிரம்பமேய்ந்து இப்பொழுதே வருவர்’ என்றாள். அந்நற்சொல்லின் பலனாக நின்தலைவர் பகவரைவென்று அவரிடத்திற் பெற்ற திறைப் பொருள்களுடன் மகிழ்ச்சி பெருக இப்பொழுதே வருவர் எனக் கூறினாள். அதனைச் செவிக் கொண்ட தலைவி தலைவர் இவ்வாறு பிரிந்தாலன்றி அரசியல் நிகழாதென மனதிற் கொள்வாளாயினள்.
இராசமாதேவி அரசனின் வரவை எதிர்நோக்கிக் கிடத்தல்
சக்கரத்தையும் வலம்புரிச்சங்கையும் தாங்கிய பெரிய கைகளையும், இலக்குமியைத் தாங்கும் மார்பினையுமுடைய திருமால் மாவலியிடம் குறள் வடிவிற் சென்று மூவடி மண்ணிரந்தார். அதனை அளிக்கவேண்டி மாவலி அங்கையில் நீர் பெய்த ஞான்று திருமால் நெடிய வடிவு கொண்டார். கட லிடத்து நீரைக்குடித்த முகில்கள் அந்நெடிய மாலைப்போல உயர்ந்து மலை யில் தங்கி மாலைக் காலத்தில் மழையைப் பெய்தன. அரண்மனையிடத்துப் பள்ளியறையில் பொற்பாவை ஏந்தி நின்ற தகளியிலே விளக்கு நின்றெரிந் தது. ஏழுநிலை மாடத்தின் மூட்டுவாய்களி னின்றும் சொரிகின்ற நீர்த்தாரை யின் ஓசைகள் ஆரவாரித்தன. இவ்வாறு நிகழ்தலும் தலைவன் வருவேன் என்று கூறிச் சென்ற பருவகாலம் வந்ததாதலின் அவன் தவறாது வருவான் என்னும் எண்ணத்தோடு இராசமாதேவி படுக்கையில் கிடப்பாளாயினள். இஃது இவ்வாறாகப் பகை அரசன்மீது படை எடுத்துச் சென்ற தலைவனது நிலை மேல் வருமாறுள்ளது.
பாசறை வகுத்தல்
பகைமேற் சென்ற அரசனது படைவீரர் காட்டாறு சூழ்ந்த காட்டிடத்தே பிடவம் முதலிய புதர்களை வெட்டினார்கள்; பகைப் புலத்தே காவல் காத்து நின்ற வெட்டுவர் அரண்களை அழித்தார்கள்; அரணாக நாற்புறமும் முள் வேலி இட்டார்கள்; அதன் நடுவே பரந்த பாடி வீட்டை அமைத்தார்கள். அரசன் அப்பாசறையினிடத்தே, ஒருகையைப் படுக்கையின் மேல் வைத்தும் ஒரு கையை முடியுடன் சேர்த்தியும் இருந்து, யானையை எறிந்து பட்ட வீரரை நினைந்தும் அம்பு தைத்த வருத்தத்தால் செவி சாய்த்துப் புல்லுண்ணாமல் நிற்கும் குதிரைகளை நினைந்தும், இப்படை நொந்த அளவுக்கு நாளை எவ் வாறு பொருதும் என்று நினைந்தும் வருந்துவான். அப்பாசறையில் தங்கும் பல மொழிகளைப் பேசும் படை வீரருக்கு நடுவில் ஓரிடத்தை அரசனுக்குக் கோயிலாக எல்லாரும் அமைத்தார்கள்; கால்களைக் கூடமாக நட்டார்கள்; கயிற்றை வளைத்துக் கட்டினார்கள்; வலிய விற்களை ஊன்றினார்கள். அவற் றின் மீது துணிகளைத் தூக்கினார்கள். அத்தோற்றம் முக்கோல் அந்தணன் முக்கோலில் தனது காவி உடையை இட்டுவைத்த தன்மையை ஒத்திருந்தது. பின்பு பூத்தொழிலைத் தலையிலுடைய எறிகோல்களை ஊன்றினார்கள்; பரிசைகளை நிரையாக வைத்தார்கள்; பல நிறமூட்டிய துணிகளைக் குத்துக் கால்களில் தைத்து அவற்றை வளைத்து வைத்தார்கள். இவ்வாறு அமைக்கப் பட்ட அரசனது கூடாரத்தின் வாயிலில் சட்டையிட்ட வலிய யவனர் புலியைச் சங்கலியிற் கட்டிவைத்த வடிவனை எழுதினர்.
அரசனது இல்
அங்குக் காலத்தின் அளவை அளந்து சொல்லுவோர்அரசனை வணங்கி வாழ்த்தி நாழிகை வட்டிலிற் சென்ற நாழிகை இத்தனை எனக் கூறினர். அப்போது தூவெண்துகிலுடுத்தபெண்கள் 1விளக்கைக் கொளுத்திக் காட்டினார்கள். அரசன் திரைச்சீலை தொங்க விடப்பட்ட உள்ளறையில் துயிலும்படி சென்றான்.
பாசறைக் காட்சி
தெருவின் நாற்சந்தி தழைகளால் வேயப்பட்டிருந்தது. அங்குக் காவலாக நிறுத்தப்பட்ட யானை கரும்பையும் நெற்கதிரோடு கலந்து கட்டிய இலையையும் அதிமதுரத் தழையையும் உண்ணாது அவற்றால் தனது நெற்றியைத்துடைத்தும் கொம்பின்மீது இட்ட தனது நெற்றியிடத்தே அவற்றைக்கொண்டும் நின்றது; யானைப் பாகர் யானைப் பேச்சாகிய வட மொழியைச் சொல்லிக் கவர் உடைய பரிக்கோலால் கவளத்தை உண்ணும்படி குத்தினார்கள். சிற்றாட்கள் நெய் கொப்பளிக்கின்ற திரிக்குழாயில் நீண்ட திரியைக் கொண்டு ஒழுங்காயமைத்த விளக்குகளைக் கொளுத்தினார்கள். விளக்குகள் அவியுந்தோறும் தம் கையிடத்துள்ள பந்தத்தைக் கொளுத் தினார்கள்.
அரசன் வெற்றி பெற்று மீளுமிடத்து வழியிற் காணும்காட்சி
தலைப்பாகையும் சட்டையும் தரித்து மெய்க்காப்பாளர் அரசனைக் காவலாகச் சூழ்ந்து திரிந்தனர். சட்டையிட்ட ஊமராகிய மிலேச்சர் பள்ளி கொள்ளுமிடத்தைச் சூழ்ந்து திரிந்தனர். இவ்வாறு மணியோசை அடங்கிய நடுச்சாமத்தும் மற்றையநாள் செய்யவிருக்கும் போரை நினைந்து அரசன் துயில் கொள்ளானாயினான். அடுத்தநாள் அவன் பகைவரைக்கொல்லக் கருதி வைத்த வாளைப் பிடித்து வெற்றியைப் பெற்றான்; பகை அரசர் விரும்பும் நிலங்களை வென்ற வெற்றியின் அடையாளமாக வெற்றிக்கொடியை உயர்த்தினான். அவன் மீண்டு வரும் காட்டு வழியிலே காயா கரிய பூக்களைப் பூத்தது. கொன்றை பொன்னிற மலர்களை மலர்ந்தது; வெண்காந்தள் உள்ளங்கைபோல் விரிந்தது. முறுகிய கொம்புடைய ஆண்மான் பெண்மானோடு துள்ளி விளையாடிற்று; திரண்ட தோன்றி இரத்தம்போற் பூத்தது. வெற்றிக் கறிகுறியாகிய கொம்பும் சங்கும் முழங்கின. நிரைத்த சேனைக்கும் குதிரைப் படைக்கும் முன் வந்த அரசனது தேரிற் பூட்டிய குதிரைகள் இராசமாதேவியின் செவி நிரம்பும்படி ஆரவாரித்தன.1
6. 1மதுரைக் காஞ்சி
அரசன் நல்லாட்சியில் நிகழ்வன
உலகம் பெரிய திரைகள் வீசுகின்ற கடலை எல்லையாக வுடையது. அது தேன்கூடு தூங்கும் உச்சியனவாகிய மலைகளையுடையது. திசைகள் குளிரவும், மரங்களும் பல்லுயிரும் தழைக்கவும் வானம் பொய்யாது பெய்தது. ஞாயிறும் திங்களும் களங்கமின்றி விளங்கின. விண்மீன்கள் செல்லும் முறைமையிற் சென்றன. மக்கள் பசியும் பிணியுமின்றி வாழ்ந்தனர். அரசன் உலகத்தைக் காத்தலால் திக்கு யானைகள் வருத்தந் தீர்ந்தன. இவ்வகை உலகைப் பொய்மொழியாத அமைச்சருடன் பல ஊழிகளிலும் தமது புகழ் நிலைக்கும்படி ஆண்ட உயர்ந்த அரசர் மரபில் உதித்தவனே! அச்சந்தரும் போர்க்களத்தே குறைத்தலைப் பிணங்கள் எழுந்து தாளத்துக்கு ஆடும்படி, கொம்புகளுடைய யானையின் பிணந்தின்ற பேய்மகள் ஆரவாரம் பொருந்திய துணங்கைக் கூத்தாடுவாள்.
இராவணனை அகத்தியர் தெற்கே இயங்காது தவிர்த்தது
சோறடுகின்ற பேய், வீரரின் தலையாகிய அடுப்பில் அரசருடைய இரத்தமாகிய உலை சினமாகிய தீயினாலே கொதித்துப் பொங்குகையால் வீர வளையணிந்த தோளுடைய கைகளை அகப்பையாகக் கொண்டு துழாவிச் சமைத்த ஊன்சோற்றைப் பிறங்கிடாத வீரர்க்கு வேள்வி செய்யும். இவ் வகைத்தாகிய போரை வெல்லும் படையுடைய இராவணன் தமிழ் நாட்டை ஆளாதபடி போக்கின பொதியின் மலையில் இருக்கும் அகத்தியனுக்குப் பின் சான்றோனாயிருக்கும் சிறப்புடையவனே!
வடிம்பலலம்ப நின்ற பாண்டியன்
முகபடாத்தையும் நெற்றிப்பட்டத்தையும் கோபத்தையும், மதத்தையு முடைய மலைபோலுயர்ந்த போர்க்களிறு கோபித்து வீரரைக் கொன்று திரிந்தது; பகைவர்மேற் செல்கின்ற குதிரைகளின் வேகத்தால் எழுகின்ற புழுதி ஞாயிற்றை மறைத்தது; குதிரைகள் பூட்டப்பட்ட தேர்கள் காற்றைப் போல் விரைந்துசென்றன; வாள்வீரர் வாளினால் விரைந்து வெட்டினர். இவ் வாறு நடக்கின்ற போரில் சேர சோழர்களாகிய இருபெருவேந்தரோடு குறுநில மன்னரும் இளைக்கும்படி பொருது வென்றதோ டமையாது குறிஞ்சிநில மன்னரையும் வென்று பகைவர் நிலங்களைக் கைக்கொண்டு பொன் னாரத்தை மார்பில் அணிந்த வடிம்பலம்பநின்ற பாண்டியன் மரபில் வந்த வேந்தே! பகைவர் கிட்டுதற்கரிய காவற்காட்டையும் உயர்ந்த கோபுர வாயில் களையும் நீண்ட மதிலையும் நிரைத்த1 சூட்டினையுமுடைய அம்புகள் உமிழும் அரணையும் மதியாது சென்று பகைவர் நிலங்களைக் கொண்டவனே!
கடலிடத்தே வேகமாக அடிக்கின்ற காற்றால் வளைகின்ற திரையைக் குறுக்கே பிளந்தோடும்படி பாய் விரித்துச் சென்று செல்வ மிகுதற்குக் காரண மாகிய சரக்குகளை இறக்கும்படி கரையைச் சேர்ந்து கருமேகஞ் சூழ்ந்த மலைகள் போல மரக்கலங்கள் சூழ்ந்து நிற்கும் கடலையும் அகழியையு முடைய சாலியூருக்குத் தலைவனே!
வயலிடத்துள்ள பயிர்கள் தழைக்கும்படி நீர்நிறைந்த குளங்களில் துலாக்கோலிற் கட்டி இறைக்கும் பன்றிப் பத்தல் என்னும் இறை கூடையின் ஓசை ஒருபால் எழும்; ஒருபால் எருதுகளிற் கட்டப்பட்ட மணி ஓசை ஒலிக் கும்; ஒருபால் பயிர்களிடத்தே விழும் கிளிகளை ஓட்டுவோர் ஓசை எழும்.
குட்ட நாட்டுச் சிறப்பு
இவற்றோடு நீல மலருடைய கழிமுள்ளிகள் நிற்கும் மணற் குன்றுகளுடைய கடற்கரையில் நின்று பரதவர் மகளிர் ஆடும் குரவை ஆரவாரமும் சேர்ந்து ஒலிக்கும். ஊர்களின் வெவ்வேறிடங்களில் விழாக் கொண்டாடும் ஓசைகளும் ஒலிக்கும். இவ்வாறு செல்வமிகுந்த ஊர்களி லிருந்து கிணைப் பொருநருக்குக் கன்றுடன் பிடிகளையும் கொம்புள்ள களிறு களையும் கொடுத்துப் பொற்றாமரைப் பூவைச் சூட்டி நல்ல அணிகலன் களையும் கொடுக்கும் குட்ட நாட்டாரை வென்ற வேந்தே!
நெடுஞ்செழியன் குறுநில மன்னரையும் சேர சோழரையும் வென்றது
இவ்வுலகில் தொழில்களுள் மேலாகச் சொல்லப்படும் உழவு வாணிகம் என்னும் இரண்டால் பெறப்பட்ட பெரிய செல்வத்தால் புகழ்நிறைந்த குடிகள் உனது நாட்டில் வாழ்வர். முதுவெள்ளிலை என்னும் குறுநில மன்னனது நாடு செல்வம் மிகுந்தது. வேனிலால் மேகம் வறப்பினும், தோன்றவேண்டிய காலத்தே தோன்றும் வெள்ளி தெற்கே எழினும் ஆற்று வெள்ளம் வந்து பெருகுதலால் அந்நாட்டில் விளைவுமிகும்;
முற்றி விளைந்த நெற்கதிர்கள் காற்றிலசைந்து ஒலிக்கும்; அவற்றை அறுப்போர் ஆரவாரிப்பர். அவ்விடத்தே தங்கிப் பறவைகள் ஓசை செய்யும், சுறாக்கள் திரிகின்ற கடலில் வெண்மணல் பரந்த கரையில் குடமுழாப் போன்ற காய்களைத் தாழைகள் தாங்கி நிற்கும். தாழைகளை வேலியாகவுடைய குளிர்ந்த இளமரக்காவில் வந்து வீசுகின்ற நீர்த் துவலையின் ஓசையும், படகில் மீன் பிடிக்கச் சென்றோர் வந்து இறங்கும் ஆரவாரமும், கரியபெரிய கழியிடத்துள்ள உப்புப் பாத்திகளில் வெள்ளிய உப்பை விற்கும் அளவர் ஒலியும், சிறுகுடியாய்ப் பெரிய தொழில்களைச் செய்வோரின் ஆரவாரமும் கலந்தொலிக்கும். இவ்வியல்புடைய நாடுகளையுடைய குறுநில மன்னரும், நானிலத்தோரும் ஏவல் கேட்கும்படி விரைந்து சென்றாய்; சென்று தீக் கொளுவித் தலையாலங் கானம் என்னும் ஊரிற் றங்கிப் பெருநிலமன்ன ரிருவரும் குறுநில மன்னர் ஐவரும் படும்படி போர்வென்று அவர் முரசைக் கொண்டு கள வேள்வி வேட்டாய். இவ்வாறு புரிந்தவலிய புயங்களை யுடையவனே!
நன்மக்களிடையே தலைமையும், சங்கும் முத்துமுடைய சங்கு குளிப்பார் சேரியும், கள்ளை உண்ணும் குடிகளுடைய ஊர்களுமுடைய கொற்கையிலுள்ளோர் விரும்பும் பொருநனே!
போரில் பாழடைந்த பகைவர் நாடு
நீ நின் ஊரிடத்தே இருத்தலை விரும்பாது பகைவர் மேற்சென்று பொருதலை மேற்கொள்வை; யானைகளைப் பரப்பிப் புறங்கொடுத்தார் மேற் செல்லாத படையோடு முருகன் பகைமேற் செல்வதுபோலத் தடையறப் பகைவரிடத்திற் செல்லுவை; சென்று நாவலந் தீவிலுள்ள சோழ மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் மண்டலங்களை அடிப்படுத்திப் பகைவர் நின் ஏவல் கேட்கும்படி ஒழுகுவை; நின்னோடு நட்புக் கொண்டவர் குடியை உயர்த்துவை. அம்முறையினால நின் குலத்துப் பெரியோர் ஒழுகிய அரசமுறை இதுவென்று அவர்க்கு விளக்குவை. பின்னர் அம்மண்டலங் களைச் சூழவிருக்கும் குறுநில மன்னர் அரண்களிலுள்ளவற்றை எளிதிற் கொண்டு அவற்றை எல்லாம் நினக்கெனப் பாதுகாவாது ஊரிடத்திருந்து பிறர்க்குக் கொடுப்பை. பனி ஒழுகும் மலைகளுள்ள காடுகளைக் கடந்து பகைவரின் உள்நாடுகளிலே புகுந்து அவர் அரண்மனைக் கைக்கொள்வை. தொன்றுதொட்டுவரும் பகைவர் நின் ஏவல் கேட்டு ஒழுகாமையால் அவர் நிலத்தை அடைந்து, மரங்களைச் சுட்டு மலைகளை நீறாக்கும் இடிபோன்றாய். அரசர் படை எடுக்கும் முறைமையில் எழுந்த நின்படையின் ஆரவாரம் விண்ணில் ஒலித்தது. குதிரைகள் செல்லும் வேகத்தில் தூசி எழுந்தது; சங்கும் கொம்பும் ஆர்த்தன; வீரர் மழை போல் அம்புகளைத் தூவினர்; காவற் காட்டை வெட்டி மதில்களைக் கைக்கொண்டு சுற்றத்தாரோடு கூடிய பகை வரின் வலியைத் தொலைத்தனர். மருத மரங்களை நெருப்பு உண்டது. நாடென்னும் பெயர் பெற்ற இடம் காடென்னும் பெயர் பெற்றது. பசுத்திரள் தங்குமிடம் புலி தங்குமிடமாயிற்று; ஊராயிருந்த இடங்கள் பாழாய்க் கிடந்தன. வளையணிந்த கையும் அழகுமுடைய மகளிர் துணங்கைக் கூத்தை யும் தாள அறுதியுடைய குரவைக் கூத்தையும் மறந்தனர். சான்றோர் இருந்த அம்பலங்களில் இரட்டை அடிகளையும் அச்சந்தரும் பார்வையினையு முடைய பேய்மகளிர் உலாவி ஆடினர். இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரிடத்து மக்களை உள்ளேவிடும் வாயில் காப்போர் நின்ற வாயில்களில் மன வருத்தமுடைய பெண்கள் இருந்து வருந்தி அழுதனர். பசியால் உலர்ந்த குடிகளுக்குப் பாதுகாவலாக அயல் நாடுகளிலுள்ள சுற்றத்தார் வந்து சேர்ந்தனர். பெரிய மாளிகைகளிலே வெந்து வீழ்ந்த கரிந்த குதிரிலே சூட்டினையுடைய கூகைச் சேவல் பேட்டுடனிருந்து குழறிற்று.
செங்கழுநீர் நெருங்கிவளரும் இடமகன்ற பொய்கையிடத்து யானை நின்றால் மறையும் வாட்கோரையுடன் சண்பகக் கோரையும் வளர்ந்தன. எருதுகள் உழுத விளைகின்ற வயல்களில் பெண்பன்றிகளோடு ஆண்பன்றிகள் ஓடித் திரிந்தன. நின் ஏவல் கேளாமையால் பகைவரது நாடுகள் இவ்வாறு கெட்டுப் பாழாயின. அந் நாடுகளை ஆளவேண்டுமாதலின் அங்குப் பல ஆண்டுகள் தங்கி யிருப்பை; நீ அங்குத் தங்குதலால் அந்நாடுகள் முன்னிலுமதிகம் சிறப்படைதற்குக் காரணமாயுள்ள வெல்லும் போரினையுடைய தலைவனே! தென்திசைக்குமரி வடதிசை இமயம், கிழக்கும் மேற்கும் கடல் ஆகிய எல்லைகளுக்குட்பட்ட நாட்டிலுள்ளார் எல்லாரும் நின் ஏவல் கேட்கும்படி வெற்றிமிகுந்த தன்மையுடையை ஒரு பொய் சொல்லித் தேவருலகை அமுதத்தோடு பெறலாமாயினும் அதனைவிரும்பாது மெய்யுடன் நட்புச் செய்தலுடையை. இவ்வுலகிலுள்ள எல்லாருடனும் தேவர்களும் பகைவர் களாய்ப் படை எடுத்துவரினும் பகைவருக் கஞ்சிப் பணியாய். தென்றிசைக் கண் மலைகள் நிறையும்படி வாணன் என்னும் அசுரன் வைத்த பொருட்டிரள் கிடைப்பதாயினும் பிறர் கூறும் பழி வருமென்பதால் அதனை விரும்பாய்; பிறர்க்குக் கொடுக்கும் புகழை விரும்புவை.
புகழுடையவனே! எல்லாராலும் தொழப்படும் பிறை நாள்தோறும் வளர்தல் போல உனது வெற்றித் திருவினால் உன் கால் வழியில் வருவோரின் வெற்றியும் தலைமுறை தலைமுறையாக வளர்வதாக. பகைவரது ஆக்கம் தேய்பிறைத் திங்கள் போல நாடோறும் தேய்வதாக. சேய்மைக் கண் சென்று விளங்கும் புகழ் ஒரு போதும் கெடாது நிலை பெறுவதாக.
திருவழுதி நாடென்னுஞ் சிறப்புப் பெயர் பெற்ற பாண்டிய மண்டலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பெரியோரால் வரையறுக் கப்பட்ட ஐவகை நிலங்களும் பொருந்தி இனிது விளங்கும்.
மருத நிலங்கள்
கீழ்த்திசைக் கடலில் நீரையுண்ட மேகம் மேற்றிசைக் கடற்கரையி லுள்ள மலையிற்றங்கி மருதநிலத்தே மழையைப் பொழியும். அதனால் எழுந்த வெள்ளம் கவலைக் கிழங்கு அகழ்ந்த குழிகளில் பாய்ந்து ஓசை செய்யும். மலையிடத்துள்ள யானைக்கூட்டங்கள் அஞ்சும்படி இடியோடு கூடிப் பெய்கின்ற பெருமழை மிகுதலால் ஆறு முட்டி ஆற்றிடைக் குறையில் ஏறும்படி வெள்ளம்பாயும். அவ்வெள்ளத்தைத் தேக்கி வைத்த குளத்து நீரால் வயல்களில் யானை நின்றால் தெரியாது வளர்ந்த நெல் விளைந்திருக்கும். மடுக்களிலும் பொய்கைகளிலும் தாமரைப் பூவும், இதழ் விரிந்த நீலப்பூவும் மெல்லிய இலையினையும் வண்டுகளையுமுடைய ஆம்பற்பூவும், வண்டுகள் தங்கும் நறுமணமுள்ள பிற பூக்களும் விளங்கும். ஒருபால், வளைந்த கொண்டையுடைய வலைஞர், சம்பங் கோழிகள் உறங்கும்படி வள்ளைக் கொடிகளைத் தள்ளி மீன்களை வாரிக்கொண்டு வந்து விலை கூறி விற்கும் கம்பலை எழும். கரும்பிற்கு இட்ட ஆலையிடத்து ஓசையும், களை பறிக்குமோசையும் ஒருபால் எழும். வயலிடத்துச் சேற்றிலே கிடக்கும் கிழ எருதின் வருத்தந் தீர்க்கும் கள்ளுண்ட களமரின் ஆரவாரமும் நெல்லறுப் போரின் ஆரவாரமும் ஒருபால் எழும். மழைத்துளிகளைத் தூறும் மேகந் தங்கும் திருப்பரங் குன்றில் விழாக் கொண்டாடு மோசையும், மகளிர் கூட்டம் தமது கூந்தல் தம்கணவர் மாலையுடன் சேரும்படி புதுப்புனலாடும் ஓசையும் ஒரு பால் வானில் ஒலிக்கும். பலவகைப்பட்ட ஓசைகளோடு பறவைகள் ஒலித்துக் கொண்டிருக்கும்படி மீன்களை அறுக்கின்ற பாணர் வீடுகளில் எழும் பாடல் ஓசையும் சேர்ந்து ஒலிக்கும்.
முல்லை நிலம்
முல்லை நிலத்தே வெள்ளிய முசுட்டைப்பூவும் முல்லைப் பூவும் பாறைகள் மீது உதிர்ந்து பரந்து கிடக்கும். கரிய காலினையுடைய வரகும் எள்ளின் காயும் முற்றியிருக்கும். ஒருபால் மக்கள் தினையினை அறுப்பர். அங்குமிங்கும் ஆழ்ந்த குழிகளில் இரத்தினங்கள் கிடந்து விளங்கும். பள்ளங் களில் நிற்கும் நீரில் நெய்தல் பூத்திருக்கும்.
குறிஞ்சி நிலம்
குறிஞ்சி நிலத்தே ஐவன நெல்லும் தோரை நெல்லும் வளர்ந்திருக்கும். ஒருபால் தினையிடத்தில் கிளியை ஓட்டுமோசையும், ஒருபால் அவரையைத் தின்னும் ஆமாவை ஓட்டும் ஓசையும், ஒருபால் குறவன் ஆண்பன்றியைப் பொறிக் கிடங்கில் வீழ்த்திக் கொன்றதினால் உண்டான ஓசையும் எழும். ஒருபால் வேங்கைப் பூவைப் பறிக்கும் மகளிர் புலி புலி என்னும் ஆரவார மும், ஒருபால் பன்றியைக் கொல்லும் புலியின் ஆரவாரமுமாகிய இவ் வோசைகளெல்லாம் மலையிடத்து எதிரொலி செய்யும்.
பாலை நிலம்
அருவிகளில்லாத அழகு குன்றின பாலை நிலத்து ஊகம்புல் வைக் கோல் போற் காய்ந்திருக்கும். மலை முழைஞ்சுகள் சூறாவளியை முகந்து கொள்ளும். அதனால் வேனிற் குன்று கடல்போல் ஒலிக்கும். இலையால் வேய்ந்த குடிசைகளில் வாழ்வோரும், மான்தோலாகிய படுக்கையையும், தழை விரவின மாலையையும் உடையோருமாகிய இளையோர் ஆறலைகள் வரைக் காக்கும்படி அரசர் ஆணையால் சுரத்தே வில்லோடு செல்வர்.
நெய்தல் நிலம்
நெய்தல் நிலத்தே மக்கள் முத்தையும் சங்கையும் கடல் தந்த பல் வகைப் பண்டங்களையும் விற்பர். யவன முதலிய நாட்டினர் குதிரை முதலிய வற்றைக் கொணர்ந்து கொடுத்து வெள்ளுப்பும் தீம்புளியும் கொழுத்த மீன் களைத் துணித்து உப்பிட்டு உலர்த்திய கருவாடும் என்றிவற்றைக் கொண்டு போவர்.
மதுரை நகர்ச் சிறப்பு
இவ்வைந்திணைப்பாங்கும் அழகுறப் பெற்றுப் பாடல் சான்ற நன் னாட்டு நடுவில் திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்னும் நான்கும் கூடுதலால் நான்மாடக்கூடல் எனப் பெயர் பெற்ற மதுரை மாநகரம் உள்ளது. அது பூமாதின் அழகிய முகம்போல் பொலிவு பெற் றிருக்கும். வையை ஆற்றங்கரையில் வானளாவி உயர்ந்து நெருக்கிய மரக் கிளைகளில் மந்திகள் தாவி விளையாடும்; மயில்கள் இருக்கும்; மலை உச்சி களினின்றும் குதிக்கும் நீர் கொண்டுவந்து குவித்தமணல் குவிந்து குன்று களாகக் கிடக்கும். இவ்வாறு மரங்களாலும் மணற் குன்றுகளாலும் சிறப்புடை யது ஆண்டுள்ள சோலைகள். நீராடுங் கரைகளிலே மரங்கள் உதிர்த்த மலர்கள் மாலைபோல வையை ஆற்றிற் செல்லும். அவ்வாற்றின் கண்ணுள்ள துறைகள்தோறும் பாண் சாதியினர் குடியிருப்புகளுண்டு. நகரைச் சூழ்ந்த அகழி, பெரிய செல்வமுடைய மானவிறல்வேளின் அம்பி ஊரை ஒத்த நாடுகளைப் பறிகொடுத்த அரசர் படை எடுத்து வந்து புறங்காட்டி ஓடுவதற் கேதுவாக மண்ணுற ஆழ்ந்திருக்கும். நகரைச் சூழ்ந்த மதில்கள் சுரங்கவழி யுடையனவாய் வானுற ஓங்கி நிற்கும். நெய் பூசுதலால் கருமை எய்திய நெடிய நிலைகளையும், திண்ணிய கதவினையுமுடைய வாயில் மீதமர்ந்த மாடங்கள்மேக முலாவும் மலைபோல உயர்ந்திருக்கும். மாந்தரும் மாவும் இடையறாது போக்குவரத்துச் செய்தலின் கோட்டைவாயில் இடையறாது ஓடு கின்ற வையை ஆற்றினைப் போன்றிருக்கும். வாயிலைக் கடந்த அளவில் அகன்ற தெருக்களும் அவற்றின் இருபுறங்களிலும் சாளரங்கள் பலவமைந்த வீடுகளும் உயர்ந்து தோன்றும்;
அவ்வீடுகளும் வீதியும் ஆறும் அதன் இரு கரையும்போல் தோன்றும். கடைவீதியில் பல மொழிகள் பேசும் மக்களின் மிக்க ஆரவாரம் எழும். ஒருபால் முரசை ஒலித்து விழாவைச் சாற்று மோசை காற்றால் கொந்தளிக்கும் கடலொலிபோல் முழங்கும். நீரைக் கையால் குடைந்து விளையாடினால் எழும் ஓசையுடைய வாத்தியங்களின் ஒலியைக் கேட்டோர் தெருக்களில் நின்று ஆடி ஆரவாரஞ் செய்வர். அங்காடித் தெரு விலே கோயில்களுக்கு விழாக்களை நடத்திக் கட்டின அழகிய கொடிகளும், படைத்ததலைவர் பெற்ற வெற்றியின் பொருட்டு எடுத்த வெற்றிக் கொடி களும், கட்கடைகளில் கள்ளின் களிப்பு மிகுதியைச் சாற்றுகின்ற கொடிகளும் பெரிய மலையிடத்து அருவி அசையுமாறு அசைந்து கொண்டிருக்கும்.
தேர்ப்படை
பனைமீனும் சங்கும் உலாவுகின்ற கடலில் பாய்மரம் அடியோடு முறியும்படி காற்றடிக்கையினால் மரக்கலங்கள் நங்கூரக்கற் கட்டிய கயிற் றுடனே நின்றுலாவி நீர்ச் சுழியிலே அகப்பட்டு நின்று சுழலும். அரசனுடைய யானைப்படை அம்மரக்கலங்களை ஒப்பக் கோபம் மிகுந்து சுழன்று குத்துக் கோற்காரரைக் கொன்று பாகரை எறிந்து காலிற் சங்கிலியைப் பிணித்திருக் கும் கட்டுத்தறியை முறித்தனவும் முன்னும் பின்னும் சங்கொலிக்கப் படுவனவுமாகிய மதயானைகளை உடையது. தேர்ப்படை, காற்றைப் பிளந்து ஞாயிற்றை அடையவேண்டுமென விரும்பிப் பறக்கும் சிறந்த காலையுடைய அன்னச் சேவலை ஒத்த வெண்ணிறக் குதிரைகள் பூட்டப் பெற்றுக் காற்றெனச் செல்லும் தேர்களையுடையது.
குதிரைப்படை
குதிரைப்படை வட்டமாகவும் நேராகவும் ஓடும் கடுஞ்செலவினை யுடையது. காலாட்படை கள்ளுண்டு மயங்கி யானைபோற் செல்லும் வீரரை யுடையது.
நாற்படையின் செலவுக்குப் பண்ணியம் விற்போர் அஞ்சியிருத்தல்
இவ்வியல்புடைய யானையும் தேரும் குதிரையும் வீரருமாகிய நாற்படைகள் வந்து மீள்கின்றமையால் இனிய உணவுப் பண்டங்களை விற்பாரும், பொற்பூக்கள் சூடிய தலையினரும் வீரக்கழலணிந்த காலினரு மாகிய வீரரின்முன் நின்று கொட்டப்படும் வீரமத்தளத்தினது கண்போன்று வட்டமான பூந்தட்டிலே இட்டு வந்த பூவினை விற்பாரும், சுண்ணம் விற்பாரும், சுண்ணாம்புடன் வெற்றிலையும் பாக்கும் விற்பாரும் இன்னு யிரஞ்சி ஏங்கியிருப்பர்; நாற்படைகளும் அகன்றபின்னர் வருத்தம் நீங்கி, மாட மாளிகை கூட கோபுரங்களின் குளிர்ந்த நிழலிலே இருந்து இளைப் பாறுவர்.
அங்காடி மகளிர்
இளமகளிர் அழகும் சிவந்தநிறமும் ஆடவரை வருத்தும் கண்களும், நாருரித்த ஆம்பற்றண்டு போன்ற நிறமுமுடையரா யிருப்பர்; நேரிய கூரிய பற்களுடைய வாயும், தொய்யிற் குழம்பால் கொடி எழுதப் பெற்றவும் நெகிழ்ந்து சிந்துவதுபோன்று அழகு தேமல் பரந்தவுமாகிய இளைய தனங் களும், மையொழுகினாற் போன்ற நெருங்கிய கூந்தலும், மயிலின் சாயலும், மெல்லிய பேச்சுமுடைய நல்லியல்பினர். அவர்கள் தம்மைக் கோலஞ் செய்து மெத்தென நடந்து கையைத் தட்டி, காமநுகர்ச்சியன்றி வேறொன்றுங் கல்லா இளைஞரோடு மகிழ்ந்து சேர்வர். சங்குபோல் நரைத்த மயிரினைக் கோதிப் பின்னே முடிந்த கிழப்பெண்டிர் அவ் வின்பம் நுகரும் அழகினை யுடையார் விரும்பும் பொருள்களை நறும்பூவுடன் ஏந்திச் சென்று மனைகடோறும் உலாவி விற்பர். மேகம் முகப்பவும் ஆறுகள் பெருகவும் கடலின் நீர் கூடுதல் குறைதல் இன்றியிருக்கும். அதுபோல அங்காடித் தெருவில் பலர் வந்து கொள்ளக் கொள்ளக் குறையாமலுங் கொண்டுவரக் கொண்டுவரப் பண்டங்கள் மிகாமலும் இருக்கும்.
விழாக்காணும் பெண்களின் முகம் அசையும் கொடிகளிடையே தோன்றுதல்
மாலைக்காலத்தே பூத்தொழிலுடைய பட்டாடைகளை உடுத்து அரை யிலே உடைவாளைச் செருகித் தோளிலே மேலாடைதரித்து, வீரக்கழலும் வேப்பமாலையும் மாணிக்க மாலையும் செங்கழுநீர் மாலையும் அணிந்த செல்வர், குதிரைகள் பூட்டிய தேரில் காலாட்கள் சூழ வீதிகளில் செல்வர். மாடங்கள்தோறும் நிலாமுற்றத்து நின்று விழாக்காணும் பொன்னாபரணங் களையும் பூத்தொழிலுடைய வளைகளையும் சிலம்பையும் அணிந்த மகளிரின் முகங்கள், கொடிகளின் மீது மந்தமாருதம் பட்டு அசைதலால் அவற்றின் இடையே மேகத்தில் மறையும் திங்கள் போல ஒருகால் தோன்றி ஒருகால் மறையும்.
மாலைக் காலத்துக் கடவுளருக்கு விழா எடுத்தல்
செல்வர் தமது அழகிய உடலிற் றடவியிருக்கும் புனுகு முதலியவற் றின் நறுமணம் தெருக்களிற் கமழும். பெண்களின் மதியை ஒத்த முகங்கள் மறுவின்றித் தோன்றும். சிவனை ஏனைக் கடவுளரிலும் மேலாகக் கொண்டு, வாடாத பூக்களையும் இதழ் குவியாத கண்ணினையும் அவியாகிய உண வினையு முடைய மாயோன் முருகன் முதலிய தெங்வங்கட்குப் பலி கொடுத்தற்கு அந்திக் காலத்திற்குச் சிறிது முன்பு தொடங்கிய விழாவில் வாத்தியங்கள் ஒலிக்கும். பௌத்தமதக் கொள்கையினராகிய இளமகளிர் தாமரைப் பூவைப் பிடித்தாற் போலச் சிறு பிள்ளை களை எடுத்துக்கொண்டு, தங்கணவரோடு பூசைக்கு வேண்டும் பூவினையும் தூபங்களையும் கைகளில் ஏந்திச்சென்று வணங்கும் பௌத்தப் பள்ளிகள் ஓரிடத்து விளங்கும்.
பல வேறு சமயத்தவர் உறையுமிடங்கள்
சிறந்த வேதங்களை ஓதி யாகாதி கருமங்களைச் செய்து பிரமங்கள் தாங்களேயாய் வீட்டின்பத்தை இவ்வுலகில்தானே அடைகின்ற பிரம வித்துக்கள் இருப்பிடம் ஒருபால் தோன்றும். மலைக் கூட்டம் போல மாட மாளிகைகள் உயர்ந்து தோன்றும் நகரில் பூக்களைக் கையிற் கொண்டு விரதங் காப்போர் துதிக்கின்ற அமணப் பள்ளியிடத்து மூன்றுகாலமும் மூவுலகின் செய்தியும் முழுதுணரும் சமணமுனிவர் உறைவர். அப்பால் துலாக் கோல் போன்று நடுவு நிலையுடைய தருமத்தைக் கூறும் அறங் கூறவை தோன்றும். யாகங்களைப் பண்ணிப் பெரிய சுவர்க்கத்தை ஏறப் போகும் அந்தணர் அரசனை அடக்குவர். அரசன் தன்னிடத்துள்ள நன்மையும் தீமையும் நெஞ்சத் தாலே கண்டு அத்தீங்குகளை ஆராய்ந்து அவற்றிலே ஒழுகாமல் தான் அடக்குகின்ற சுற்றத்தினையுடையன். காவிதிப்பட்டம் கட்டப் பெற்றவரும், தலைப்பாகை தரித்தவரும் அரசனை அறத்தினின்றும் திறம்பாமல் பாதுகாப் பவருமாகிய அமைச்சர் இருக்கை அப்பால் தோன்றும். இதற்கு அப்பால், பருந்துகள் இளைப்பாறியிருந்து பின்பு உயரப் பறக்கும் தன்மையவும் பல தொழில் மாட்சிமைப் பட்டவுமாகிய, பிறநாடுகளினின்றும் வந்து செல்பவர் களுடைய மனைகள் மலைகள் போன்று தோன்றும்.
இடைவிடாது மழை பெய்கின்றமையால் விளைவுடைய மோகூ ரிடத்துக் கோசர் விளங்கினாற் போல பழையன் என்னும் குறுநில மன்ன னுடைய, புரோகிதர், சேனாபதியர், தூதர், ஒற்றர் என்னும் நால்வகைப் பெரிய கூட்டத்தினரும் விளங்குவர்.
அந்திக் கடை
சங்கை அறுத்து வளையல் முதலியன செய்வோரும், மணிகளைத் துளையிடுவோரும், பொற்கொல்லரும், பொன்வாணிகரும், ஆடை விற் பாரும், செம்பை நிறுத்து வாங்குவாரும், பூக்களையும் சாந்தையும் விற்பாரும், ஓவியக்காரரும், நெய்தற் றொழில் செய்வோரும் பிறருங்கூடி அந்திக் கடை யில் ஒருவர்க்கொருவர் கால் நெருங்கும்படி நிற்பர். அவ்வாரவாரம் பனங் குருத்து மாலையணிந்த சேரனுடைய பெரிய நாளோலக்க இருப்பிலே அறிவுடையோர் கூடித் தருக்கங்களைக் கூறும் ஆரவாரம் போன்றிருந்தது.
அறக் கூழ்ச்சாலை
அறக்கூழ்ச் சாலையில் பலாப்பழம், வாழைப்பழம், முந்திரிகைப்பழம் முதலிய பழங்களையும், பாகற்காய், வாழைக்காய், வழுதுணங்காய் முதலிய காய்களையும் இலைக்கறிகளையும் கண்டசருக்கரைத் தேற்றையும், இறைச்சி யுடைய சோற்றையும், கிழங்குகளுடனே பால் முதலியவற்றையும் பரிமாறு வோர் கொண்டுவந்து பசி தாகங்களால் வருந்துவார்க்கும் வறியவர்க்கும் இடுவர்.
மரக்கலங்களிலிருந்து பண்டங்களை இறக்கும் ஓசை
மரக்கலங்கள் கொண்டுவந்த பண்டங்களைப் பறிப்பதால் பட்டினத்தே பெரிய ஆரவாரம் எழும். பண்டங்களை இறக்குவதால் பல்லிடங்களிலும் எழும் ஓசை குஞ்சுக்கு இரையைக் கவர்ந்து பறந்து செல்கின்ற பல்வகைப் பறவைகளின் ஆரவாரத்தை ஒத்திருக்கும்.
மாலைக் காலத்து மகளிர் செயல்கள்
ஞாயிறு மேற்குமலையில் மறைந்ததும், நிறை உவாத் தோன்றும் போது பெரிய நகரிடத்துவாழும் பெண்ணைப் பெண்காமுறும் அழகிய மகளிர் ஒளியுடைய விளக்கை ஏற்றுவார்கள்; தாம் காதலிக்கும் இனிய கணவரைச் சேர்தற்கு நெடிய கூந்தலிற்றடவிய மயிர்ச்சாந்தை அலைத்து நீக்குவார்கள்; கத்தூரியையும் நறிய சந்தனத்தையும் தடவுவார்கள்; மெல்லிய நூலாற் செய்த ஆடைக்கு அகிற்புகை ஊட்டுவார்கள். இவ்வாறு மாலைக் காலம் ஓசை உடையதாயிருக்கும். கணவரைப் பிரிந்து கூட்டத்தை விரும்பி யிருந்தார்க்கு நோய் செய்யும் முன் யாமம் கழிந்தது.
விலை மகளிர்
நீல ஆகாயத்தே விளையாடும் தெய்வமகளிர் வருத்துமாறுபோலத் தம்மைக் கண்டோருடைய நெஞ்சை வருத்திப் பொருள் வாங்கும் பரத்தையர் விளக்கின் ஒளியில் பலரும் ஒன்று சேரக்கூடுவர். கடற்கரைத் துறையில் குவிந்தமணலில் யாழ் வாசித்து மத்தளங் கொட்டி ஆடுவர். அதனை வெறுத்துக் குவளை மலரால் தொடுத்த மாலையை ஆடையின் விளிம்பிலே படும்படி அணிவர். வெள்ளிய பூக்களாற் கட்டிய மாலைகளை ஆகாயத்தில் சென்று நாறும்படி கொண்டையில் வைத்து முடிவர். தமது வடிவழகை விரும்பி வந்த உள்ளூராரும் பிறநாட்டாருமாகிய செல்வ இளைஞரைப் பல வஞ்சனையுடைய தம் மொழிகளால் கூட்டிச் சென்று அவர்கள் மார்பு தம் மார்பிற் படும்படி முயங்குவர்.
பொருள் பெறுமளவும் அன்புடையார் போல வஞ்சனையாகத் தழுவி அவர்களின் செல்வம் எல்லாவற்றையும் வாங்குவர். பூவிரிகின்ற காலமறிந்து அதன் நுண்ணிய தாதை உண்டு தாதற்ற வறிய பூவைப் பின் நினையாமல் நீங்கும் வண்டுகளைப்போல் தம்மைக் கலந் தாருடைய நெஞ்சு கலங்கும்படி அவருடைய கூட்டத்தைக் கைவிடுவர்; முற் பட்ட பலரைச் சேர்ந்த சேர்க்கையால் குலைந்த ஒப்பனைகளைப் பின்னும் அழகு செய்வர். அரும்புகள் அலரும் செங்கழுநீர்ப் பூவையும் ஏனைய மலர் களையும் கொண்டு மழைக்கு மலர்ந்த சிறிய புதரைப்போல் தோன்றும்படி தமது கூந்தலை வேய்ந்துகொள்வர்; அலரும் பருவமடைந்து மலர்ந்த அப்புதிய விடுபூக்கள் தெருக்களெங்கும் கமழும். வளையணிந்த கையுடைய அவ்விலைமாதர் கை வீசி நடந்து மனைகடோறும் சென்று பழமரத்தைத் தேடிச் சென்று அதன் பழங்களை உண்ணும் புள்ளினம் போலப் பொருள் கொடுத்தற்குரிய இளைஞரோடு விளையாடுவர்.
திருமால் பிறந்த ஓணநாள் விழா
அவுணர் கூட்டத்தை வென்றவரும் பொன்னாற் செய்த மாலை யணிந்தவருமாகிய திருமால் பிறந்த ஓணநாளில் ஊரிடத்து விழா நடக்கும். போர்த்தினவுடைய மறவர் கள்ளுண்டு ஒருவரோடொருவர் பொருது நெற்றியிலே காயம் பட்டவர்களாகத் தோன்றுவர். போர் பழகும் யானை ஓட்டுதலால் ஓடுகின்ற யானயைப் பரிக்கோற்காரர் சென்று பிடிப்பர்; அதனைப் பிடிக்குமளவும் போர் யானை அணுகாதபடி நீலத்துணியில் இட்டு வைத்திருக்கும் 1கப்பணத்தைச் சிதறுவர்; கப்பணங்கள் காலைத்துளைக்க அஞ்சாதவர்களாகிய மறவர் நெற்றியிற்பட்ட காயங்களுடன் திரிவர்.
குழந்தையை ஈன்று இடுக்கண் நீங்கிய மகளிர் நீராடிக் கடவுளைப் பரவுதல்
ஈன்றணிமை நீங்கிய செல்வ மகளிர் தெய்வத்தினருளால் ஓர் இடுக்கணுமற்றுக் குளத்து நீரிற் குளிப்பர். அப்போது முதற் சூற்கொண்ட மகளிர் இவ்வாறே இடுக்கணின்றிப் புதல்வரைப் பயத்தல் வேண்டுமென்று தெய்வத்தைப் பரவுவர்; பின்பு தமது சுற்றத்துடன் பூசைக்கு வேண்டும் பொருள்கள் பலவற்றுடன் 2தேவராட்டியரோடு யாழிற் செவ்வழிப் பண்ணை வாசித்து முழவு கொட்டிச் சிறுபறை ஒலிப்ப மயில் போல மெத்தென மெத்தென நடந்து கையாற்றொழுது பாற்சோறு முதலியவற்றை உண்பர். கார் காலத்தே பூத்த குறிஞ்சிப் பூவைச் சூடிய மகளிர் கடப்ப மாலையைச் சூடு கின்ற முருகனை மெய்யிடத்தே நிறுத்தி வழிபட்டுக் கைகோத்து மன்று கடோறும் குரவையாடுவர். இவற்றோடு சேரிகடோறும் எழும் பாட்டுக்களும் கலத்தலினாலே வெவ்வேறு ஆரவாரம் ஒலிக்கும். நன்னன் கொண்டாடும் பிறந்த நாளிடத்துச் சேரியிலுள்ளார் கொண்டாடுகின்ற விழாவால் ஆரவாரம் உண்டானாற் போலக் கம்பலை நிறைந்த முதற்சாமம் கழிந்தது.
யாமத்தில் தெய்வங்கள் இயங்குதல்
பதினைந்து நாழிகைகொண்ட பாதிஇரவில் இரண்டாஞ் சாமத்துக்கும் நாலாம் சாமத்துக்குமிடையில் தெய்வங்கள் உலாவும். சங்குகள் ஆரவார மின்றிக் கிடக்கும்; மடப் பத்தினையும் களிப்பினையும் ஒள்ளிய அணிகலன் களையுமுடைய மகளிர் துயில் கொள்வர். இனிய பாகோடு சேர்த்துக் கரைத்த மாவை வைத்திருக்கும் அப்பவாணிகர் இருந்து உறங்குவர். திருநாளிலே கூத்தாடும் கூத்தர் கூத்து ஒழிந்து உறங்குவர். பேய்களும் தெய்வங்களும் உறவுகொண்டு சுழன்று திரியும்.
நகர் காவலர்
நகர் காவலர் புலிபோல் வீரமுடையர்; துயில் கொள்ளாத கண்ணர்; அஞ்சா நெஞ்சர்; களவுத் தொழிலையும் தந்திரங்களையும் கண்டறியும் நுண் ணறிவினர்; குறி தப்பாத அம்பினர்; தெருக்களில் நீர் பெருக்கெடுத்தோடும் காரிருள் மூடிய யாமங்களிலும் ஊர் சுற்றிவரும் இயல்பினர்; கறுத்த உட லினர்; கரிய உடையினர்; வாள்கைக் கொண்ட கையினர்; மெல்லிய நூலேணி சுற்றிய அரையினர்; விழித்தகண் இமைக்கு முன் மறைந்தோடும் வலியுடைய கள்வரையும் கடிதிற் பிடிக்கும் ஆற்றலுடையர். இவ்வியல்பினராகிய காவலர் உலாவிக் காவல் புரிதலால் எங்கும் ஒலியின்றி அடங்கிய கடலைப் போல் அடங்கியிருக்கும். படுக்கையில் துயில்வோர் இனிது துயில்வர்.
வைகறையில் நிகழ்வன
வைகறைக் காலத்தே வேதத்தை முற்ற ஓதுகின்ற அந்தணர் அவற்றிலுள்ள துதிகளைப் பாடுவர். பரிக்கோற்காரர் யானைகளுக்குக் கவளத்தைத் தீற்றுவர். தேரிற் பூட்டும் குதிரைகள் பந்தியில் நின்று புல்லை மெல்லும். பண்டம் விற்பார் பல்வேறு பண்டங்களுடைய தமது கடைகளை மெழுகுவர். கள் விற்போர் களிப்பினையுடைய கள்ளுக்கு விலை கூறுவர். திண்ணிய சுவர்களுடைய வீடுகளின் கதவுகள் திறப்பதாலும் மூடுவதாலும் ஒலி செய்யும். கள்ளை உண்டுகளித்தோர் முழங்குகின்ற மழலை வார்த்தை களைக் கூறுவர். நின்றேத்துவார் நின்று வாழ்த்துவர். 1வைதாளிகர் தத்தமது துறைக்குரிய பாடல்களைப் பாடுவர். நாழிகை சொல்வோர் சொல்லப் பள்ளி எழுச்சி முரசு ஒலிக்கும். பொறியினையுடைய கோழிச் சேவல் விடியற் காலத்தை அறிவித்துக் கூவும். சேவற் பறவைகள் தத்தம் பெடைகளை அழைத்து நின்று தீங்குரல் செய்யும். கூட்டில் உறைகின்ற கரடி, புலி முதலிய விலங்குகள் முழங்கும். பிடியோடு கூடிய யானைகள் பிளிறும். போரில் முதுகு காட்டிய வீரரதும் வெட்டுண்ட வீரரதும் யானைகளும், பகைவர் ஊரைச் சுடுகின்ற விளக்கிலே பார்த்து நிரைகாத்து நின்ற வீரரை மாளவெட்டி வேல்கோலாக அடித்து வந்த பசுத்திரளும், தோற்ற வேந்தர் திறையாகக் கொண்டு வந்த ஆபரணங்களும் அரண்மனையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும். இவ்வாறு கங்கையாறு கடலிற் கலந்தாற் போல உலகிற் பொருள்களெல்லாம் மதுரையை அடையும்.
அரசன் துயிலெழுந்து செய்வன
இம்மாநகரில் கோயில் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற பாண்டியன், விளங்குகின்ற அணிகலன்கள் பூண்ட மகளிர் பொன்னாற் செய்த வட்டில்களிலே வார்த்த நறுமணம் வீசும் கள்ளைக் கொடுக்கக் கொடுக்க அதனைஉண்பான்; உண்டு சிறந்த கற்பும், அழகிய தேமலும், மணி களழுத்திய பொன்னணிகளும், மாந்தளிர் போன்ற நிறமும், கூரிய எயிறும், விளங்குகின்ற மகரக்குழை பொருந்திய காதும், மலர்ந்த செந்தாமரை போன்ற முகமும், வளைகளுமுடைய அரசியின் தோளில் முயங்குவான், தூங்கு மாலைகள் தொங்கும் படுக்கையில் துயில் கொள்ளுவான். தான் செய்யும் “நல்லறனும் ஒண் பொருளும் சிந்தித்து” வைகறை யாமத்துத் துயிலெழு வான்; எழுந்து காலைக்கடன்களை முடிப்பான்; மார்பிலே மாலை தரித்து, கையிலே வீரவளையையும் விரலிலே கணையாழியையும் செறித்து, கஞ்சி யிட்ட துகிலை உடுத்து, அதன் மேல் அணியும் அணிகலன்களை அழகுற அணிந்து கொலுமண்டபத்தில் வீற்றிருப்பான். இருந்த அளவிலே ஏனாதிப் பட்டம் முதலிய சிறப்புப் பெற்ற படைத்தலைவர் அவனது வெற்றித் திறத்தை வாழ்த்துவர்.
அரசன் ஓலக்க மண்டபத்திலிருந்து வீரர்க்கும் பிறர்க்கும் பரிசளித்தல்
பின்பு அவன் தான் நாடு நகர் பெறும்படியாகவும் வெற்றி சிறக்கும் படியாகவும் உதவிய வீரரை எல்லாம் அழைத்தும் பாவலருடனே பாணர் பாட்டியரை வரவேற்றும் யானை தேர் என்பன போன்ற பரிசுகள் அளிப்பான். அவ்வாறு அவன் பற்பல பொருள்களைக் கொடுத்தலால் அந் நாட்டில் வாழும் குடிமக்கள் செல்வ வளம்பெற்றிருப்பர். இவ்வாறெல்லாம் சிறப்புற் றிருக்கும் வேந்தே! வாழ்க.
இவ்வுலகில் புகழ் ஓங்க வாழ்ந்த மன்னர் மாண்டனர்
இவ்வுலகிற் புகழுடைய பற்பல வேந்தர் வாழ்ந்தனர். புகழ் செறிந்த வேந்தர் செல்வவருவாயினையுடைய தமது நகரிலிருந்து யாழ் வாசித்தாற் போன்று பாடும் விறலியர் அணியும்படி வளைகளை நாடோறும் நல்கினர். கொழுத்த இறைச்சியைத் தின்று சோற்றை வெறுத்துக் கள்ளருந்தி அவற் றாலும் ஆசை தணியப் பெறாதபாணர் மகிழும்படி பல பிடியானைகளையும், தம் சுற்றத்தினர் மகிழும்படி பகை அரசர் அரண்களை அழித்துக் கவர்ந்த பொருள்களையும் வழங்கினர். விடியற் காலையில் வந்து பாடும்1சூதர்க்குத் தேருடன் குதிரையைக் கொடுத்தனர். பெரிய குப்பிகள் வற்றும்படி கள்ளுண்டு வஞ்சி சூடிப் பூசிப் புலர்ந்த சந்தனத்தை யுடையோரைத் தமக்குப் படைத்தலைவராகக் கொண்டனர்; தம்மை வழிபட்டோர் ஏவல் கேட்டு வழி படாதோர் நாடுகள் திறை அளித்து ஏவல் கேட்கும்படி போர்மேற் சென்றனர்;
உயரப் பறக்கும் பருந்துகளும் பறக்கலாற்றாத உச்சியுடைய அரண்களுடைய பாசறை யிடத்தே விடியற்காலத்தே நாள் முரசம் ஒலிக்கும்படி தங்கினர். பகைவர் படைக்குக் கேடுண்டாக வென்று எண்ணிப் பின்னும் அழிக்க வேண்டுமென்று விரும்பி நிலங்களை அழித்தனர். இவ்வகை வலியினையும் வெற்றி முரசினையு முடையராய் விளங்கினர். இவ்வாறு புகழ் விளங்கும் படியும் உலகம் ஏவல் கேட்கும்படியும் வாழ்ந்து பிறப்பற முயலாது மாண்ட மன்னர் கடற்கரை மணலிலும் பலராவர். அண்ணலே! அப் பயனின்மை யாலே நீயும் அவ்வாறு கழிதல் ஆகா தென்று இவ்வாழ்விற் பெரியதாயிருப்ப தொரு பொருளை யான் கூறுகின்றேன். அஃது என்னாற் காட்டுதலரிது. அதனைக் கண்ணனைப் போன்றவும் யாகசாலை முது குடுமியைப் போன்றவும் தொல்லாணை நல்லாசிரியரிடத்திற் கேட்பாயாக.
கந்தழியிடத்திற் கண்டவியப்பையும் பின்பு பெற்ற அமைதியையும் தலைமை பெற்ற பலர் சொல்ல நீ கேட்பாயாக. பெருமானே! நல்ல ஊழிக்காலத்தே இத்துணைக் காலமிருத்தி யெனப் பால்வரை தெய்வத்தாலே வரையப்பட்டு நீ அறுதியாகப் பெற்ற நாள் முழுதும் இனிதாகப் பேரின்பத்தை நுகர்ந்திருப்பாயாக. அதனை நுகராது ஐம்பொறிகட்கும் முன்னிற்கப் படுவனவாகிய இந்நுகர் பொருள் கட்கு நின்னோடு என்ன உறவுண்டு? இனி உன்னிடத்து உண்டாகிய மாயை கெடுவதாக.
7. 1நெடுநல்வாடை
கூதிர் காலத்தின் இயல்பு
பருவம் பொய்யாத முகில்கள் மேருவை வலமாக வந்து உலகம் குளிரும்படி மழைபெய்தன. மந்தைகளை அடித்து ஓட்டும் கோலைக் கையிலுடைய இடையர் வெள்ளத்தை வெறுத்தவர்களாய் ஏறுகளுடைய மந்தைகளை மேயும்படி மேட்டுநிலத்தே விட்டனர். அவர்கள் மார்பிடத் தணிந்த காந்தள் இதழ்களாற் கட்டிய மாலைகள் மழைத்துளிகள் வீழ்தலால் அழகு அழிந்தன. குளிரால் வருந்தும் இடையர் கையிடத்தே நெருப்பைக் கொண்டு அலகுடன் அலகு சேர்ந்து பற்பறை கொட்டும்படி நடுங்கினர். விலங்குகள் மேயாது நின்றன. குரங்குகள் குளிரால் நடுங்கின. காற்று மிகுதி யால் பறவைகள் மரங்களினின்றும் நிலத்தில் வீழ்ந்தன. பசுக்கள் கன்றுக்குப் பால் கொடாது காலால் உதைத்தன. புதர்களில் நின்ற முசுட்டை வெண்ணிற மலர்களை மலர்ந்தது. பீர்க்குப் பொன்னிறப் பூவைப் பூத்தது.
விரைந்து பாயும் நீருக்கெதிரே கயல் மீன்கள் நீந்திச்சென்றன. மழை ஓய்ந்ததும் பசியகா லுடைய கொக்குத்திரளும் வரியுடைய நாரைக்கூட்டமும் பரந்த கரிய வண்ட லும் சேறும் பரந்த ஈரமுடைய வெண்மணலிலிருந்து மீன்களை உண்டன. வானில் எழுந்த வெள்ளிய முகில்கள் துளிகளைச் சிதறின. வயல்களில் நீருக்குமேல் உயர்ந்து வளர்ந்த நெற் பயிர்களீன்ற கதிர்கள் முற்றி விளைந் திருந்தன. பருத்த அடியினையுடைய கமுகின் நீலமணி போன்ற தலையினை யுடைய காய்கள் உள்ளே நீர் நிறைந்தாற்போல் திரண்டு முற்றியிருந்தன. மலர்கள் நிறைந்த சோலையிடத்துள்ள மரங்கள் கிளைகளிலே தங்கிய நீரைச் சொரிந்தன. உயர்ந்த மாடங்களும் செல்வமும் மலிந்த பழைய ஊரிடத்து அகன்று நீண்ட தெருக்கள் ஆறு கிடந்தாற் போல் காட்சியளித்தன. தழை விரவித் தொடுத்த மாலைகளைக் கழுத்தில் அணிந்தவரும், வண்டு மொய்க் கின்ற கள்ளை உண்டுகளிப்பு மிகுந்தவர்களும், முன்னும்பின்னும் தொங்கும் படி உடைஅணிந்தவர்களும்,
முறுக்கேறிய உடம்பினருமாகிய மிலேச்சர் மழைத்துளிக்கு அஞ்சாதவர்களாய் தெருக்களிலே திரிந்தனர். மாடப் புறாக்கள் இராக்காலமும் பகற்காலமும் அறியாது மயங்கின; சேவற் புறா தனது பேட்டுடன் வெளியிற் சென்று இரைதேடி உண்ணாது பலகை மீது இருந்து கடுத்தகால்கள் ஆறும்படி காலை மாற்றி மாற்றி இருந்தது.
மகளிர் கூந்தலுக்கு நறும்புகை ஊட்டுதல்
வேலை புரிவோர் காவலுடைய வீடுகளில் சாந்தரைக்கும் அம்மி யிலே கத்தூரி முதலிய பசிய கூட்டை அரைத்தனர். ஆகவே, வடநாட்டார் கொண்டுவந்த வெள்ளிய சந்தனக் கற்களும் தெற்கே கிடைக்கின்ற சந்தனக் கட்டைகளும் பயன்படாது கிடந்தன. குளிர் மிகுதியால் கூந்தலிடத்து மாலையைச் சூட முடியாத மகளிர் அதனிடத்துச் சில மலர் வைத்து முடிக்க விரும்பிச், சந்தனக் கட்டையை எரித்து அதனிடத்தே அகிற்கட்டையையும் செவ்வரக்கையும் இட்டுப்புகைத்தனர். கைதேர்ந்த கம்மியரால் அழகு பெறச் செய்யப்பட்ட செந்நிற ஆலவட்டங்கள் சிவந்த உறைகளில் இடப்பட்டும் சிலந்தியின் வெள்ளிய நூலாற் சூழப்பட்டும் வளைந்த முளைகளில் தொங்கின.
இளையோரும் முதியோரும் தீக்காய்ந்தனர்
படுக்கையிடத்தில் இளவேனிற் காலத்துக் குளிர்ந்த தென்றற் காற்றை வீசுகின்ற சாளரங்களில் உலாவுவாரின்மையால் அவற்றின் இரண்டு கதவுகளும் சேரும்படி தாழிட்டடைக்கப்பட்டிருந்தன. வாடைக் காற்றுக் கல்லென்னும் ஓசையுடைய சிறு திவலைகளை எங்கும் பரப்பிற்று. இளை யோரும் முதியோரும் குளிர் மிகுதியால் குவிந்த வாயுடைய கரகத்தில் நீருண்ணாது தீச்சட்டியிலுள்ள நெருப்பில் குளிர் காய்ந்தனர். ஆடும் மகளிர் தாம்பாடுகின்ற பாடல்களைக் கரிய தண்டினையுடைய யாழில் வாசித்தற்கு நரம்புகளைத் தமது தனங்களிடத்தே தடவிவெப்பம் ஊட்டி யாழைப் பண் நிற்கும் முறையில் நிறுத்தினார்கள். இவ்வாறு கார்காலம் மழை மிகுந்து கூதிர் காலமாக நிலை பெற்றது.
------------------------------------------------------------------------
சிற்ப நூலார் அரசனுக்கு மாளிகை அமைத்தல்
சித்திரைத் திங்களின் மத்தியில் ஒரு நாளில் பதினைந்தாவது நாழிகையில் அரசனுடைய மனை அமைப்பதற்கு நாள் குறிக்கப்பட்டது. சிற்பநூலோர் அம் முகூர்த்தத்தில் நூலை நேரே பிடித்துத் திசையை அறிந்து அத்திசைகளுக்குரிய கடவுளரை வழிபட்டனர்; பின்பு அரசனுக்கு வேண்டிய மனைகளையும் வாயில்களையும் மண்டபங்களையும் வகுத்தனர். அவை களைச் சுற்றி மதில் இடப்பட்டது. மதிலின் வாயில் இரும்பினால் அமைக்கப் பட்டுச் செவ்வரக்குப் பூசப்பட்டது. அதன் கதவுகள் சேர்த்துத் தாழிடும்படி இரண்டாக அமைக்கப்பட்டன. 1உத்தரக்கற்கவியில் பலமரங்கள் இடை வெளியின்றிச் செருகப்பட்டன. உத்தரக் கற்கவியின் நடுவே இலக்குமியும் இருபுறத்தும் செங்கழுநீர்ப் பூவுமாகிய வேலைப்பாடு செய்யப் பட்டிருந்தது. நிலைகள் மீது நெய் பூசிச் சிறுவெண்கடுகு அப்பப்பட்டிருந்தது. வாயில் மலையை இடையே திறந்தாற்போன்று யானைகள் வெற்றிக் கொடியுடன் செல்லும்படி உயரமுடையது. அதனிடத்தே கவரிமாவும் அன்னப்புள்ளும் தாவித்திரிந்தன. முற்றம் வெண்மணல் பரப்பப்பட்டு இலக்குமி தங்கும் சிறப்புப் பெற்றிருந்தது.
அந்தப்புரம்
பந்தியில் நின்று வெறுத்தனவும் பிடரிமயிரினை யுடையனவுமாகிய குதிரைகள் புல்லை அதக்குதலால் ஓசை எழுந்தது. நிலா முற்றத்தில் நீர் வந்து கொப்பளிக்கும்படி அமைக்கப்பட்ட குழாய் மீனின் அங்காந்தவாயைப் போன்றிருந்தது. குழாயினின்றும் விழுந்த நீர் நிறைதலினாலே கலங்கி ஓடும் அருவி ஓசை செய்தது. அதன் பக்கத்தே மயில்கள் கொம்பு வாத்தியத்தின் ஒலி போல் ஆரவாரித்தன. இவ்வோசைகளெல்லாம் மலைகளில் எழுகின்ற ஆரவாரத்தை ஒத்தன.
கோயிலின் அந்தப் புரத்தேயுள்ள தூண்கள் நீல மணியால் அமைக்கப்பட்டவை போன்று கருமையும் திரட்சியும் பெற் றிருந்தன. உயர்ந்த சுவர்கள் செம்பினாற் செய்தாற் போன்ற பல வேலைப் பாடுகளுடையனவாயிருந்தன. சுவரின் பல விடங்களில் பல பூக்களை யுடைய கொடிகள் விளங்கும்படி செஞ்சாந்தினால் எழுதப்பட்டிருந்தன. அவை பல நிறமுடையனவாகத் தோன்றின. கோயிலின் அந்தப்புரத்தே யவனர் செய்த பாவை விளக்கின் நெய் நிறைந்த தகளியில் பெரிய திரிகள் கொளுத்தி எரிய விடப்பட்டிருந்தன. அரசி இருக்கும் அந்தப்புரம் விளக்கில் நெய் வற்றி ஒளி மழுங்கிய காலத்துப் பாண்டியனல்லது வேறு குற்றேவல் செய்யும் ஆண்கள் திரியைத் தூண்டாத அரிய காவலையுடையது.
அரசி பள்ளிகொள்ளும் கட்டில்
பள்ளியறையிலே பாண்டிமாதேவி பள்ளிகொள்வாள். அவள் பள்ளி கொள்ளும் கட்டில் வட்டவடிவினது; நாற்பதியாண்டு நிறைந்து போர்க் களத்தே பட்ட களிற்றின் தானாக வீழ்ந்த மருப்பினைச் சீவிக் கம்மியரால் மூட்டுவாய் தெரியாமல் பொருத்தி அமைக்கப்பட்டது. தச்சர் தமது உளி களால் இலையின் வடிவங்களை அதன் இடையே செதுக்கி யுள்ளார்கள்; பல நிற மயிர்களை1 உள்ளே வைத்து அவற்றின் மேலே சிங்கம் முதலியவற்றை வேட்டையாடுகின்ற வடிவாகச் செய்த தகடுகளை வைத்தும், முல்லைப் பூக்களையும் பிறபூக்களையும் அமைத்தும் சாளரங்களாகத் திறந்த வெளி களை ஆணிகளால் தைத்தும் பல வேலைப்பாடுகள் செய்துள்ளார்கள். நூலிற் கோக்கப்பட்ட முத்து மாலைகள் கட்டிலைச் சூழ்ந்து தொங்கும்படி தூக்கப் பட்டன. நடுவேயுள்ள வெளி புலியின் நிறமுடைய நாடாவினாற் பின்னப் பட்டது. கால்கள் சூல்கொண்ட பெண்களின் தனங்கள் போன்று திரண்டு ஓரிடத்தில் சிறுமையும் ஓரிடத்தில் பருமையும் தோன்றும்படி வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தன. இவ்வியல்பினதாகிய படுக்கைமீது பேட்டுடன் சேர்ந்த அன்னச் சேவலின் தூவியைப் பரப்பி அதன்மேல் கஞ்சி தோய்த்த வெள்ளைத் துகிலினை விரித்து அதன் மீது செங்கழுநீர் முதலியவற்றின் பூவிதழ்கள் பரப்பப்பட்டன.
தோழியர் அரசியைத் தேற்றுதல்
இராசாமாதேவி அப்படுக்கை மீது கிடந்து அரசனது பிரிவாற்றா மையால் துயர் உழந்து தனது அணிகலன் முதலியவற்றை வெறுத்தாள். முத்துக்களைக் கோத்துச் செய்த கச்சுச் சுமந்த தனங்கள் மீது தாலிநாண் ஒன்றுமே கிடந்தது; பொன்வளைகள் கிடந்து தழும்பேறிய கையில் வலம்புரிச் சங்காற் செய்த வளையலும் காப்பாகக் கட்டிய நூலுமே கிடந்தன; பூத்தொழிலுடைய பட்டாடையை உடுக்கும் அரையில் நூலாற் செய்த மாசேறிய ஆடை கிடந்தது; கையினால் தடவாமையால் உலர்ந்த மெத்தென்ற மயிர்கள் சிதைந்து நெற்றியிற் படும்படி கிடந்தன. இவ்வாறு கூதிர் காலத்து நடுயாமத்தே அரசி துயிலின்றிக் கிடந்தாள். அப்பொழுது அவள் தோழியர், “உனது மனதுக்கினியவர் இப்பொழுதே வருவர்” என்பன போன்ற பொருளோடு புணராப் பொய்மொழியும் மெய் மொழியுமாகிய உரைகள் பல வற்றைச் சொல்லித் தேற்றினர்; அவள் அவற்றைக் கேட்டும் தேறாளாயினாள்.
மெழுகு பூசிவழித்த கட்டிலின் மேற் கட்டி மேலே புதிதாக எழுதிய திங்களின் பக்கத்தே இருக்கும் உரோகிணியைப் பார்த்து, “இது போன்று யாமும் பிரிவின்றியிருக்கப் பெற்றிலேமோ” என்று சிந்தித்துப் பெருமூச்செறிந்தாள். கண்களினின்றும் ததும்புகின்ற நீரைத் தனது 1முடக்கு மோதிரம் அணிந்த சிவந்த விரலால் எடுத்துத் தெறிந்தாள். மாந்தளிர் போன்ற மேனியும் அம்மேனியின் இடையே பரந்த சுணங்கும், மூங்கில் போற் றிரண்ட மெல்லிய தோளும், கச்சினால் வலித்துக் கட்டப்பட்ட தாமரை முகை போன்ற தனங்களும், ஒடுங்கி வளைகின்ற இடையும், மெத்தென்ற தன்மையும் உடையராகிய தோழியர், அவளது செம்பஞ்சு ஊட்டப்படாத அடிகளைத் துயில் உண்டாகுமாறு மெல்ல வருடினார்கள். நிறங்கள் ஊட்டி எழுதப் பெறாத வடிவுடைய ஓவியம் போன்றவளாய் தனிமையோடு கிடக்கும் அன்புமிகு கின்ற அரிவைக்குக் கொற்றவையை நோக்கிப் பரவுகின்றவள் கூறுகின்றாள்.
கொற்றவையைப் பரவும் தேவராட்டி கூறுகின்றாள்.
அம்மா! கேட்பாயாக. சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமை யூரான், இருங்கோ வேண்மான், பொருநன் முதலில் எழுவரோடு பொருதல் குறித்துச் சென்ற அரசன் மாற்றாரின் பாசறையிடத்துள்ளான்.
நெற்றிப் பட்டத்தையுடைய யானைகளைக் கொன்ற வீரர் மாற்றாரின் விளங்கும் வாளால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டனர். அரசன் அவர்கள் புண் களைப் பரிகரித்தற்கு நடுயாமத்தே நித்திரை கொள்ளாதவனாய் வெளியே போந்து திரிவான். வாடைக்காற்று வீசுந்தோறும் விளக்குகள் தெற்கு நோக்கிய தலையுடையனவாய் எரியும். வேப்பமாலையைத் தலையிலே கட்டிய வேலுடன் முன்னே நடந்து செல்கின்ற படைத்தலைவன் புண்பட்ட வீரரை முறையே காட்டுவான். அரசன் அவர்களின் அகம் மலரும்படி முகமலர்ந்து இன்னுரை கூறுவான். ஆங்காங்குக் கட்டி நிற்கும் குதிரைகள் தம்மீது விழும் மழைத்துளிகளை உதறும். அரசன் வாளெடுத்தற்குத் தோளிலே வைத்த வலக்கையனாய் இடத்தோளினின்றும் நழுவி வீழ்கின்ற உத்தரியத்தை இடப்பக்கதே அணைப்பான். முத்துமாலை கட்டப்பட்ட வெற்றிக்குடை மழையை மறைக்கும். இவ்வாறு பாசறையிலிருந்து போர் செய்கின்ற தொழில் அரசனுக்கு வெற்றியுண்டாகி இனிது முடிவதாக.
8. 1குறிஞ்சிப்பாட்டு
(இது தோழி நற்றாய்க்கு அறத்தொடு நின்றதாகச் செய்யப்பட்ட பாடல். அறத்தொடு நின்ற லென்பது களவை வெளிப்படுத்தல். தலைவி பாங்கிக்கு அறத்தொடு நிற்கும், பாங்கி செவிலிக்கு அறத்தொடு நிற்கும், செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும், நற்றாய் தந்தை தன்னையருக்கு அறத்தொடு நிற்கும்.)
தோழி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல்
தாயே வாழ்வாயாக; அன்னாய்! யான் கூறுவதை விரும்பிக் கேட்பா யாக. விளங்குகின்ற நெற்றியையுடைய எனது தோழி தன்னுயிரைத்தான் வைத்திராமைக்குக் காரணமாகிய தாங்குதற்கரிய ஓர் எண்ணத்தை மறைத்து வைத்திருக்கின்றாள், அந்நினைவினால் அவளது ஆபரணங்கள் நெகிழ்ந் தன. மருந்தினால் மாற்றற் கரிய அவளது நோயை உனக்குச் சொல்லுதல் எளிதன்று;
ஆகவே அதனை நான் என்னுள்ளே அடக்கி வைக்கலாயினேன். அவளுடைய அழகு கெட்டது; தோள்கள் மெலிந்தன; வளைகள் கழன்றன. இவ்வாறு நிகழும்படி அவள் தனிமையால் வருந்தும் வருத்தத்தைக் கண்டும் அது நேர்வதற்குரிய காரணம் யாது என அறியும் அறிவு இல்லையாயினை. நீ வருத்தமடைந்து ஊரிடத்துக் கட்டினாலும் கழங்கினாலும் அறிந்து குறி சொல்லுவாரை வினாவினாய். அவர் அது தெய்வத்தால் நேர்ந்த வருத்தம் எனக்கூறினர். ஆதலினால் நீ பன்னிற மலர்களும் தூபங்களும் சந்தனம் முதலியவும் கொடுத்துப் பல தெய்வங்களை வழிப்பட்டனை. அதனால் அந் நோய் தணியாமை கண்டு வருத்தமுற்று வருந்தினாய். யான் அவளிடத் துள்ள ஆற்றுதற்கரியநோய் யாதெனக் கேட்டேன்.
அவள் என்னை நோக்கி, “முத்தாலும் மணியாலும் பொன்னாலும் செய்த அரிய அணிகலன்கள் தொலைந்தனவாயினும் அவை பின் கிடைக்கவும் பெறும். அதுபோலன்றிக் குணங்களின் அமைதியும், மேம்பாடும், ஒழுக்கமும் கெட்டால் அக் குற்றத்தைக் கழுவி முன்போலப் புகழை நிறுத்துதல் குற்றமற்ற அறிவினை யுடைய முனிவர்க்கும் முடிவதன்று எனப் பழைய நூல்களை உணர்ந்த அறிஞர் கூறுவர். தலைவரும் யானும் காதல் மணஞ் செய்து கொண்டோ மென்பதை நாம் இருவரும் தாய்க்குத் தெரிவித்துக் கொள்வோமாயின் நமக்குப் புகழ் இன்றிப் பழி வருவதில்லை யாகும். இவ்வாறு நாம் நம் காதல் மணத்தை வெளிப்படுத்தியபின்பு, தமர் தலைவர்க்கே நம்மைக் கொடுக்க நேர்ந்திலராயினும் நாம் உயிர் போகும்வரையும் இவ்வருத்தத்தைப் பொறுத் திருந்தால் நமக்கு மறுமையில் இக்கூட்டம் வருவதாகும் என்று கூறினாள்; மான் போன்ற பார்வையின்றி மயங்கிய நோக்கங்கொண்டு செயலொழிந்து அயர்ந்து ஆற்றமுடியாத நோய் உடையளாயினாள். நினக்கும் இவள் வருத்தத்துக்கும் அஞ்சி இரண்டு பெரிய அச்சத்தாலே யானும் இருபகை அரசரைச் சந்து செய்விக்கும் சான்றோரைப் போல வருந்துகின்றேன். இருகுடிகளும் ஒத்திருத்தலையும் குணத்தையும் சுற்றத்து உதவிகளையும் ஒத்து நோக்கி இக்களவு மணத்தைச் செய்தோம். முன்பு அது நிகழ்ந்த வகையைச் சொல்ல விரும்பினேன். தாயே! அதனைக் கேட்டுக் கோபம் கொள்ளா திருப்பாயாக.
தலைவியும் தோழியும் தினைப்புனத்தே கிளி ஓட்டுதல்
“பெரிய கதிர்களையுடைய தினையுள் வீழ்கின்ற கிளிகளை ஓட்டிப் பகற்பொழுது கழியாமுன் வீடுசேர்வீராக” என்று எங்களைப் புனத்தே போக்கா நின்றாய். யாங்களும் சென்று மரத்தினுச்சியிலே அமைக்கப்பட்ட பிரம்பினால் பின்னி அமைத்த பரணில் ஏறி இருந்தோம்; இருந்து கவணும் தட்டையும் பிறவுமாகிய கிளியோட்டும் கருவிகளை முறையே கையில் எடுத்து, “ஆயோ” என்றும் சொற்களை நடுவே சொல்லிக் கிளிகளை ஓட்டி னோம். வெயில் மிகுந்த பகற்காலத்தே பறவைகள் தாம் விரும்பும் சேர்க்கை களுக்குச் சென்றன. கடலிடத்தே நீரை உண்ட மேகம் குறு முழக்கஞ் செய்து முருகக் கடவுளின் வேல் போல் விளங்கும்படி மின்னி மலையிடத்து மழையைப் பொழிந்தது. மலைச் சிகரத்தினின்றும் வெள்ளிய அருவி குதித்தோடிற்று.
நாங்கள் சுனை ஆடினோம்
பளிங்கைக் கரைத்து ஊற்றினாற் போன்ற நீரிடத்து விருப்புடையே மாய் அதனிடத்தே விளையாடி நமக்கு விருப்பந்தரும் பாடல்களைப் பாடினோம். பொன்னிலே அழுந்தின நீலம் போன்று முதுகிலே தொங்கும் கூந்தலின் நீரைப் பிழிந்தோம். எங்கள் கண்கள் சிவந்திருந்தன.
பூக்களைப் பறித்து பாறையில் குவித்தோம்
பின்னர் அம்மலைச் சாரலிடத்துள்ள சிவந்த பூக்களையும் மலை எருக்கு, சிவந்த கோடல், ஆம்பல், அனிச்சம், செங்கழுநீர், குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, செம்மணி, பெருமூங்கில், எறுழ், மராமரம், கூவிரம், வடவனம், வெள்ளிய வொட்டப்பாலை, பஞ்சாய்க் கோரை, வெண்காக் கவணம், கருவிளம், பயினி, வானி, குரவம், பச்சிலை, மகிழ், காயா, ஆவிரை, சிறு மூங்கில், சூரை, சிறுபூளை, குன்றி, முருக்கிலை, மருது, கோங்ரு, மஞ்சாடி, பாதிரி, செருந்தி, புனலி, கரந்தை, காட்டுமல்லிகை, மா, தில்லை, பாலை, முல்லை, கஞ்சா, பிடவம், செங்கருங்காலி, வாழை, வள்ளி, நெய்தல், தெங்கின் பாளை, செந்தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, பவழக்கான் மல்லிகை, சாதி கருந்தாமரைக்கொடி, வெண்கோடல், தாழை, சுரபுன்னை, காஞ்சி, கருங்கு வளை, ஓமை, மாவம், இண்டம், இலவம், கொன்றை, அடும்பு, ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம், அசோகம், வஞ்சி, பிச்சி, கருநொச்சி, தும்பை, திருத்துழாய், தோன்றி, நந்தியாவட்டம், நறை, புன்னை, பருத்தி, பீர்க்கு, குருக்கத்தி, சந்தனம், அகில், நாரத்தம், நாகம், இருவாட்சி, குந்தம், வேங்கை, ஒண் செங்காந்தள் முதலியவற்றின் விரும்பப்படும் பூக்களை எல்லாம் பறித்து மழையினாற் கழுவப்பட்ட பாறைமீது குவித்தோம்; ஆயோ என்று இடையிடையே ஒலித்துக் கிளிகளை ஓட்டினோம்; தழைகளைக் கொய்து அரையிலே தழை உடையை உடுத்தோம்; மெல்லிய மலர்களை மிருதுவான கரிய கூந்தலில் அழகுபெறச் சாத்தினோம்.
அழகிய தோன்றல் அவ்விடத்தே வந்தான்
பின்னர் நெருப்புப் போன்ற நிறத்துடன் விளங்கும் அழகிய தளிருடைய அசோகின் பூந்தாது உதிர்கின்ற குளிர்ந்த நிழலில் போயிருந் தோம். அப்பொழுது ஓர் அழகிய தோன்றல் வந்தான். அவன் மயிரிடத்து மயிர்ச் சாந்தைப் பூசி உலர்த்தி, அகிற்புகை ஊட்டி, அகில் நெய் தடவி முடிந்த நீலமணி போன்ற கொண்டை உடையன். அவன், மலையிடத்தும் நிலத்தும் மரக்கிளைகளிடத்தும் சுனைகளிடத்தும் பூத்த பன்னிற மலர்களால் தொடுத்த மாலைகளையும் தாழம்பூவையும் முடியில் அணிந்து முருகன் போல் விளங்கினான்; சந்தனம் பூசிய அவனது மார்பிடத்துப்பல ஆபரணங்கள் விளங்கின; சென்னியிலே சுற்றிய பிச்சிமாலையும் காதிற் செருகிய அசோகந்தளிரும் அழகு செய்தன. அவன் ஆடையின்மேல் துலங்கும்படி கச்சுக் கட்டியிருந்தான். பூண் இறுகப் பெற்ற கையில் வில்லையும் அம்பை யும் ஏந்தி நின்றான். அவன், தன்னொடெதிர்த்த ஏறுகளை எல்லாம் வென்று புதிய ஆவைக்காணும் ஏறுபோல நம்முன் தோன்றினான். மூங்கில் முகை போன்ற வெள்ளிய பற்களுடைய நாய்கள் இமை கொட்டாது எங்களைப் பார்த்து வளைந்து வரலாயின.
யாம் மிகுந்த அச்சம் அடைந்தேமாய் வேறு இடத்தே செல்லா நின்றோம். அப்போது அப்பெருந்தகையாம் வெருவுதற்கு அஞ்சி இனிய மொழிகளைச் சொல்லி எமது அழகைப் புகழ்ந்துரைத்தான். பின்னர், “இளையீர்” என எம்மை விளித்து, “இவ்விடத்தே கணைக்குத் தப்பி வந்த யானையைப் பார்த்ததுண்டோ?” என்று கேட்டான். அதற்கு யாம் பதில் எதுவும் கூறாது நின்றோம். அதுகண்டு அப்பெருந்தகை “மெல்லியலீர் தப்பி ஓடிவந்த விலங்கைக் காட்டித்தாரீராயினும் என்னுடன் ஒரு வார்த்தை பேசுதல் நுங்கட்குப் பழியாகுமோ” என்று கூறினான்; தழை பரந்த பூக்க ளுடைய கொம்பரை முறித்துப் பரிக்கோலை மதியாத மதயானைபோல ஓச்சிக் கல்லென்னும் ஓசைபடக் குரைக்கும் வேட்டை நாய்களின் ஓசையை மாற்றி யாங்கள் வார்த்தை சொல்வதோர் காலத்தை எதிர்பார்த்து நின்றான்.
அவன் நம்மை யானையினின்றும் காத்தான்
இஃது இவ்வாறாகக் குறிய கால்களையும் தினை வைக்கோலினால் வேய்ந்த கூரையையும் உடைய குடிசையிலிருக்கும் குறமகன் பிணை போன்ற நோக்கையுடைய மனைவி தானே சமைத்த கள்ளை எடுத்துக் கொடுக்க அதனை உண்டு தினைப் புனத்தைக் காவல் செய்ய மறந்தான். ஆகவே யானை தினைப்புனத்தை அழித்தது. அதனைக்கண்டு வருத்தம் மிகுந்தவனாகிய குறவன் பாம்பின் வடிவினதாகி வில்லை வளைத்து அம்பை எய்து, தட்டையைத் தட்டி, வாயை மடித்துச் சீழ்க்கை அடித்து யானையைப் புனத்தினின்றும் வெருட்டினான். கோபம் மிகுந்த யானை மரங்களை முறித்து இடியேறுபோல் ஆரவாரஞ்செய்து கையை நிலத்தில் அடித்து எமனைப் போல எங்கள்மீது நெருங்கி வந்தது. நாம் அதனைக்கண்டு நடுக்கமுற்று உயிர் பிழைக்கும் ஓரிடத்தைப் பெறவேண்டி நாணைக் கைவிட்டு வளைகள் ஒலிப்ப அக்குரிசிலைச் சார்ந்து தெய்வமேறின மயில்போல நடுங்கி நின்றோம். அக்குரிசில் வில்லை நன்றாக வளைந்து யானையின் முகத்தில் அம்பைச் செலுத்தினான். புள்ளியினையும் புகரினையுமுடைய மத்தகத்தில் அம்புபட்டு உருவின புண்ணிலிருந்து, முருகனால் வருத்தமுற்ற மகளிர்க்கு வெறியாடு களத்தில் குருதி குதிக்குமாறு இரத்தம் பெருகிற்று. அவ்வேழம் அவ்விடத்தில் நிற்றல் ஆற்றாது புறங்கொடுத்து ஓடிற்று.
ஆற்றோட்டம் எங்களை இழுத்துச் சென்றது
அதன்பின் நாம், முருகவேளுக்கு மலையிலுறையும் தெய்வமகளிர் கைகோத்தாடுவது போன்று கடம்பின் அரையினை நெருங்கச் சூழ்ந்த மாலைபோல் கை கோத்துக்கொண்டு ஆற்றின் பெருக்கிலே குதித்து விளையாடினோம். இடிகரையினின்ற வாழை மரத்தை இழுப்பது போல ஆற்றோட்டம் எங்களை இழுத்துச் சென்றது. அது கண்டு அழகிய மாலை அணிந்த ஆண்டகை விரைந்து வந்து எங்களை எடுத்துத் தலைவியைப் பார்த்து, “நினது அழகிய நலத்தை நுகர்வேன், நின்னை நீங்குவேனெனச் சிறிது மஞ்சாதே” என்று சொன்னான்; அவளின் ஒளி பொருந்திய நெற்றியைத் துடைத்து நெடுநாள் இக்களவொழுக்கம் நிகழவேண்டுமென நினைத்து என் முகத்தை நோக்கிச் சிரித்தான். அங்ஙனம் அவன் அணுகிய போது அவளுக்கு இயல்பாகிய நாணமும் அச்சமும் அவ்விடத்து வந்து தோன்றுகையினாலே விரைய அவனிடத்தினின்றும் நீங்க முயன்றாள்; அவன் விடாதவனாய் அங்ஙனம் நின்ற நிலையிலே கையாலே அணைத்து இவள் மார்பு தன் மார்பிலே ஒடுங்கும்படி தழுவினான்.
மயில்கள் கயிற்றில் ஏறி ஆடுமகள் போல் தளரும் மலை நாடு
மிளகு பழம் சிந்திக்கிடக்கும் நீண்ட பாறையிடத்து மாம்பழங்களும் பலாப்பழங்களும் உதிர்ந்து கிடக்கும். இவற்றின் சாற்றினால் முற்றிய கட்டெளிவை நீரெனக் கருதி மயில்கள் உண்ணும்; உண்டு ஊர்களின் நடுவே கொண்டாடும் விழாக்களில் வாத்தியங்கள் ஒலிப்பக் கயிற்றிலே ஏறி ஆடுகின்ற மகளிர் தாளத்தினால் தளருமாறு போலத் தளரும். இவ்வியல்பின தாகிய மலை நாட்டையுடையவன் தான் முயங்குதலால் இவள் உள்ளத்து விரும்புவது மேல் வரைந்து கொண்டு இல்லறம் நடத்துவதாயிருக்கு மென்று உட்கொண்டான்; பலரும் வந்து உண்ணும்படி அகன்ற கதவு திறந்து கிடக்கின்ற வாயிலையுடைய செல்வமிக்க நகரிடத்து மிடாக்களில் வருவார்க் கெல்லாம் இடும்படி சோறு சமைக்கப்பெறும். இவ்வாறு செல்வமிக்க மனை பொலிவு பெறும்படி உயர்ந்த எமது சுற்றத்தினர் விருந்துண்டு எஞ்சிய நிணமொழுகும் நெய்மிக்க சோற்றை நீ இட நானுண்ணல் உயர்ந்ததாகும்” என்று கூறினான்.
மாலைக் காலம்
அவன் மலையிடத்துள்ள முருகனைக் கை தொழுது பிரியேன் எனக்கூறி அவ்விடத்துள்ள தெளிந்த அருவி நீரைக் குடித்துச் சூள்உறவு செய்தான். தேவர்களும் விரும்பும் குகைகளிலுள்ள பூஞ்சோலையிலே களிறு கூட்டின கூட்டத்தை அன்றைப் பகற் பொழுதெல்லாம் போக்கினான். ஞாயிறு ஏழு குதிரை பூண்டி தேரை யேறிப் பகற் காலம் கழியும்படி மேற்கு மலையில் மறைந்தது. மான் கூட்டம் மரத்தடியிற் திரண்டது. பசுக்கூட்டங்கள் கன்றுகளை அழைக்கும் குரலுடையனவாய் மன்றுகள் நிறையும்படி புகுந்தன. கொம்பு போன்ற வளைந்த வாயையுடைய அன்றில் உயர்ந்த பெரிய பனையின் உள் மடலிலேயிருந்து பேட்டை அழைத்தது.
பாம்பு தான் மேய்தல் காரணமாகத் தன்னிடத்துள்ள மாணிக்கத்தை ஈன்றது. இடையர் பல இடங்களினின்றும் ஆம்பல் என்னும் பண்ணினையுடைய அழகிய இனிய குழலிடத்துத் தெளிந்த ஓசையைப் பலகாலும் பரப்பினர். ஆம்பலின் அழகிய இதழ்கள் முறுக்கவிழ்ந்தன. பார்ப்பார்அந்திக் காலத்துச் செய்யும் தொழில்களைச் செய்தனர். செல்வமுடைய மனைகளில் வளைகளை அணிந்த மகளிர் விளக்கை ஏற்றி அந்திக்காலக் கடமைகளைச் செய்தனர். காட்டில் வாழ்வார் விண்ணைத்தீண்டும் பரணிலிருந்து தீக்கடை கோலாலே நெருப்பைப் பிறப்பித்து எரித்தனர். மேகம் பெரிய மலையிடத்தைச் சூழ்ந்து இருண்டது. காட்டிலுள்ள விலங்குகளெல்லாம் கல்லென்னும் ஓசை யுடையவாய் ஒன்றையொன்று மாறிக் கூப்பிட்டன. பறவைகள் காடுகளி லிருந்து ஒலித்தன. இவ்வாறு கோபித்த வேந்தனுடைய போரைப் போல இருண்ட மாலைக் காலம் வந்தது.
தலைவி வரைந்து போவதை விரும்பினாள்
“விளங்குகின்ற பூணினையுடையாய்! உனது சுற்றத்தார் உனது முன்கையைப் பிடித்து நமக்குத்தர நாட்டிலுள்ளார் எல்லோமும் அறியும் நல்ல கலியாணத்தைப் பின்பு நிகழ்த்துவோம். களவொழுக்கத்தாற் பெறும் பேரின்பம் பெறுதற்கு இங்ஙனம் சில நாள் ஒழுகினேம் என்று நினைந்து நெஞ்சு கலங்கா திருப்பாய்” என அவள் நெஞ்சில் வருத்தந் தீரும்படி சொன்னான்; சொல்லிப் பசுவோடு நிற்கும் கன்றுபோல விடாமல் எம்மோடு கூட வந்து நம்மூர் வாயிலிலுள்ள நீருண்ணும் துறையில் எம்மைவிட்டு மீண்டான். அச்சேர்க்கை தொடங்கிய அந் நாட்டோன்றிய விருப்பத்தோடே எந்நாளும் அவன் இரவுக் குறியிடத்தே வருவான்.
அங்ஙனம் வரும் போதெல்லாம் ஊர் காவலர் கடுகிக் காத்தாராயினும், கோபமுடைய நாய் குரைத்ததாயினும், நீ துயிலுணர்ந்தா யாயினும், நிலவு வெளிப்பட்டு எறித்ததாயினும், மூங்கிலை ஒத்த அவள் மெல்லிய தோளில் பெறும் இனிய துயிலைப் பெறாது போவான்.
நாம் செய்யாத குறியைக் குறியெனக் கருதித் தலைவியை எதிர்ப்படாது சென்றாலும் அவன் மறுபடியும் நமது மனைக்கு வருவதற்கு வெறுப்படைய மாட்டான். அவன் இளமைப் பருவத்தைக் கடந்தவனும் அல்லன்; நற்குணங்கள் மாறுதற்குரிய செல்வச் செருக்கால் தன்குலத்துக்குரிய நற்குணங்களில் எந்நாளும் நீங்கியவனுமல்லன். பிறர் கூறும் பழிமொழி முதலியவற்றால் இரவுக் குறியிலே கூடுதற்கு வருதல் ஒழுக்க மன்றென்று நினைத்து அவன் வரைந்து கொண்டு இல்லறம் நடத்துதலே நல்லொழுக்கமென்று தலைவி துணிந்தாள். அதனால் இவளுடைய மதர்த்த கண்கள் கலங்கின. பின்னர் இவள், அவர் வருகின்ற மலையிடம் புலி, யாளி முதலியன துன்பம் செய்வனவாயிருக்கு மென்று நினைத்தாள். அப்போது அவள் வலையிலகப்பட்ட மயிலைப் போலத் தனது நலம் போம்படி மெலிந்து, கண்களில் வீழ்கின்ற நீர் நாள் தோறும் மார்பிலே துளிப்பக் கலங்கா நின்றாள். இதுகாண் நல்வினை நிகழ்ந்த வண்ணம். (இவ்வாறு தோழி நற்றாய்க்கு அறத்தொடு நின்றாள்.)
9. 1பட்டினப்பாலை
காவிரி ஆறு வற்றாத வளமுடையது
குற்றமில்லாத புகழையுடைய காவிரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையிற் றோன்றிக் கடலிடத்தே பாயும். வெள்ளி என்னும் விண்மீது தான் நிற்றற்குரிய வடதிசையில் நில்லாது தென் திசைக்கண் சேரினும் தன்னைப் பாடுகின்றதும் துளியாகிய உணவை உடையதுமாகிய வானம்பாடி மழைத் துளியைப் பெறாது புலரும்படி வானம் பொய்ப்பினும் பொன்கொழிக்கும் காவிரியிடத்தில் நீர் வறளாது. இவ்வகைச் சிறப்பமைந்த ஆற்றின் கரை யிடத்தே சோழ வளநாடுள்ளது.
மருத நிலம்
மருத நிலத்தே ஒன்றற்கொன்று அண்மையிலுள்ள ஊர்களுண்டு. வயல்கள் மிக்க விளைவைக் கொடுக்கும். ஆங்காங்கு இடப்பட்டுள்ள கருப் பஞ்சாறு காய்ச்சும் கொட்டில்களில் எழுந்த தீம்புகை படுதலால் வயலிடத்தே யுள்ள நெய்தற்பூ வாடும். செந்நெற் கதிரை உண்டு வயிறு பருத்த எருமைகள் ஆங்காங்கு கிடக்கும் நெற்குதிர்களின் நிழலில் உறங்கும். விளைவு நீங்காத அகன்ற கழனிகளில் குலைத்தெங்கும், குலை வாழையும், காய்க்கமுகும், மணநாறும் மஞ்சளும், பல இன மரங்களும், குலைகளையுடைய பனையும், பரந்த அடியினையுடைய சேம்பும், முளையினையுடைய இஞ்சியும் நெருங்கி வளரும்.
முற்றத்தே சிறுவர் தேருருட்டி விளையாடுவர்
சீறூர்களிடத்தே மனைகளின் முற்றத்து உலரவைத்த நெல்லைக் கோழி தின்னாதபடி ஒள்ளிய நுதலும் அழகுமுடைய சிறு பெண்கள் காவலாக இருப்பர். அவர்கள் நெல்லைத் தின்னும் கோழிகளைத் தமது பொன்னாற் செய்த மகரக் குழைகளால் எறிந்து ஓட்டுவர். காலிடத்தே தண்டை அணிந்த சிறார் குதிரை பூட்டாமற் கையாலுருட்டும் மூன்று உருளைகளுடைய சிறு தேர்களை முற்றத்தே உருட்டி விளையாடுவர். அம்மரக் குழைகள் அத்தேருருள்களை உருளாதபடி தடுக்கும்.
நெய்தல் நிலத்தே நெல்லேற்றிய படகுகள் கழிகளில் கட்டி நிற்கும்
சோழநாட்டின் பல ஊர்களிலும் சென்று உமணர் விற்ற உப்பின் விலையாகப் பெற்ற நெல்லை ஏற்றிவந்த படகுகள் பந்தியிலே நிற்கும் குதிரைகளைப் போலக் கழிசூழ்ந்த நெய்தல் நிலத்தே கட்டி நிற்கும். புது வருவாயுடைய தோப்புகளுக்கு வெளியே பூஞ்சோலைகள் காணப்படும். அச்சோலைகளிலுள்ள பொய்கைகளில் திங்களைச் சூழ்ந்து மகம் என்னும் விண்மீன் விளங்கினாற் போன்று மணங்கமழும் பன்னிற மலர்கள் நிரம்ப மலர்ந்திருக்கும். காவிரிப்பூம்பட்டினத்தில் இம்மையிலும் மறுமையிலும் காமவின்பத்தைக் கொடுக்கும் ஏரிகள் எங்கும் காணப்படும்.
அடுக்களையினின்றும் பெருகிய கஞ்சியைக் குடிக்கச் சென்ற மாடுகள் போரிடும்
உணவு அடும் அடுக்களைகளுக்குப் புலியின் வடிவங்கள் செதுக்கப் பட்டனவும் பலகைகளைப் பொருத்திச் செய்யப்படனவுமாகிய கதவுகள் உண்டு. அதனைச் சுற்றியுள்ள மதிலின் வாயிலில் திருமகளின் வடிவம் தீட்டப்பட்டிருக்கும். அடுக்களையிற் சமைத்த மிக்க சோற்றை வடித்தலால் ஒழுகிய கஞ்சி ஆற்றின் வெள்ளம் போலப் பெருகி ஓடும். அதனைக் குடிக்க விரும்பிச் சென்ற எருதுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுதலால் அது மண் கலந்து சேறாய்ப்பின் தேர்கள் ஓடுதலால் புழுதியாய் எழும்; எழுந்து பலவேறு ஓவியங்கள் தீட்டப்பட்ட வெள்ளிய அரண்மனை மீது படியும். அதனால் அதன் சுவர்கள் வெண்ணீற்றிற் புரண்ட களிற்றியானையின் தோற்றம் போல விளங்கும்.
அமணப்பள்ளி
குளிர்ந்த சிறிய குளங்களை உடைய முற்றத்தையும், பெரிய எருதுகளுக்கு வைக்கோலிடும் பல சாலைகளையு முடைய தவஞ் செய்யும் அமணப் பள்ளிகளும் ஆங்காங்கு காணப்படும்.
ஓமஞ்செய்யும் முனிவர்
விளங்குகின்ற சடைமுடியுடைய முனிவர் தாம் தங்கும் இளமரக் காவிலே நெருப்பில் நெய் பெய்து ஓமஞ் செய்வர். அப்புகையினைக் கண்டு முகிலென அஞ்சிய குயிற் சேவல்கள் அச்சோலையில் இருத்தலை வெறுத்துத் தம் பெடைகளோடும் அவ்விடம் விட்டுச் செல்லும்; பூதங்கள் காவலாயிருத்தலாற் புகுதற்கரிய காளி கோட்டத்திற் சென்று கல்லைத்தின்னும் புறாக்களோடு ஓர் ஒதுக்கிடத்தே தங்கியிருக்கும்.
பரதவர் ஆட்டுக் கடாக்களையும் கவுதாரிகளையும் போர் செய்யவிட்டு விளையாடுவர்
பனையிலிருக்கும் பறவைகள் அஞ்சும்படி கல் எறிகின்ற கவண்களை உடையவர்களும் வலிய தொழில்களைச் செய்கின்றவர்களுமாகிய பரதவர், இறால் மீனின் சுட்ட தசையையும், புழுக்கிய வயலாமை இறைச்சியையும் உண்பர்; வயலிலே படர்ந்த அடம்பின் பூவை மாலையாகக் கட்டித் தலையில் அணிவர்; நீரில் நின்ற ஆம்பற் பூவைப் பறித்துச் சூடுவர். ஆகாயத்தே வலமாக எழுகின்ற விண்மீன்களைப்போல அகன்ற மன்றிலே கூடுவர்; ஆட்டுக்கடாக்களையும் கவுதாரிகளையும் போர் செய்யவிட்டு விளையாடிப் பொழுது போக்குவர். அவ்வாறு போர் செய்வித்தலினாலே மாறுபட்டு எழுந்த சினத்தால் வாரடித்த கருமணலுடைய மணல் மேடுகளுள்ளதும் முதிய கிளைத்த மரங்கள் நிற்கப் பெறுவதுமாகிய வெளியிடத்தே செல்வர்; சென்று கல்லிடத்தே நின்று தெய்வமானவனையும் அவனுக்கு வைத்த கிடுகையும் வேலையும் போலத் தமது கிடுகையும் வேலையும் ஊன்றி முதுகு கொடாமல் கையால் குத்தியும் படைக்கலங்களால் வெட்டியும் ஒருவர் உடம்போடு ஒருவர் உடம்பு முட்டும்படி கலந்து பொழுது போக்காகப் போர் செய்வர். பாக்கங்களிலுள்ளவர்கள் இவ்வகைப் பகையை அல்லது பிறபகையை அறியார்.
பரதவர் சுறாக்கொம்பு நட்டு வருணனை வழிபடுவர்
குட்டிகளையுடைய பன்றிகளும் கோழிகளும் சிறிய கிணறுகளு முள்ள செம்படவர் புறச் சேரியில் செம்மறிக் கடாக்களோடு கௌதாரிகள் விளையாடும். அழகற்ற தலையினையுடைய பரதவர் பூரணைக்காலத்தே கரிய கடலிடத்தே மீன் பிடிக்கச் செல்லாது மனைகளில் தங்கியிருப்பர்; பசிய தழை உடையணிந்த கரிய நிறத்தினராகிய தமது மகளிரோடு நெடிய தூண்டிற் கோல்கள் சார்த்திக் கிடக்கும் குறிய இறப்பினையுடைய வீடுகளின் நடுவே இருளைப்போல வலைகள் கிடந்து உலரும் மணலுடைய முற்றத்தே கூடுவர்;
அங்குச் சினைச் சுறாவின் கொம்பை நடுவர். அதனிடத்து ஏறிய தெய்வத்தை வழிபடுதல் காரணமாக விழுதுடைய தாழையின் அடியிடத்தே நின்ற வெண் டாளியின் குளிர்ந்த பூவாற் கட்டிய மாலையை அணிவர். மடலையுடைய தாழயின் பூவைச் சூடுவர். மேலே சொர சொரப்புடைய பனையிலிருந்து இறக்கிய கள்ளையும் நெல்லாற் சமைத்த கள்ளையும் குடித்துக் களித்து விளையாடுவர். பின்பு எல்லோரும் புலால் நாற்றத்தையுடைய மணலிடத்தே பூக்களையுடைய கடற்கரையிற் கூடி இருந்து, தெளிந்த நீருடைய கடலிடத்தே கலங்கிய நீருடைய காவிரியாறு, காய மேகஞ் சூழ்ந்த செக்கர் வானம் போலவும் 1தாய்முலையைத் தழுவிய குழவி போலவும் கலக்கின்ற ஒலியுடைய புகார் முகத்தே தமது தீவினைபோகும்படி நீராடுவர். ஆடியபின் அவ்வுப்பு நீங்க ஆற்று நீரிலே குளித்தும் நண்டுகளைப் பிடித்தாட்டியும், பரந்து வருகின்ற திரைகளைக் காலால் உழக்கியும் மணலினாற் பாவைகளைச் செய்தும் ஐம்புலன்களால் நுகரப்படுவனவெல்லாம் நுகர்ந்து மயங்குவர். அவர்கள் ஒருவரை ஒருவர் நீங்காத விருப்புடையராய்ப் பகற் பொழுதை இவ்வகை விளையாட்டுகளிற் போக்குவர்.
பெண்கள் உயர்நிலை மாடத்தே மகிழ்ந்திருப்பர்
இராக்காலத்தே அழகிய பெண்கள் சுவர்க்கத்தை ஒத்த உயர்ந்த மாடங்களிலிருந்து பாடல்களைக் கேட்டும் நாடகங்களைக் கண்டும், நிலாவிடத்தே பெறும் இன்பத்தை நுகர்ந்தும் கள்ளுண்டலைவிட்டு உயர்ந்த மதுவகைகளைப் பருகியும் மகிழ்ந்திருப்பர். பட்டாடையைக் களைந்து வெண்துகில் உடுத்துத் தம் கணவரைச் சேர்ந்த மகளிர் கள்ளின் மயக்கத்தால் தங்கணவர் சூடிய மாலையைத் தமதென்றெடுத்துச் சூடுவர்; காதலர் தங்காதலியர் சூடிய மாலையைத் தமதென்றெடுத்தணிவர். இவ்வாறு இன்பம் நுகர்ந்த ஆடவரும் மகளிரும் கண்ணுறங்கிய கடையாமத்தே மாடங்களில் விளக்குகள் எரியும். வைகறைக் காலத்தே கட்டுமரங்களிற் சென்ற பரதவர் மாடங்களில் எரிகின்ற விளக்குகளை எண்ணுவர்.
காலையில், அகன்ற கடைத்தெருவிலே பலருந்தொழுந் தெய்வங் களுக்குப் பாடுமகளிரின் பாடல்களோடு புல்லாங்குழல், யாழ், முழவு, முரசு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க விழாக்கள் நடைபெறும்.
அரசினரின் கடற்கரைப் பண்டசாலை
வெள்ளிய பூங்கொத்துக்களையுடைய தாழைகள் நிற்கும் கடற்கரையி லுள்ள பரதவர் வாழும் அகன்ற தெருவிடத்தே காவலுடைய பண்டசாலை யுள்ளது. கப்பல்களில் ஏற்றும் பொருட்டு உள்நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மிகுந்த பண்டங்கள் சுங்கம் மதித்துப் புலி முத்திரையிட்டுப் பண்டசாலை முற்றத்தே அடுக்கிக் கிடக்கும். மரக்கலங்களிலிருந்து இறக்கப் பட்ட பண்டங்கள் புலிப்பொறி இடப்பெற்றனவாய்ச் சுங்கம் மதித்தற் பொருட்டுப் பண்டசாலை முற்றத்தின் ஒருபக்கத்தே குவிந்து கிடக்கும். இவ்வாறு நிலத்திலிருந்து கடலிற் பரப்புவதற்கும், கடலிலிருந்து நிலத்திற் பரப்புவதற்கும் காத்துக் கிடக்கும் பண்டங்கள், மேகம் தான் முகந்த நீரை மலையிடத்தே சொரிவதற்காகவும் மலையிடத்தே சொரிந்த நீரை மீண்டும் கடலிடத்தே பரப்புவதற்காகவும் பெய்கின்ற தன்மைபோல் இருக்கும். அரச னுடைய பொருளைப் பிறர் கொள்ளாமற் காக்கும் பழைய புகழினையுடைய சுங்கங்கொள்வோர் எரிகின்ற கடிய கிரணங்களையுடைய பகலவன் தேரிற் பூட்டிய குதிரைகளைப் போல் ஒரு காலும் ஓய்வின்றி நாடோறும் குறையாது சுங்கங்கொள்வர். மலையிடத்தே உலாவுகின்றவருடைய மான் போன்றனவும் கூரிய நகங்களை உடையனவுமாகிய ஆண் நாய்களும் ஆட்டுக் கடாக்களும் பண்டசாலை முற்றத்தே கிடக்கும் மூடைகளில் ஏறிக் குதிக்கும்.
அழகிய மகளிர் மாடங்களி லிருந்து முருகன் விழாவையும் பிற கடவுளர் விழாக்களையும் காண்பர்
அணுகிய படிகளுடைய ஏணிகள் நாற்புறத்தும் சார்த்தப்பட்ட வீடுகளுக்குப் பெரிய வாயில்களும் படிக்கட்டுகளும் நடைபாதைகளும் உண்டு. வானைத் தீண்டும் மாடங்களில் சிவந்த அடியினையும், தூசு போன்ற உடையினையும், பவள நிறத்தினையும், நெருங்கிய துடையினையும், பசிய ஆபரணங்களையும், பெரிய அரையையும், மான்போல் நோக்கையும், கிளிபோல் மழலைமொழியையும், மயிலின் சாயலையுமுடைய அழகிய இளம் மகளிர் உலாவுவர்; தென்றற் காற்று வீசும் சாளரங்களின் எதிரே நின்று அங்காடித் தெருவிடத்தே மாதர்பாட, புல்லாங்குழல் ஊத, யாழ் வாசிக்க, முழவு கொட்ட, முரசு ஒலிப்ப விழாக்கொண்டாடப்படும். வெறியாடுதற்குரிய முருகக்கடவுளையும், பிறப்பறுத்தற்குக் காரணமான பலருந் தொழுந் தெய்வங்களையும் வளைகள் நெருங்கிய செங்காந்தள் மலர் போன்ற கைகளைக் குவித்து வணங்குவர்.
அங்காடியில் கொடிகள் நாட்டப்பட்டிருக்கும் காட்சி
இல்லுறை தெய்வங்கள் மகிழும்படி வாயில்களில் கொடிகள் உயர்த்தப்பட்டிருக்கும். கடைத்தெருவின் இருமருங்குகளிலும் எடுத்த துகிற் கொடி காட்டாற்றங் கரையினின்ற அழகு பொருந்திய கரும்பின் பூவைப் போன்று விளங்கும். தானியங்களை நிரப்பித் தாழிடப்பட்ட தானிய அறைகளிலே நாட்டிய கொடிகளும் தானிய அறைக்கு முன்னே சாணியால் மெழுகி வெள்ளரிசியைப் பலியாகத் தூவிய கவிந்த பந்தரின் கால்களில் மாட்டிய கொடிகளும் அசையும். பல நூல்களை முற்றக்கற்ற ஆசிரியர் பிறர்க்கு மெய்ப்பொருள் தெருட்டுதற்கு நாட்டிய அச்சந்தரும் கொடிகளும், அசையாத கம்பத்தை அசைக்கும் யானகளைப் போலக் காவிரிப்பூம் பட்டினத்துள்ள துறைமுகத்தே நிற்கும் மரக்கலங்கள்மீது எடுக்கப்பட்ட கொடிகளும் விளங்கித் தோன்றும்
.
வீடுகளிலும் கடைகளிலும் பிறவிடங்களிலும் நாட்டிய கொடிகள்
கள்விற்றற்கு அடையாளமாகக் கொடிகள் உயர்த்தப்பட்ட கட்கடை களின் முற்றத்தே சிலர் மீன்களையும் இறைச்சியையும் அறுத்துப் பொரிப்பர். இக்கொடிகளோடு வேறு வேறு கொடிகளும், அழகாற் சிறந்த பெருங் கொடி களும் நிறைந்தமையால் அவற்றின் நிழலாலே ஞாயிற்றின் கிரணங்கள் வீதி யில் நுழைய மாட்டாவாயின.
பல நாடுகளினின்றும் கொண்டுவந்த பண்டங்கள் கடைவீதியில் குவிந்து கிடக்கும்
கடவுளரது பாதுகாவலினாலே, காற்றின் உதவியால் ஓடும் மரக்கலங்களிற் கொண்டுவந்த குதிரைகளும், மிளகு பொதிகளும், மேருவிலே பிறந்த மாணிக்கமும் பொன்னும், பொதியின் மலையிற் பிறந்த சந்தனமும் அகிலும், தென்றிசைக் கடலிற் பிறந்த முத்தும், கீழ்த்திசைக் கடலிற் பிறந்த பவளமும், கங்கையாற்றில் உண்டாகிய பொருளும், பர்மா தேசத்திலுண்டான நுகரும் பொருள்களும், சீனம் முதலிய இடங்களினின்றும் வந்த கற்பூரம் பனிநீர் முதலியனவும், காவிரியிலுண்டான பொருள்களும், இலங்கையிலுண்டான உணவுப் பொருள்களும் இவையல்லாத பிறபொருள் களும் புகார்நகரிலும் துறைமுகத்தும் குவிகையினால் தெருக்கள் மதித் தறியமுடியாத செல்வமுடையனவாய் விளங்கும். பற்பல நாடுகளினின்றும் போந்த பலவேறு மொழிகளைப் பேசும் மக்கள் காவிரிப்பூம்பட்டினத்தே தங்கியிருப்பர்.
வேளாண் மக்களின் அருள் ஒழுக்கம்
வலைஞர் முற்றத்தே மீன்கள் பாய்ந்து திரியும். ஊன் விற்பார் குடிசையிலே ஆடு முதலிய விலங்குகள் திரண்டு நிற்கும். அறத் தொழில் முட்டுப்படாத இல்வாழ்க்கையுடைய வேளாண் மக்கள் இவ்வாறு முதற்கண் மக்களிடையே கொலைத் தொழிலைப் போக்கினர். பின் களவு செய்வாரை அக்களவினின்றும் விலக்கினர். இன்னும் அந்தணர்க்குண்டாகும் புகழினை நிலை நிறுத்தினர். பெரிய புண்ணியங்களைப்பண்ணி அவற்றைச் செய்ய மாட்டாதார்க்குத் தானங்களை ஈந்தனர்; அரிசி, கறி முதலியவற்றை அவர்க்கு உண்ண அளித்தனர்.
வணிகரின் இயல்புகள்
வணிகர், மேழித் தொழிலுடைய உழவரது நுகத்தில தைத்த பகலாணி போல நடுவுநிலை யென்னுங் குணம் நிலைபெற்ற நெஞ்சினையுடையவர்; தம்முடைய பல சரக்குகளையும் பிற சரக்குகளையும் கொள்முதலுகேற்ப இலாபத்தை ஆராய்ந்து பார்த்துத் தம் குடிக்க வடுவாமென்றஞ்சி மெய் சொல்லி விற்குமியல்பினர்; தாம் கொள்ளுஞ் சரக்கையும் தாம் கொடுக்கும் பொருட்கு மிகையாகக் கொள்ளார்; தாம் கொடுக்குஞ் சரக்கையும் தாம் வாங்கும் பொருட்குக் குறையக் கொடாமல் மெய்சொல்லி விற்பர். அவர் களிடத்தே கொள்ளப்பட்ட பழைய பண்டங்கள் மிக்கிருக்கும்.
கரிகாலனின் புகழ்மிக்க வீரம் முதலியன
கூரிய நகங்களையுடைய புலி கூட்டிலே அடைபட்டு நின்று வளர்ந் தாற்போலக் கரிகாற்சோழன் பகைவருடைய சிறையிலிருந்து வலிமிகும்படி வளர்ந்தான். சிறையினின்றும் வெளியேற விரும்பிய அவன், குழியிலே அகப்பட்டயானை சுவரின் கரைகளை கொம்பாற் குத்தித் தூர்த்துப் பிடி யிடத்தே சென்றாற்போலக், காவலாய் நின்றோரை வாளாற்றுணித்து அவ் விடத்தினின்றும் அகன்றான். அகன்று தனது அரசுரிமையை முறையாற் பெற்றான். அவன், அங்ஙனம் பெற்ற அரசுரிமையினால் நிறைவு அற்றவ னாய், முடியுடைய கரியதலைகளை உருட்டுகின்ற முன் காலில் நகங்களும், பகை அரசரின் மதிற் கதவுகளை முறித்து அரணை அழித்த கொம்புகளும் உடைய யானைகளோடும், மணிகட்டிய குதிரைகளோடும் போர் வேட்டுப் பகைப் புலஞ்சென்றான். பாசறையிடத்தே பேயின் கண்ணை ஒத்த முரசு முழங்கிற்று; வானிடத்தே பருந்து உலாவும்படி பகைவரின் தூசிப்படையை அழித்தான். முதலைகள் நெருங்கித் திரியும் பொய்கைகளுடையதும் கரும்புடன் நெல்லும் குவளைகளினிடையே நெய்தலும் வளரப்பெற்றது மாகிய மருத நிலத்தேயுள்ள குடிகளை ஓட்டினான். அதனால் வயல்களும் வாவிகளும் நீர் அற்றன. அவ்விடங்களில் கோரையும் அறுகும் பூளையும் வளர்ந்தன; ஆற்றின் கருமணல் படிந்த கொம்புடைய ஆண் மானோடு பெண் மான் துள்ளி விளையாடிற்று.
அம்பலத்தில் நாட்டிய அருள்தறி
பூக்களைச் சூடிய அருட்டறி நிறுத்தப்பட்ட அம்பலம், சிறையாகப் பிடித்து வந்த பகை நாட்டு மகளிர் நீராடுந் துறையிலே சென்று முழுகிவந்து மெழுகிய மெழுக்கத்தினையும், அந்திக் காலத்திலே அணையாது கொளுத்தின விளக்கத்தினையுமுடையது. அதனிடத்தே பிறநாட்டவர் பலருஞ் சென்று வணங்குவர். அவ்வகை அம்பலத்துள்ள தூண்கள் சாய்ந்து கிடக்க அவற்றில் களிறுகளும் பிடிகளும் தமது உடம்பைத் தேய்த்தன. தெருக்களில் பூக்களைத் தூவி மத்தளங் கொட்டி யாழ் ஒலித்துத் திருநாள் கொண்டாடப்படும் மன்றங்கள் விழாக்களை மறந்தன. அவ்விடத்தே சிறிய பூக்களையுடைய நெருஞ்சிற் பூண்டும் அறுகம் புல்லும் நெருங்கி வளர்ந்தன; அகன்ற வாயையுடைய நரிகள் ஊளையிட்டன; அழுங்குரலாய்க் கூப்பிடும் கூகைகளோடு கோட்டான்களுமிருந்து எதிர் கூவின; ஆண்பேய்த் தொகுதி யுடனே மயிரை அவிழ்த்துத் தொங்கவிட்டு இருந்து பிணத்தைத் தின்னும் வளைந்த காலையுடைய பெண் பேய்கள் கூடியாடின.
கரிகாலனின் பகைவர் நாடுகள் பாழாயின
அடுக்களை, விருந்தினர் மாடத்தே நீண்ட தலைவாயிலில் கூடி இருந்து பின்பு உள்ளே சென்று உண்டபின் மிக்கிருக்கின்ற பெரிய சோற்றை யுடையது. இவ்வகை அடுக்களைகள் பொருந்தப்பெற்ற சாந்திட்ட வீட்டின் உயர்ந்த திண்ணைகளிலே பசிய கிளிகள் இருந்து இனிய சொற்களைப் பேசும். இவ்வாறு செழுமை மிகுந்த நகரத்தே வளைந்த வில்லையுடைய வேடர் செருப்பிட்ட அடியினையுடையராய்த் துடியொலிப்பத் திரண்டு சென்று கொள்ளை கொண்டமையால் வறிதாய்ப்போன நெற்கூடுகளின் மேல் கூகைகள் நண்பகற் காலத்தே இருந்து குழறின. இவ்வாறெல்லாம் அரிய காவலையுடைய மதிலையுடைய பகைவர் வீடுகள் அழகழியவும் அவர்கள் குலமின்றாகவும் நாட்டைப் பாழ் செய்தான். பல அரசர்கள் எதிர்த்து வரினும் தான் ஒருவனாய் நின்று போர்தொடுக்க வல்லனென்று வஞ்சினங் கூறிய நாற்படையையுடைய பாண்டியனை வென்ற கொற்றத்தாலும் இவன் மகிழ்ச்சி எய்தானாயினான். இவன் தெய்வத்தன்மை உடையவனாதலின், இம் மலைகளை எல்லாம் அகழ்தலைச் செய்வன். கடல்களை யெல்லாம் தூர்த் தலைச் செய்வன்;
தேவருலகைக் கீழ் வீழச் செய்வன்; காற்றை இயங்காமல் விலக்குவன்; என உலகத்தார் மீக் கூறும்படி தான் நினைத்தவற்றை அந்நினைத்தவாறே துறைபோக முடிக்கவல்லவனாயினான். ஆகையால் ஒளி நாட்டார் பலரும் வந்து தாழ்ந்து ஒடுங்கவும், அருவாள நாட்டினரசர் அவன் ஏவிய தொழிலைச் செய்தற்கு அவன் சொற்கேட்கவும், வடநாட்டு அரசர் வாடி நிற்கவும், குடநாட்டார் மன வெழுச்சி குன்றவும், புல்லிய இடைய அரசரது கிளைமுழுதுங் கெட்டுப்போகவும், இருங்கோ வேள் சுற்றத்தார் அழியவும் காட்டை எல்லாம் அழித்து நாடாக்கிக் குளங்கள் அகழ்வித்துப் பல்வளங்களும் பெருகச் செய்தனன். விளங்கும் மாடங்களுடைய உறையூரிடத்துக் கோயில்களையும் குடிகளையும் நிலைபெறச் செய்து, சிறுவாயிலும் பெருவாயிலும் அமைத்து மதில்களில் அம்பெய்யும்1 ஞாயில்களில் அம்புக் கட்டுகளை வைத்தான். இவனைப் பணிய வந்த வாரிறுக்கின முழவினையுடைய மற்றை அரசர் தம் ஒளிமழுங்கப் பெறாரா யினர். அவர் இவன் அருள் நோக்கத்திற்குத் தக்கராகல் வேண்டி இவனைப் பணிதலால் அவர் முடிகளிற் பதித்த மணிகள் வீரக் கழல்கள் அணிந்த இவன் கால்களில் உரைஞ்சும். ஒள்ளிய பூணினையுடையவனும் சிங்கேற்றைப் போன்று பகைவர்க்கு வருத்தத்தைச் செய்பவனுமாகிய கரிகாற் சோழனது மார்பிடத்தேயுள்ள செஞ்சந்தனக் குழம்பு பொற்காப் பணிந்த தம் புதல்வர் ஓடி விளையாடவும் தொழில் முற்றுப் பெற்ற அணிகலன்களணிந்த மனைவிமாரின் கொங்கைகள் தழுவவும், கலைந்திருக்கும்.
செல்வமிக்க காவிரிப்பூம்பட்டினத்தைப் பெறுவதாயினும் காதலியைப் பிரிந்து செல்லேன்
இப்பெற்றியனான அவ்வேந்தன் பகைவர்மேல் ஓச்சிய வேலைக் காட்டிலும் யான் போதற்கு எழுந்த கானம் கொடியதாயிருந்தது. இவன் அகன்ற மெல்லிய தோள்களோடு அவன் செங்கோலினுங் குளிர்ந்தனவா யிருக்கின்றன. ஆதலின் இவ்வகைச் சிறப்புடைய காவிரிப்பூம் பட்டனத் தையே எனக்குரித்தாகப் பெறினும் நெஞ்சே! நீண்ட கரிய கூந்தலினையும் விளங்குகின்ற பூணினையு முடைய என் காதலி ஈண்டு தனியளாயிருப்ப இவளைப் பிரிந்து வருதற்கு உடன்படேன்.
10. 1மலைபடுகடாம்
கூத்தரின் வாத்திய வகைகள்
ஆகாயத்தில் முழங்கும் ஓசைபோல் ஒலிக்கும் மத்தளம் வலித்து இறுக்கிய வார்க்கட்டுடையது. கஞ்சதாளம் வெண்கலத்தை உருக்கித் தகடாகத் தட்டிச் செய்யப்பட்டது. கொம்பு மயிலிறகுந் தழையுங் கட்டப் பெற்றது. நெடுவங்கியம் யானையின் தும்பிக்கை போன்று கணுக்களிற்றுளை களுள்ளது. குறிய தூம்பு இளி என்னும் நரம்பின் ஓசையைத் தன்னிடத்தே தோற்றுவிற்கும் இயல்பினது. இனிய குழல் பாட்டின் சுருதி குன்றாமற் மேற் கொண்டு நிற்கும். கரடிகை மத்திமமாகிய ஓசையைச் செய்யும். எல்லரி தாளத்தைக் கொண்டு ஒலிக்கும். ஒருகண் மாக்கிணை மாத்திரை அறிவிக்கும் தாளத்தையுடையது. இவற்றோடு சிறு பறையும் இன்னும் கூறாதொழிந்த வாத்தியங்களும் இடுதற்குரிய உறைகளிலிட்டுச் சுருக்கிடப் பெற்று, பலாக் காய்க் கொத்துகள் போன்ற தோற்றத்தை உடையன வாயிருக்கும்.
கூத்தர் மலைகளைக் கடந்துசெல்லுதல்
கூத்தர் இவ்வகைப் பல வாத்தியங்களைத் தூக்கியவர்களாய் காட்டுவழியே செல்லா நின்றனர். முட்செடிகள் வளர்ந்த பக்க மலையிடத்தே கற்களைப் பதித்தாற் போன்ற அழுத்தமாகிய பாறைகள் கிடந்தன. அப் பாறை களின் பக்கத்தே, நிலத்தே கிடக்கின்ற வழியை எடுத்து நிறுத்தினாற் போன்று மலையை இடித்து அமைத்த அரிய ஒடுங்கிய வழியுண்டு. வில்லிடத்தே தொடுத்த அம்பினராகிய கானவர் தமது மனைவியருடன் அரசர் ஆணை யால் அவ்விடத்தே காத்து நின்று வழிச்செல்வொரை ஆறலை கள்வர் வருத்தாமற் பாதுகாத்தனுப்புவர். செல்லுதற்கரிய இவ் வழியிடத்திற் போதலைக் கூத்தர் அஞ்சுவாரல்லர்.
பேரியாழ்
பெரிய ஓசையையுடைய பேரியாழ் பெண்கள் கையிலணியும் வளையல் போன்று ஒன்பது வார்க் கட்டினையுடையது. நூல்களிற் சொல்லிய இலக்கணம் அமையும்படி வடித்து முறுக்கின அதன் நரம்புகள் வெண்சிறு கடுகளவேனும். கொடுமுறுக்கு விழாதபடி உருவி ஓசை ஓர்ந்து பார்த்துக் கட்டப்பெற்றவை. ஒலித்தலமைந்த பத்தல் வரகின் கதிர் ஒழுகின தன்மை போல நுண்ணிய துளைகள் செய்து துளைகள் நிரம்பும்படி சுள்ளாணிகள் இறுகத்தைத்து யானைக்கொம்பாற் புதிதாகச் செய்த 1யாப்பை வலிபெற இறுக்கப்பட்டது; பிசினோடு சேர்ந்த தோலாகிய புதிய போர்வை பொன்னிற முடையது. 2உந்தி, தனது கூந்தலிலே இருந்த வண்டுக்கு கலியாணஞ் செய்த வளுடைய மணத்தைக் கொடுக்கின்ற மடந்தையின் மார்பிடத்தே சென்று மறையும் மயிரொழுங்கு பெற்ற அழகிய வயிற்றை ஒத்தது. வளைந்து ஏந்திய தண்டு கழாப்பழத்தின் நிறமுடையது. பாணர், நூல்முறையிற் செய்யப்பட்ட யாழை அவைக்களத்தே அரசர் கேட்டு மகிழுமாறு துறைபோகக் கற்று விளங்கினர்.
பாணன் கூத்தனை நோக்கிக் கூறுதல்
விறல்படப் பாடியாடும் மகளிரின் கல்போன்ற சிற்றடிகள் மலை யிடத்தே ஓடி வலிகெட்ட நாயின் நாக்குப் போன்றன. பலவகை வாத்தியங் களுடன் பாணரும் விறலியரும் சூழ்ந்திருப்பத் தலைமை பெற விருந்த கூத்தர் தலைவனை, நன்னனிடத்தே பரிசில் பெற்று வந்தானொரு கூத்தன் எதிர்ப்பட்டுக் கூறுகின்றான்: குளத்திலே புகுந்தாலொத்த குளிர்ந்த நிழலிலே வழிநடந்த வருத்தந் தீர்ந்திருக்கும் கூத்தர் சுற்றத்துக்குத் தலைவனே! மலை உச்சியினின்றும் இழிந்த நல்ல பூக்கள் செறிந்த ஆறு கடலை நோக்கிச் சென்றாற்போல யான் நன்னனை நோக்கிச் சென்று சில பரிசில்களைப் பெற்று வருகின்றேன். பழங்களைச் சொரிகின்ற காட்டில் அவற்றைச் சுற்றத்தோடே சென்று தின்னற்கு விரைந்து பறக்கும் பறவைத்திரளையொப்ப நன்னன் மகனாகிய நன்னனிடத்தே நீவிரும் செல்வீராக. அவன் அழகிய மாலையை மார்பிடத்தே அணிந்துள்ளான். அவன், அழகிய தனங்களையும் மூங்கில் போற்றிரண்ட தோளையும், பூப்போல் குளிர்ந்த கண்ணினையுமுடைய மகளிர்க்குக் கணவன். நாஏர் உழவர்களாகிய புலவர்களுக்கு வேண்டிய காலத்துப் புதுப் பெருக்காய் வந்த நீர்போலப் பொருளளிப்பான்; தன் ஆக்கத் தினை உணரும் நினைவினையும், விற்றொழிலிற் பயின்ற கையினையும் பேரணி கலன்களையுமுடையன். அவன் தரும் பரிசில்கள் இவை என்று ஓர்ந்து அப்பரிசில்களை விரும்பி நீவிரும் அவன்பால் செல்வீராக. என்னை எதிர்ப்படுகையினாலே நீவிர் புறப்பட்ட நேரம் நன் முகூர்தத்தோடே நன்னிமித்தமும் உடையதாயிருந்தது. அவனை அடைதற்குச் செல்லும். வழியின் நன்மையினளவும், தீமையின் அளவும், நீர் தங்கும் நல்ல இடங்களின் தன்மையும், பிறநாட்டாருக்குக் கொடுக்கும் அவன் நாட்டில் விளையும் உணவுகளும், அவன் நாட்டின் மலைகளின் தன்மையும், சோலைகளின் தன்மையும், விலங்குகள் விரும்பித்திரியும் காட்டின் தன்மையும் கூறுவேன்.
நன்னன் கொடைச் சிறப்பு
இன்னும் பகைவரிடத்திருந்தும் கொள்ளை கொண்ட பேரணி கலன்களை முற்பட அறிவுடையோர்க்குக் கொடுத்துப் பின் அவர்க்குச் சொரி யும் பொன்மழையின் தன்மையையும். இகழ்ந்திருக்கும் பகைவரை அரசு கொடாமல் சுருக்கும் அறிவின் வலிமையையும் நவிலுவேன். சூதர், மாகதர், பாணர், கூத்தர் முதலியோருக்குத் தான் வென்ற பகைவ ரரசைக் கொடுப்பதோ டமையாது அத்தாணி மண்டபத்தே இருந்து பல பரிசில்களை அளிப்பான்.
புலவர்களின் தண்ணளி
தாம் கற்றவற்றைச் சொல்லும் வன்மையுடைய கற்றோர் குழுமி யிருக்கும் அவனது அவைக்களத்தே, வந்த அறிவுடையோர் தாங்கற்ற வற்றை எடுத்து விளக்கும் வன்மை இலராயின் அக்கற்றார் அவ்வறிவுடை யோரின் மாட்டாமையை மறைத்தும் தாம் பொருளைச் சொல்லிக் காட்டி எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படி அறிவித்து நடத்துவர்.
கடல்சூழ்ந்த உலகத்தவர் அஞ்சி நடுங்கும் நஞ்சை ஊணாக உடைய இறைவன் ‘நவிர’ மென்னும் மலையிடத்தில் இருப்பான். ஞாயிறு இருளைக் கடிவதுபோல நன்னன் தன் பகையாகிய இருளைக் கடிந்த தன்மையை யுடையன். அவனது முன்னோர், பகைவர் தேயம் தூரத்திலுள்ளதாயினும் அவ்விடத்தே சென்று முன்னணியிலுள்ள காலாட்களைக் கொன்று யானைப் படையிற் சென்று வேற்போர் புரிந்த வீரர்க்கு நாடு ஊர் முதலியவற்றைக் கொடுப்பர். அவனது புகழ் பரந்த பழைய ஊர் இரையைத் தேடி உலாவும் வளைந்த காலினையுடைய முதலைகளோடே திரையுண்டாக ஆழ்ந்த அகழியையும், மலையை ஒத்த உயரமுடைய வானைத் தீண்டும் மதிலையும் உடையது.
நன்னனது நாட்டுக்குச் செல்லும் வழியிடத்தே காணப்படும் காட்சிகள்
இப்பொழுது நீவிர் நன்னனைக் கருதிச் செல்கின்ற திசையைக் கேட்பீராக. நிலத்தே இட்ட விதைகளெல்லாம் விளையவேண்டுமென்று ஆண்டுள்ளார் விரும்பினாற் போல விளையும்படி மேகம் மின்னி மழையைப் பெய்யும். மழைபெய்த கொல்லை நிலத்துப் புல்லிய கொடியினையுடைய முசுண்டை ஆகாயத்தில் கார்த்திகை மீன்போல் வெள்ளிதாக மலர்ந்திருக்கும். வயல்களிலே முளைத்த பல கிளைகளையுடைய எள்ளுப் பயிர்கள் நீலமணி போன்று விளங்கும். நீர்ச்சாலை ஒத்த நிறைந்த சுனைகளையுடைய காட்டிடத்தே மிகுந்த துளிபடுகையினாலே எள்ளுப் பயிர்களின் தடிகள் முற்றிச் சிவந்த நிறத்தை அடையமாட்டா. முற்றிக்கறுத்து நிறைந்த நெய் யுடைய விதைகளையுடைய ஏழுகாய்கள் ஒரு பிடியில் அடங்கும்படி கொழுத் திருக்கும். விளையாடிப் பொருகின்ற யானைக் கன்றுகளின் ஒன்றோடொன்று சேர்ந்த கைகளை ஒத்த கதிர்களையுடைய தினைமுற்றி அறுக்கும் பருவத்தை அடைந்திருக்கும். தினை அரிந்த தாள்களில் அரிவாளின் வாயை ஒத்த காயைக் கொண்ட அவரையின் தயிர்த்துளிபோன்ற பூக்கள் உதிர்ந்து கிடக்கும். எருமை கிடந்தாற் போன்ற பாறைகளுடைய வழியிடத்தே, தர்க்கிக் கின்றவனது இணைத்த கை விரல்களையொத்த இரட்டித்த கதிர்கள் முற்றி விளைந்த வரகின் தாள்களை அறுப்போர் அரிவாளால் அரிவர்.
மலர் களையுடைய காட்டிடத்துள்ள தோரைநெல்முற்றி அவலிடிக்கும் பருவத்தை அடைந்திருக்கும். உழாது மண்வெட்டியால் கொத்திய தோட்டங்களில் விதைத்த வெண் சிறுகடுகு நெருங்கி விளைவெய்தியிருக்கும். ஓவியனால் வரையப்படாத இயற்கை ஓவியம் போன்றமைந்த இஞ்சிக் கிழங்கு உறைப்புப் பெற்றிருக்கும். கொழுவிய கொடிகளையுடைய கவலை குழி களிலே யானையின் மடித்த முழந்தாளைப் போன்றவும் மாவுடையவும் கிழங்குகளை வீழ்த்தும். மலைகளைச் சூழ்ந்து நெருங்கி வளர்ந்திருக்கும் வாழைகளின் பொத்திகள் யானையைக் குத்தும் பிடியில் இறுக்கிய வேல் களைப்போல் மலைப் பக்கங்களைக் குத்தும். நெருங்கிய காய்களையுடைய வாழைக் குலைகள் பழுத்திருக்கும். நெல் முற்றிய பெரிய மூங்கில்கள் அசைந்து கொண்டிருக்கும். மரங்கள் காலமன்றியும் நிலநலத்தாற் பயனைக் கொடுக்கும். காற்று அசைதலினால் நாவல் கரிய பழங்களைப் பாறையில் உதிர்க்கும். விடாய்த்தகாலத்து வாய் நீரூறுதற்குக் காரணமான உயவைக் கொடி நீரைப் போலப் படரும். கூவைக்கிழங்கு நீறு பூத்து முற்றிக் கிடக்கும். உண்பாரை வேறொன்றிற் செல்லவிடாமற் தடுத்துக்கொள்ளும் பழங்கள் மாமரங்களிற் றூங்கும்.
நீண்ட அடியை உடைய பலாவின் பழம் வெடித்து உள்ளேயுள்ள விதையைச் சிந்தும். மலைப்பக்கத்தே பேராந்தைப் பேடுஞ் சேவலும் மாறிமாறி அலறும். அசைகின்ற கிளைகளையுடைய பலாவின் கீழிடங்களிலும் மேலிடங்களிலும், வழிப்போகும் கூத்தருடைய மத்தளம் போன்ற காய்கள் தூங்கும். ஐவன நெல்லும் வெண்ணெல்லும் ஈன்றகதிர்கள் பால் கட்டிக் காற்றாலடிபட்டு நன்றாய் விளைந்திருக்கும். இனிய கரும்பின் தண்டு பாத்தி தெரியாதபடி திரண்டிருக்கும். இலைகள் கவிழ்ந்து வேற் படைகள் ஒன்றோடொன்று சார்ந்தாற்போல் காற்றடித்தலாற் சாய்ந்த கரும்புகள் ஆலையிலிடுவதற்கு அறுக்கப்படும். மிகுந்த செல்வமுடைய புதுவருவாயை யுடைய ஊர்களாலே புதிய தன்மையை அடைந்த அவ்வழியின் தன்மை இதுவாகும். நெருப்பை ஒத்த விளங்குகின்ற செங்காந்தளின் மழை பெய்த லால் செருக்கி வளர்ந்த முகைகளைக் கபில நிற முதுகையுடைய கழுகு தசை எனக் கருதி எடுக்கும்; எடுத்து தசை அல்லாதபடியால் அவற்றைப் பாறை யிலே சிந்தும்படி போடும். அப்பாறைகள் நெருப்பை ஒத்த பல இதழ்கள் பரந்த வெறியாடுகளனை ஒக்கும்.
மணஞ்செய்த மனைபோல் பரிமளிக்கும் பெரிய மலைப் பக்கத்திற் சிறு குடியிலுள்ள கானவர் தேனையும், கிழங்கை யும், தசை நிறைந்த கூடையையும், சிறிய கண்ணையுடைய பன்றியின் இறைச்சியையும், மற்றும் தசைகள் நிறைந்த பனை ஓலையால் முடைந்த கடகங்களையும், தம்மிற்பொருதுபட்ட யானையின் கொம்பைக் காவுமர மாகக் கொண்டு தாவிச்செல்வர். வளவிய புதுவருவாயினையுடைய அவர் களது சிறிய ஊரிலே தங்குவாயானால் கரிய பெரிய சுற்றத்தோடே அவ் வுணவுகளை உண்ணும்படி பெறுகுவை. அவற்றைப் பெற்று இளைப்பாறி அற்றைநாள் இராப்பொழுதும் அவர்களுடனே பொருந்தி அவ்விடத்தே தங்குவீராக. விடியற்காலத்தே எரிகின்ற நெருப்புப்போன்ற ஒள்ளிய பூங்கொத்துக்களைச் சூடிச் சிவந்த அசோக மரத்தையுடைய நல்லவழியே செல்வீராக. அரிய வழிகள் இழிகின்ற மூங்கிலொலிக்கும் சிலம்பிடத்தே யுள்ள சீறூர்களைச் சேர்ந்து ‘வெற்றியுடைய நன்னனுடைய கூத்தர் யாம்’ என்று கூறுவீர்களாக. மலைகளிலுள்ளோர் நும்மை உள்ளே அழைத்துத் தூரத்தில் நின்றும் வந்த வருத்தந் தீரும்படி இனிய மொழிகள் கூறி நெய்யிற் பொரித்த இறைச்சியுடன் தினைச் சோற்றை உண்ணும்படி தருவர்.
மலையின் உச்சியிலேயுள்ள நன்னனுடைய நாடு யான் கூறிய தன்மைத் தன்று; மிக்க சிறப்பமைந்தது. ஆண்டுப் பெறுவனவற்றைக் கேட்பீராக. அவ்விடத்தே பெண்நாய் ஓடிக் கடித்த உடும்பின் இறைச்சியோடு கடமானின் கொழுவிய தசைகளையுங்கலந்து தின்று இடையே மூங்கிற் குழாய்க்குள் இருந்து முற்றிய தேனாற் செய்த கட்டெளிவைக் குறைவின்றி நிரம்ப உண்ணப் பெறுகுவிர். பின்னர் நெல்லாற் சமைத்த கள்ளையும் உண்டு களிக்கும்படி பெறுகுவிர்.
மலைநாட்டார் வரவேற்று இனிய சோறளிப்பர்
நறிய மலரைச் சூடின நாறுகின்ற கரிய மயிர் முடியினையுடைய குறமகள் சுனைநீர் கொண்டுவந்த பலாப்பழத்தின் வெள்ளிய விதையின் மாவையும் புளியம் பழத்தின் புளியையும் மோருக்கு அளவாகக் கலப்பாள்; கலந்து மூங்கிலரிசியைச் சுரபுன்னை நெருங்கிய மரச்சாரல் எல்லாம் கமழும்படி துழாவி ஆக்குவாள்; ஆக்கிய வெள்ளிய சோறாகிய உணவை, நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியுடையராய் விருந்தினரைப் பெற்றேமென்னும் ஆசையோடே நெஞ்சு கலந்து தத்தம் பிள்ளைகளைக் கொண்டு முறை சொல்லித் தடுத்துத்தர, கள்ளுண்டு மகிழ்ச்சியுற்ற நும்முடைய மதம் தீரும்படி விடியற் காலத்துப் பெறுகுவிர். இன்னும் உச்சிமலையிலே ஏறிக்கொண்டு வந்த விளங்குகின்ற பண்டங்களையும் பெறுகுவிர். அங்ஙனம் பெற்றதாலே போரைச் செய்கின்ற வலிமையுடைய நன்னனிடத்துப் பெறக் கருதிய பரிசிலை மறந்து நீடித்திருப்பினும் இருப்பிர். நிறைத்த இதழையிடைய குவளையைத் தெய்வம் விரும்புதலால் நறுமணம் பொருந்திய பூக்களைக் கிட்டினும், ஆண்டுவரையர மகளிருடைய இருப்பைக் காணினும் வெதும்பி நடுங்கவும் பெறுவிர். ஆகையால் பல நாள் தங்காது அவ்விடத்தைவிட்டுச் செல்வீராக.
முற்றின தினைப்புனத்தைப் பன்றி அழிக்கையினால் அதற்கஞ்சி வைக்கப்பட்ட கற்பொறிகள் வழிகளிலுண்டு. ஆகையினால் செறிந்த இருட் காலத்தே அவ்விடத்திற்றங்கியிருந்து விடியற்காலத்தே போவீராக. பெரிதும் பலரும் போகாத வழியே போகத் துணிவீராயின் மேட்டு நிலத்தேயுள்ள கற் களுடைய பள்ளத்திற் வெடிப்புகளில் பாம்பு மறைந்து கிடக்கும் குழிகளுள. அப்பள்ளத்தைக் கவனித்து, மரங்களிலேறி அவற்றில் அடித்து விலங்கு களைப் பார்ப்பீராக. விறலியர் பாம்பு மகிழும்படி கையாற்றொழுது வாழ்த்த விலங்குகள் கிடக்கும் வழியை அகன்று வலப்பக்கத்தே உள்ள வழியை நுமக்கு நெறியாகக் கொண்டு செல்வீராக.
யானைகளால் தினைப்புனத்தை அழியாத படி குறவர் உயர்ந்த பரணில் ஏறி இருந்து காவல் காப்பர்; காத்து குறிய காட்டிடத்தே நிற்கும் யானைகள் நிலைகுலையும்படி கவணாற் கற்களை எறிவர். அக்கற்கள் கூற்றுவனைப்போல் உயிர் போக்குந் தன்மையன. அவை குரங்கும் அதனது குட்டியும் ஓசை அடங்கும்படி பெரிய மூங்கிலின் கோலைக் கடந்து விசைகெடாது வரும். அவற்றுக்கு மரங்களின் பின்னே ஒதுங்கி நின்று செல்வீராக. காட்டாறு வலிய யானையை விழுங்கும் வலிய முதலைகள் தங்கும் இராக்காலத்தை ஒத்த இருள் செறிந்த காவற் காட்டையும், ஆழ்ந்த நீரறாத கிடங்குகளையுமுடையது. அவ்வாறு அகழியிலே இறங்கி னாற்போன்று ஏறுதற்கும் இறக்குதற்கும் அரிய தன்மையுடையது. அவ்வாற்று வழி வழுக்கும் கரையுடையது. அவ்வழியிற் செல்லும் போது செம்மறி யாட்டை யொத்த செம்பட்டை மயிருடைய நும் பிள்ளைகளோடே மரங் களிற் சுற்றிக் கிடக்கும் கொடிகளைப் பிடித்துக் கால் வழுக்காதபடி ஒருவரை ஒருவர் பாதுகாத்துச் செல்வீராக. அசையும் செவ்வெருக்கு வளரும் பக்க மலையில் வீழ்ந்தோரைக் கொல்லும் ஆழ்ந்த குளங்களுக்கு அருகே நிலத்தை மறைத்துப் பாசியிருக்கும். அதனிடத்தே மிதிக்கின் ஊன்றிய அடியைச் சறுக்கப்பண்ணும். அதனால் அவ்விடம் போதற்கு அருமையுடையது. அதற்குப் பரிகாரமாக வழி முழுவதும் பின்னி வளர்ந்த நுண்ணிய கோல் களையுடைய சிறு மூங்கிலோடே கொறுக்கைப் புல்லையும் பற்றுக் கோடாகப் பிடித்துப் போவீராக.
முகபடாத்தையும், நெடுமையையுமுடைய மலைபோலும் போர்க் களிற்றினையும், மழைபோல் வில்லிடத்தினின்றும் புறப்படும் அம்பினை யுடைய தூசிப்படையையும் பெற்றுப் பொலிவு எய்திய பழைய மதில் உடைய ஊரிடத்துப் பூக்களையுடைய மடுவுடைய ஆற்றங்கரையில் ஓர் வழியுண்டு. அதனிடத்தே துதித்தற் கரிய முறைமையினையுடைய கடவுளைக் கண்டீராயின் நீவிர் வணங்கிப் போதலல்லது வாச்சியங்களை ஒலியாதிருப் பீராக. அதற்குக் காரணம் யாதெனில், அவனது வளவிய நவிர மென்னும் மலை மயங்கிய துளியையுடைய மழையை இடைவிடாமற் பெய்யும். அதனால் வாச்சியங்கள் நனைந்து நுமக்குப் போதல் அரிதாகும்
நவிர மலையிடத்தே காட்டுவளம்
அக்காட்டிடத்தே மயில் கலாபத்தினது பாரத்தாலே ஆடி யிளைத்து நிற்கும். நெடிய மூங்கிலின் கவடுகளிலே கூத்தருடைய பிள்ளைகளை ஒத்த கடுவன் பாயும். தெய்வம் விரும்பும் நெடிய பக்கமலையிலே தேன் கூடுகள் காணப்படும். அவற்றை விரைந்து பாராது வழியே செல்வீராக. அவ்வாறு செய்யாவிடின் நீவிர் வழிதப்பி விடுதல்கூடும். மலையைச் சேர்ந்த வழியினை யுடைய காட்டிடத்தே செல்லுமிடத்து, கானவர் யானை முதலியவற்றுக்கு எட்டாத பரணிலிருந்து எய்ததனால் மார்பிலே புண்பட்டு அம்புடன் வழியைக் கடந்து சென்று வீழ்ந்த தேய்ந்த கொம்பினையும் வெள்ளிய நிணத்தையும் சொரசொரப்புள்ள கழுத்தையும், கரிய நிறத்தையுமுடைய பன்றியைக் காண்பீர்கள். கண்டு மூங்கிலிடத்துப் பிறந்த தீயினால் அதைவாட்டி, மயிர் போகச் சீவித்தின்று குவளைவளரும் பசிய சுனையில் பளிங்கு போன்ற தெளிந்த நீரை வழியிடத்து இளைப்புத் தீரும்படி உண்பீராக.
பருத்ததசை முழுவதையும் உண்ணாமல் மீதியைப் பொதியாகக் கட்டிக் கொண்டு 1வளை கையினின்றும் நீங்குதற்குக் காரணமாயிருந்த பிள்ளை களுடனே அவ்விடத்தினிறும் போகாது நும்மில்லிலே புக்கா லொத்த மலை முழைஞ்சுகளில் இராக்காலத்துத் தங்குவீராக. இராக்காலத்தே எல்லோருங் கூடி இளைப்பாறி விடியற்காலத்தே துயிலெழுந்து நல்ல காட்டுவழியே செல்வீராக. இராக்காலத்தே எல்லோருங் கூடி இளைப்பாறி விடியற்காலத்தே துயிலெழுந்து நல்ல காட்டுவழியே செல்வீராக. அகன்ற படத்தினையும், அழகிய கண்ணினையும், வலிமிகுந்த சினமுடைய யானையை விழுங்கத் தக்க பெருமையையும் பெருமரங்களை ஒத்த வடிவையுமுடைய பெரும் பாம்புகள் கிடக்கும் வழியை விலகிச் செல்வீராக.
தூரத்தே மணங்கமழ் கின்ற பூவையும், உண்டவர் மறந்து உயிர்வாழ்தலாற்றாத பழங்களையும் தெய்வங்களன்றி மானிடர் நுகரார். ஆகையினாலே நீண்ட காம்புடைய அப் பூக்களையும் பழத்தையும் குளத்தைக் கண்டாற்போலும் குளிர்ச்சியுடைய மரக் கூட்டத்தையும், யான் கூறியதனை நினைத்து அவற்றின் குறிகளை அறிந்து இடத்தினும் வலத்தினும் பார்த்து அவற்றை அணுகாமற் போவீராக. பழங்களையுடை கிளைகளில் பலவாச்சியங்களொப்ப ஒலி செய்யும் பறவைக் கூட்டத்தையுடைய ஆலமரங்கள் நிற்கும் நாடுகளை மெல்ல அடை வீர்கள். அப்பால் நிழல்மரங்கள் நெருங்கின குறுங்காடிருப்பதால் வெயில் நுழையாததும், இராக்காலத்தே வேட்டையாடுங் குறவரும் திசை தெரியாமல் மயங்குகின்ற குன்றிடத்தே செல்லுங்கள். சென்று வழியிடத்தே போகாது அகன்ற பாறையிலே இருந்து கல்லென்னும் ஓசைபட நும்முடைய வாச்சியங் களை ஒலிப்பீர்களாக. இனிய ஓசையுடைய அருவிகளுடைய உச்சி மலை யிலே காட்டிக் காத்திருக்கும் கானவர் பலருளர். அவர்கள், துறைதப்பி ஆழத் திலே சென்று வலியழிந்து புனலிலே அழுந்துகின்றவரைக் கண்டு விரைந்து எடுப்பாரைப் போல நீவிர் திசைதெரியாத மயக்கத்தால் அறிவழிந்த வருத்தம் தீரும்படி ஓடிவந்து சேர்ந்து உண்டற்கினிய பழங்களையும் சூடுதற்கினிய பூக்களையும் தருவர். பின்னர் இடையூறு மிக்க வழியிடத்து நுமக்கு முன்னே நும்முடைய சுற்றத்தோடே மனமகிழ்ச்சி எய்துவீராக. பக்கமலை புதியமாந்தர் கண்ணாற் காணினும் தலைமயக்கும் தன்மையது. திசை காட்டுவார் கூறிய திசையை அறிந்து குறியவும் நெடியவுமாகிய பக்க மலைகளை முறையே கடந்து, பூப்பரந்த பல வரிகளையுடைய நிழலிலே இளைத்திருப்பீர்களாயின் பலவகை ஓசைகளைக் கேட்பீர்கள்.
மலையிடத்தே ஆரவாரம்
மலையிடத்தே குரங்குகள் பலாப் பழத்தைத் தோண்டுதலால் மலைமுழுதும் தேன் நாறும். அம்மலையின் உச்சியிலுள்ள பண்டங்களை வாங்கிக்கொண்டு விசையுடன் ஆரவாரஞ் செய்து வருகின்ற அருவியில் ஆடும் தெய்வ மகளிர் கையால்நீர் குடையுந்தோறும் நும்முடைய வாச்சியங்களைப் போலத் தாளந் தெரிகின்ற இனிய ஓசை பிறக்கும். புனத்துப் புகுந்து தினையைத் தின்னும் விளங்குகின்ற ஏந்தின கொம்பையுடையதும் தன்னினத்தைப் பிரிந்ததும் தலைமையுடைய ஆண் யானையை மலையின் மேலிட்ட பரணில் இருந்து காவல் செய்யும் கானவர் பிடித்தற்கு விரும்பி வளைத்தலால் ஆரவாரமுண்டாகும்.
நீண்ட அளையில் தங்கும் முட்பன்றி தனது கூரிய முள்ளால் எய்து கொன்றவர் பொருட்டு அழுகின்றவர்களின் ஆரவாரம் ஒருபால் எழும். தம் கணவர் மார்பிலே புலி பாய்ந்து உண்டாக்கிய நெடிய பிளந்த புண்ணை ஆற்றுதற்குக் காவலென்று கருதி கரிய கூந்த லுடைய கொடிச்சியர் பாடி ஒலியைச் செய்யா நிற்பர். காலையிற் பூத்த பொன்போலுங் கொத்துடைய வேங்கைப் பூவைச் சூடுதற்கு மகளிர் புலிபுலி என்று அச்சமில்லாத ஆரவாரஞ் செய்வர். கருப்பமுடைய பிடிக்குக் களிறு கவளந் தேடிக் கொடுத்துப் பாதுகாக்கையால், அதன் போக்கினைக் கவனித்து ஒளிந்திருந்த புலி பாய்ந்ததாக, அப்பிடி தன் சுற்றத்தோடே மலையிடத்தில் சத்தமிடும். குட்டியைத் தனது கையால் தழுவ மறந்த மந்தி அக் குட்டி எடுத்தற்கரிய மலைக்குகையில் வீழ்ந்திறந்ததாகத் தனது சுற்றத்தோடு அதனை நெருங்கியிருந்து துன்பத்தால் ஆரவாரஞ் செய்யும். குரங்குகள் ஏறமுடியாத மலையிடத்தில் ஏணியாகக் கூட்டி நட்ட மூங்கிற் றடிகளின் சுணுக்களில் மிதித்தேறித் தேனெடுப்போர் ஆரவாரஞ் செய்வர். அழகிய வேலினையுடைய நன்னனுக்குக் கொடுத்தற்கு இச்சிற் றரண்களிற் கைக் கொண்ட பொருள் போதுமெனக் கருதி அழித்தற்குரிய பகைவர் சிற்றரண்களை அழிக்கும் கானவர் ஆரவாரஞ் செய்யா நிற்பர்.
விடியற் காலத்தே கள்ளினையுண்ட குறவர் மான்தோல் போர்த்த பறை கல்லென்னும்படி ஒலிக்க வானைத் தீண்டும் உச்சிமலையிடத்தே தம் பெண்டிரோடு கூடிக் குரவையாடுவர். அழகிய உயர்ந்த தேர்கள் வழியிடத்தே ஓடி வந்த தன்மை போல் கல்லின்மேல் வரும் ஆறுகள் முழைஞ்சுகளிலே வீழ்ந்து இடைவிடாது ஓசையைச் செய்யும். காட்டாற்றின் நீண்ட சுழியில் அகப்பட்ட கொடிய யானையின் கோபத்தைத் தணியப் பண்ணிப் பெரிய கம்பத்திலே ஆர்க்கும் பாகருடைய ஆரவாரம் ஒருபால் எழும். ஒருபால் தட்டையைப் புடைத்துப் புனங்கள்தோறும் கிளிகளை ஓட்டுகின்ற மகளிர் சத்தமிடும் ஆரவாரம் எழும். ஒருபால் நிரையினின்றும் பெயர்ந்த அசையும் இமிலினையுடைய இடபமும், போர்த்தொழில்கைவந்த மரை ஆனின் ஏறும், முல்லை நிலக்கோவலரும் குறிஞ்சி நிலக் குறவரும் சேரக்கூடி வென்ற தம் வெற்றி தோன்ற முதுகிடாது புண் உண்டாகும்படி முட்டிப் பொரும் ஆரவாரம் எழும். எருமைக் கடாக்கள் காட்டு மல்லிகையும், குறிஞ்சியும் வாடும்படி பொருது ஆரவாரஞ்செய்யும். பலாப் பழங்களின் சுளையை விரும்பினோர் தின்று கீழே இட்ட எஞ்சிய பழத்தின் விதையைப் பயன்பெறுதற்குச் சிறுவர் கன்றுகளைப் பிணைத்துத் துடுப்புப் போலும் காந்தளினது கமழுகின்ற மடலாலே அவற்றை அடித்து ஆரவாரஞ் செய்து கடாவிடுவர். கருப்பஞ்சாற்றைப் பிழிந்து சாறெடுத்தலால் ஆலையிடத்தில் ஓசை எழும். தினையைக் குத்தும் மகளிருடைய இசைமிகுந்த வள்ளைப் பாட்டாலும், சேம்பையும் மஞ்சளையும் நட்டு வளர்த்த பின்பு பன்றி கிழங்கை அகழாமற் காப்போர் கொட்டும் பறையாலும் ஆரவார முண்டாகும்.
யான் கூறிய இவ்வோசைகளும், திரண்ட தாழ்வரையிலும் உச்சிமலை யிலுள்ள ஆரவாரமும், இவையல்லாத பல ஒலிகளும் சேர்ந்து நெருங்குகை யினாலே மலையாகிய யானையிடத் துண்டாகின்ற ஒலி திசைகளெங்கும் ஒலியா நிற்கும். பலநிறம் பொருந்திய மாலையணிந்த மகளிரின் ஆடற்கு ஏற்ற முழவின் ஓசையினால் ஊரிடத்துள்ளோர் துயிலறியார். இவ்வியல் புடைய ஊரிடத்தே கொண்ட திருநாளைப்போன்ற காண்டற்கினியவற்றைக் கண்குளிரக் கண்டும், கேட்கப்படுவனவற்றைச் செவிகுளிரக் கேட்டும் உண்டற்கினிய பல உணவுகளைக் கொண்டாடி உண்டும், மகிழ்வீராக. மகிழ்ந்து நமக்கு மேலும் இந்நுகர்ச்சி உண்டாவதாக வென்று விரும்பிப் பழைய உறவினரைப் போலும் முறைமையினையுடையயீராய் அவ்விடத்தே சிலநாள் தங்குவீர்களாக. போர்த்தொழில் மிக்கு நடத்தலால் உலகம் புகழும் திருமகள் தங்கும் மார்பையுடைய நன்னனது இடியேறு முழங்கும் மலைகள் தோன்றும். அவற்றைக்கடந்து செல்வீராக. பக்கமலையிடத்தே வியப்பு மிக்க இனிய யாழையுடைய விறலியர் குறிஞ்சியென்னும் பண்ணைப்பாட நீவிரும் ஆண்டுறையும் தெய்வங்களைக் கையாலே தொழுது, ‘எங்குறை முடித்தால் நுமக்கு இவை தருதும்’ என்று பரவுக் கடன் பூண்டு வாழ்த்திச் செல்வீராக.
நடுகல்
பின்னிய பஞ்சுபோலச் சென்று கார்காலம் வருமளவும் மலையிற் கிடைந்த மேகம் சூல் கொண்டு கையினாற் பிடிக்கத்தக்க அண்மையில் கருமை பெற்று விளங்கும். அது இயல்பாகத் தூவினாலொத்த துளிகளைத் தூவாநிற்கும், அதனால் விரைவாக நடந்து செல்ல முடியாத உமது சுற்றத் தோடே காவிச் செல்லும் வாத்தியங்கள் நனையாதபடி கிணறுகள் போன்ற குகைகளிடத்தில் நுழைந்து புகுவீர்களாக. பெரிய பாறைகள் முறிந்து தோன்று கின்ற மலைகளை அடையாதீர். எட்டாதே நின்று கண்ணினாற் பார்க்கினும், அவை கண்ணினொளியை அழகாலே வாங்கிக்கொள்ளும். இப்பெரிய மலையில் வருத்தத்தைச் செய்யும் குழிகளிடத்துப் பிறக்கும் இடையூறுகள் பல. மண் செறிந்த முழவைத் தூக்கிச் செல்லும் காமரத்தை நுமக்கு ஊன்று கோலாகக் கொண்டு அக்குழிகளில் விழாமற் போவீராக. வெயிலுள்ள வழியிடத்தே செல்ல விருப்பின் வெயில்தாழ்ந்த அந்திப்பொழுதிற் போவீராக.
அவ்விடத்தே நன்னனது யானைப் படையை உடையவும் பொருதுவந்த அரசர் வலியைக் கெடுப்பவுமாகிய அரண்களுண்டு. அவ்வரண்களிற் பின்னி வைத்தாலொத்த கொடிகளடர்ந்ததும் சிறு காடுகளுடையதுமாகி சிறு வழிகள் தோன்றும். முன்னே போகின்றவன் எதிரே கிடக்கும் திரண்டகோல் முகத்தில் அடியாமல் முன்னே தள்ளி விலகிச் செல்வானாக. அவ்விசையுடைய கோல் யாழின் பத்தரையும் முழவின் கண்களையும் கெடாதபடி காத்து அதனைக் கையாற் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்லச் செல்வீராக. யானைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பொருதினாற்போல நெருங்கின குன்றுகளிடத்து மழையினாற் செழுமையுற்ற பல காடுகள் உண்டு. ஏவல் கேளாதபகைவர் போரில் முதுகிட்டனர். அதனைக் கண்ட வஞ்சியார் படை வெற்றிதோன்ற ஆரவாரஞ் செய்தது. அதனைக் கண்டு பொறாத புறங்கொடுத்த மறவர் உயிர் கொடுத்தற்கு இது நல்ல கால மென்று நாணத்தினால் மீண்டு வந்து உயிரைக் கொடுத்தனர். அவர்கள் புகழினை எழுதி நட்ட பல கற்களையுடைய முதுகிட்டோடினோரை இகழும் பல வழிகள் அக்காட்டிடத்தே உண்டு. அந்நடுகற்களிலுள்ள தெய்வங் களுக்கு விருப்பமுண்டாகும்படி நுமது யாழை வாசித்து விரைந்து செல்வீர் களாக. வழியறியாமற் தீய நிலத்தே போய்த் திரும்பி வந்தவர்களும், இனி வருகின்றவர்களும் அவ்வாறு போய் மீளாதபடி பல வழி கூடிய சந்தியில் கையாலே கூட்டி முடிந்த ஊகம்புல்லை அடையாளமாக வைப்பீர்களாக. இவ்வாறு பொருது இறந்த இன்னான். என்று அவன் பெயரை உலகம் அறியும் படி எழுதி மராமர நிழலிலே நட்ட வீரக் கற்களின் தெய்வத்தன்மை மிகுந்த கொடுமையால் அக்காடு பிறநாடுகளை இகழ்வது போன்றது.
அதனிடத்துள்ள பலவழிகளில் நன்னனது பகைவருறையும் கொடிய இடங்கள் பலவுண்டு. தம் மூர்களினின்று நினைப்பினும் தலை நடுங்கும் சுரத்து, தேன் சொரியும் மாலையையும் கொடுத்துக் கவிந்த கையினையும் தனக்கென்று ஒருபொருளையும் பேணாத இயல்பினையுமுடைய நன்னனை நாடிச் செல்கின்றே மென்று கூறுவீர்களாக. கூறுவீர்களாயின் அப்பகைப்புலம் நம்மை ஒத்த பரிசிலர்க்கு, செல்வமிக்க நன்னனுடைய உயர்ந்த ஒழுக்கத் தினையுடைய பழைய ஊர்களை ஒக்கும். ஆதலின் அச்சமின்றி அவ் விடத்தே இளைப்பாறிப் போவீராக.
காட்டிடத்தே புலி பாய்ந்து கொன்ற பெண்மானை நினைத்துக் கலை மான் சத்தமிடும்; வில்லின் ஓசைக்கு வெருவின சிவந்த கண்ணையுடைய மரையேறு குறுங்காட்டிலே விரைந்தோடும். வேற்றுப் புலங்களில் சென்று மேய்ந்த ஏற்றையுடைய நிரையிடத்துள்ள சங்குபோல் வெள்ளிய பசுக்களின் இனிய பாலை வளையணிந்த மகளிர் மன மகிழும்படி நிரையைச் சூழ்ந்து காவல் செய்யும் இடையர் கொண்டுவந்து சொரிவர். அவ்விடத்தே செல்லின் நீவிர் அவர்களின் விருந்தினராகுவிர். பண்டம் விற்றலினாற் பெற்றபல இன நெல்லினைக் குற்றிய அரிசியைப்போல கிடாயுடைய செம்மறித்திரள் வெள்ளாட்டுடனே கலக்கும்; கலந்து கல்லென்ற ஓசையுடைய காட்டிடத்தே கடல்போலொலிக்கும். இவ்வகையான ஆட்டுத்திரள் நிற்கின்ற காட்டிடத்தே இராக்காலத்தே செல்வீராயின், இடையர் நுமக்கென்று சமையாது தமக்கென்று சமைத்த பாற்சோற்றையும் பாலையும் பெறுகுவிர். இடையர் நெருப்பை எரித்து, மெல்லிய தலைமயிரை அடைத்த மெத்தையைப் போன்று, ஆட்டுத் தோலைத் தைத்துச் செய்த படுக்கையிலே துயில் கொள்வர். அந்நெருப் பிடத்தே துணையாக இராத்தங்கிப் போவீராக. அரசன் ஆணையால் நாட்டைக் காத்து நிற்கும் வேடர் கூட்டத்தைக் காண்பீராயின் நன்னனை நினைத்துப் போகின்றோமென்று கூறுவீராக. அவர் கள்ளையும் கிழங்குகளை யும் உண்ணும்படி நுமக்கு வலிந்து தருவர். அவற்றை நுகர்ந்து அவ்விடத்தே அவர் போகச் சொன்ன வழியே செல்வீராக.
அக்காட்டின் தன்மை இவ்வகையினதாகும். தேன்துளிக்கும் மெல்லிய மலர்க் கொத்துக்களையும் யானை முறித்த தளிர்களையுமுடைய ஆச்சாவின் பூக்களையும் மரல் நாரினாலே மாலையாகக் கட்டிச் சூடுவீராக. பருக்கைக் கற்களுடைய மேட்டு நிலத்தில் சிறு வழி மழை பெய்து குளிருகையால் அவ்விடத்தே தங்கி நின்ற தெளிந்த நீரைக் குடித்து வழிக்கும் முகந்துகொண்டு போவீர்களாக. சென்று தடிகளால் தெற்றிப் பண்ணிப் புல்லால் வேய்ந்த குடில்களிருக்கும் குடியிருப்பினையுடைய அகன்ற ஊரை அடைவீர்கள். அவ்விடத்துத் தங்குவீராயின் வேங்கைப் பூவின் நிறத்தையுடைய அவரை விதையையும் மூங்கிலரிசியையும் புளி கரைத்த உலையிலே சொரிந்து ஆக்கின குழைந்த புளியங்கூழைக் காட்டிடத்துப் பகல் வழி நடந்த வருத்தந் தீரும்படி இராக்காலத்தே பெறுகுவிர். அவ்விடத்தே சில நாள் தங்குவீர்களாயின் இறைச்சி கலந்த நெய்ச் சோற்றையும் தினைமாவையும் பெறுகுவிர். அவற்றை உண்டு குறங்கொள்ளியை எரித்துப் பனி வருத்தாது நித்திரை கொண்டு விடியற்காலத்தே நிமித்தம் பார்த்துப் போவீர்களாக.
நன்னனின் மருதவளநாடு
நன்னனுடைய குளிர்ந்த மருத மரத்தையுடைய நாடு காஞ்சி மரத்தையும், நீர்வந்து பொருகின்ற ஆறுகளையும், மெல்லிய விளைநிலங் களையும், பொழில்களையும், இடைச்சேரிகளையும் உடையது. இவ்வகை யான ஊர்களில் ஒரு நாள் தங்கிப் போகினும் பலநாள் நிற்பினும் யாழின் பண்களை மாறி வாசிக்குமிடத்து எவ்வாறு இனிதாயிருக்குமோ அவ்வகை யான நல்ல பல பொருள்களை மாறி மாறி உண்ணும்படி பெறுகுவிர். நண்டுகள் ஆடித்திரியும் வயலுக்கு அருகே உள்ள மேட்டு நிலத்தே மலை ஒத்த போர்களைக் கீழே தள்ளிக் கடாவிடும் உழவர் நெல்லை அள்ளித் தருவர். பகன்றைப் பூவாற் செய்த மாலையணிந்த கள் விற்கும் வலையருடைய மகளிர், வலைவீசுவார் கொண்டு வந்த வாளை மீன்றசையுடன் தூண்டிலிற் பிடித்த பிடியின்கையை ஒத்த சிவந்த கண்ணையுடைய வராலினது உடுக்கின் கண் போன்ற தசையைக் கலப்பர்; கலந்து அசைகின்ற மிடாவினின்றும் வார்த்த நெல் முளையாலட்ட கட்டெளிவுடன் விடியற்காலத்தே களங்கள் தோறும் அமையுமென்று கண்டோர் மருளும்படி முள்ளைக் கழித்து ஆக்கின கொழுப்பால் வெள்ளிய நிறத்தையுடைய தசையுடைய வெள்ளிய சோற்றை நும் சுற்றத்துடனே உண்பீராக. உண்டு எருத்தை அடிக்கின்ற உழவர் ஓசை யோடே கூடும்படி மருதப்பண்ணை வாசித்து இளைப்பாறிப் போவீராக. நெல்லறுப்போர் கொட்டும் பறை யோசைக்கு அஞ்சி எருமைத் திரளைப் பிரிந்த கடா நும் மேல் வருவதைப் பாதுகாத்துக் குயவன் வனைகின்ற மட்கலத்துச் சக்கரம்போலக் குமிழி சுழன்றுதோன்றும் வாய்த்தலையில் ஒழிவில்லாமல் ஓடும் சேயாற்றங்கரையை வழியாகக் கொண்டு செல்வீராக.
நன்னனது வளமிக்க நகர்
நன்னது பழைய மூதூர் பல வண்டுகள் ஒலிக்கும் குளிர்ந்த பொழில்களையும் உயர்ந்த மதிலினையும், திருநாளென்னும்படி மாந்தர் பொருந்திக் கடலெனக் காரென ஒலிக்கும் ஆரவாரத்தோடு திரியும் பெரிய மாடங்கள் ஓங்கிய அங்காடித் தெருவினையும், பல குறுக்குத் தெருக்களை யும் உடையது. இவ்வகைத்தாகிய அவனது பெரியநகர் சேய்மைக் கண்ணன்று. பல பின்னிய வழிகளையுடைய கோபுரவாயிலில் பகைவரின் கரிய தலைகளைப் பருந்துகள் படிந்து உண்ணும்படி போரை வெல்லும் வாளையுடைய மறவர் கரிய காம்பினையுடைய வேலைச் சார்த்தி வைத்துக் காத்து நிற்பர். அவ்வரிய கோபுர வாயிலை ஐயுறாமற் புகுவீராக. தூர தேசங் களினின்றும் வந்து அம்பலங்களிலே தங்குகின்ற கூத்தர் முதலியோ ரெல்லாம் நும்மைக் காண்பர். கண்டு வெல்லுகின்ற போரையுடைய முருகனைப்போன்ற நன்னனிடத்துப் பரிசில் பெற வந்தாரென்று அன்பாகப் பார்ப்பர். பார்த்து நீவிர் தனிமையாய் இருக்கும் வருத்தம் நீங்கும்படி தமது விருந்தினராய் உங்களை எதிர் கொளவர். நீவிர் அவ்விடத்தே தங்கியிருப் பீராக.
எட்டு காலுடைய வருடை
அரசனது தலைவாயிலினிடத்தே மராமரத்தின் கீழ்க் கிடந்த ஆமானின் குழவியும், யானைக் கன்றும், வளைந்த அடியினையுடைய கரடியின் வாய் திறவாக் குட்டியும், வளைந்த காலினையுடைய எட்டுக் காலுடைய வருடையின் கிடாயும், கீரியும், புலி பாய்ந்து கொன்ற மரையானின் பெரிய செவியுடைய குட்டியும், சிவந்த நிலத்திற் சுக்கான் கல்லின்மேல் தவழும் ஆண் உடும்பும், மலையிடத்தே ஆடும் மயிலும், கோழிப் பேட்டை அழைக்கும் குரலுடைய சேவலும்; முழவு போன்ற பலாப்பழமும், இனிய மாம்பழங்களும், மணம் பொருந்திய நறைக் கொடியும், காவிக் கொண்டு வந்த நுகம்போன்ற நூறைக்கிழங்கும், கருப்பூரமும், மாணிக்கமும், புலியினாற் கொல்லப்பட்ட யானைகளின் முத்துடைய கொம்புகளும், காந்தட் பூவும், திலகப் பூவும், பசியமிளகுக் கொத்தும், மூங்கிற் குழாயில் முற்றிய கட்டெளிவும், மூங்கிற் குழாயிலூற்றிய எருமைத் தயிரும், தேன் சொரியும் இறாற்கூடுகளையுடைய ஆசினிப் பலாக்கள் நிற்கின்ற மலைகளினின்றும் பிறந்த காவிரி கடலிலே மிக்குச் செல்கின்ற புகார் முகத்தை யொப்ப ஈண்டிக் கிடக்கும். வானைத் தொடும் யானைகளின் இலத்தி கிடக்கும் முற்றத்தே அணுகுவீராக. அவ்விடத்தே, மழை முழக்கம் போன்ற கண்ணையுடைய முழவும் புல்லாங்குழலும் ஒலிப்ப, விறலியர் பழைய முறைமையிற் றப்பாது கடவுளை முதலில் வாழ்த்தா நிற்பர். பின்பு புதிய பாடும் பாட்டுகளைப் பாடி ‘பெரிய புகழுடைய நினது முன்னோர் மரபில் வந்த பல உபகாரிகள் இறந்தார்கள். அவர்களைப் போலாவது நின்பேர் இக்காலத்து இவ்வுலகில் நடந்துவிடாது உலகுள்ளளவும் நிற்கும்படி கொடைக்கடனை முடித்தலை யுடையவனே’ என்று கூறுவீராக. கூறி அவனது வெற்றிப்புகழை அவன் ஐம்புலனும் தன் வசமாகும்படி புகழ்ந்து கூறுவீராக. நும்மனத்திற் சென்ற ஏனைப் புகழ்களை முற்றக்கூறவும் விடானாய், “என்மேலுள்ள விருப்பங் கொண்டு வருகையினாலே என்னிடத்தே வந்ததுபோதும், பழிவந்த வருத்தம் பெரியது” எனக் கூறுவான் பின்னர் படைத்தலைவரோடே பொலிவு பெற்ற செல்வத்தையுடைய தன் மனையின் முற்றத்தே உங்களை அழைத்துச் செல்வான்.
சென்று 1சமயத்திருக்கு மண்டபத்தே யிருப்பான். இருந்து “உயர்ந்த அரசு உரிமையையும் கொடுமையில்லாத அமைச்சர் முதலியோ ரையும், அகன்ற நாட்டினையும், உடையராயிருந்தும் சுருங்கின அறிவினை யுடையராய் இரந்து வந்தோர்க்கு இல்லை என்று கூறி மறித்த கையினராய்த் தம் பெயரை நிறுத்தாமல் இறந்துபோன அரசர் மலையினின்றும் பெருகி ஓடுகின்ற சேயாற்றங் கரை மணலிலும் பலராவர். ஆகையினால் நமக்குத் தெய்வம் இத்துணை காலமிருவென எல்லையிட்ட காலம் புகழோடே கழிந்து போவதாக” என்று நினைவான். பின்னர் கொடுக்க விரும்பினவனாய் நும்மை இனிதாக நோக்கி, இழைபோன விடமறியாத நுண்ணிய நூலாற் செய்த ஆடைகளை அழுக்கேறிய துணிகள் கிடக்கும் அரையிலே உடுக்கும் படி தருவான். அவ்விடத்தே நெடுநாள் தங்குவீராயினும் நெல்லரிசிச் சோற்றுடன் பெண்ணாய் வேட்டையாடிக் கொண்டு வந்த கொழுப்புடைய இறைச்சியையும் ஒருநாட் போலப் பல நாளும் தருவான். மலையினின்றும் வீழும் அருவி வெற்றிக்கொடி போலத் தோன்றும் மலைநாட்டுக் குரியவனும் மழை போன்ற கொடைத் தொழிலை யுடையவனுமாகிய நன்னன், கொடுக்கக் குறைவுபடாத பல பொருள்களையும், தேரையும், வேழத்தையும், மணி கட்டிய பசுத்திரளையும், பொன்னாற் செய்த சேணத்தையுடைய குதிரைகளை யும் நல்குவான். நல்கிக் கூத்தர் தலைவனாகிய நீ பொற்றாமரை சூடவும் விறலி பொன்னாபரணங்களணியவும் செய்து முதல் நாளிலே பரிசில் தந்து அடுத்த நாள் போகும்படி மொழிவான்.
ஆராய்ச்சி
சங்க நூல்கள்
சங்க நூல்கள் என வழங்குவன எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்பன. சங்கத்தின் இறுதிக் காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதி என ஆராய்ச்சியாளர் கூறுவர். இக்கால எல்லைக்குமுன் செய்யப்பட்ட திருக் குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியனவும் சங்ககாலத் தனவாகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு முதலிய தொகை நூல்களிற்காணப்படும் தனிநிலைச் செய்யுட்கள் தமிழ் நாட்டின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலத்தும் ஒரே காலத்தும் வாழ்ந்த பற்பல புலவர்களாற் பாடப்பட்டவை. சங்கத்தின் இறுதிக் காலத்தும் அதனை அடுத்தும் அரசர் புலவர்கள் நூல் நிலையங்களில் அகப்பட்ட தனி நிலைச் செய்யுட்கள் பொருள், அளவு, செய்யுள் என்னும் வகைகளால் வெவ்வேறு நூல்களாகத் தொகுக்கப்பட்டன. தொல்காப்பியத்துக்கு இலக்கியங்களாக இருந்த பழைய நூல்கள் இறந்துபோனமையின் பிற்பட்ட இத்தொகை நூல்களே அதற்கு இலக்கியங் களாக இருந்து வருகின்றன. சங்க இலக்கியங்கள் இறந்து போகாது பிழைத்தமைக்குரிய காரணங்களுள் ஒன்று இதுவாகும்.
பத்துப்பாட்டின் தொகுப்பு
இறையனார் களவியலுரை நக்கீரனாராற் செய்யப்பட்டுப் பத்துத் தலைமுறைகளாகக் கேள்வி வழக்கில் வந்து பின்பு எவரோ ஒருவரால் எழுதிவைக்கப்பட்ட தென்பது அவ்வுரையாலறியவருகின்றது. கி. பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசகேசரி பாராங்குசன் மீது பாடப்பட்ட பாண்டிக் கோவையிலிருந்து 329 பாடல்கள் இவ்வுரையில் மேற்கோளாக ஆளப் பட்டுள்ளமையின் இவ்வுரை கி. பி. ஏழாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின் எழுதப்பட்டதெனத் துணியப்படுகின்றது. இவ்வுரை எட்டுத் தொகை நூல்களைக் குறிப்பிடுகின்றது. பத்துப் பாட்டைக் குறிப்பிடவில்லை. ஆகவே பத்துப் பாட்டு என்னும் தொகுப்பு ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் செய்யப்பட்ட தெனக் கருதப்படும்.
பன்னிருபாட்டியல் என்னும் நூல் ஏறக்குறைய கி. பி. 12ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டதெனக் கருதப்படுகின்றது. இதில்,
“நூறடிச் சிறுமை நூற்றுப்பத் தளவே
ஏறிய அடியின் ஈரைம் பாட்டுத்
தொகுப்பது பத்துப் பாட் டெனப்படும்” (384)
என்னும் சூத்திரம் காணப்படுகின்றது. இதனால் பத்துப்பாட்டு என்னும் தொகுப்பு கி. பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின்னும் 12ஆம் நூற்றாண்டுக்கு முன்னும் செய்யப்பட்ட தென்னும் முடிவு உண்டாகிறது.
சங்க இலக்கியங்களில் ஐந்துக்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். பதிற்றுப்பத்து பரிபாடல் முதலிய நூல்கள் முற்றும் கிடையாமையால் அவற்றுக்கும்இவர் கடவுள் வாழ்த்துப் பாடினாரோ இல்லையோ என அறியமுடியவில்லை. பத்துப்பாட்டுக்குக் கடவுள் வாழ்த்துக் காணப்படவில்லை. பெருந்தேவனார் காலத்துப் பத்துப்பாட்டு என்னும் தொகுப்பு இருந்ததாயின் அவர் இதற்கும் கடவுள் வாழ்த்துப் பாடி யிருக்கமாட்டாரா? என்னும் கேள்வி எழலாம். இதற்கு பாடியிருப்பார் என்னும் விடையே ஏற்றதாகத் தோன்றுகின்றது. பெருந்தேவனார் கி. பி. 9-ம் நூற்றாண்டுக்கும் 12ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் தொகுக்கப்பட்ட நூலெனக் கூறலாம். பத்துப் பாட்டு, எட்டுத்தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்து இருப்பதைக்கண்ட புலவ ரொருவர் திருமுருகாற்றுப்படையே கடவுள் வாழ்த்தாக அமையுமெனக் கொண்டு அதனை முதலாக வைத்துப் பத்துப்பாட்டைத் தொகுத்தாராகலாம்.
பத்துப்பாட்டிலடங்கிய செய்யுட்களைப் பாடியவர்களின் காலம்
சங்ககாலப் புலவர் அரசர்களின் காலங்களைக் கணித்துக் கூறுவ தற்குக் கல்லெழுத்துக்களோ பிற சான்றுகளோ கிடைக்கவில்லை. சிலப்பதி காரம் சேரன் செங்குட்டுவனின் தம்பியாகிய இளங்கோவடிகளாற் செய்யப் பட்டது. கண்ணகிக்குக் கல் நட்டு விழா வெடுத்தபோது இலங்கைக் கயவாகு வேந்தன் சேரநாடு சென்றிருந்தான். இது சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்றது. கயவாகு தென்னிந்தியாவினின்றும் பத்தினி வழிபாட்டை இலங்கைக்குக் கொண்டுவந்தானென்பதை சிங்கள நூல்களும் கூறுகின்றன. ஆகவே சேரன் செங்குட்டுவனும் இலங்கைக் கயவாகுவும் ஒரு காலத்தவர்களாகக் கொண்டு செங்குட்டுவன் காலத்தும் அவனுக்கு முன்னும் பின்னும் வாழ்ந்த அரசர் புலவர்களுடைய காலங்கள் கணிக்கப்படுகின்றன. இவ்வாறு கொண்டு காலங்களைக் கணிப்பதிலும் தடுமாற்றங்கள் உள்ளன. ஒரே பெயருடன் வாழ்ந்த புலவர்களும் அரசர்களும் பலராவர். முதலில் சங்ககாலப் புலவர் அரசர்களின் காலக்கணிப்புச் செய்தவர் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுக்கு முந்திய தமிழர் என்னும் நூலின் ஆசிரியராகிய வி. கனகசபைப் பிள்ளை அவர்களாவர். இவரைத் தொடர்ந்து பலர் பலவாறு காலக்கணிப்புச் செய்திருக்கின்றனர். இக் காலக்கணிப்புகளை யெல்லாம் ஒருங்கே வைத்து நோக்கின் கனகசபைப் பிள்ளை அவர்களின் கணிப்பே ஏறக்குறையச் சரியாயிருப்பதாகத் தோன்றும்.
செங்குட்டுவன் காலம்
இலக்கிய வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் சேரன் செங்குட்டுவன் காலமும் இலங்கைக் கயவாகுவின் காலமும் ஒன்றெனக் கொண்டு காலங்கணித்ததிலும் பல சிக்கல்கள் எழுகின்றன. ஆகவே அவர் பரணரில் இருவர், பெருங்குன்றூர் கிழாரில் இருவர், கணக்காயரில் இருவர், இளநாகனாரில் இருவர் இருந்தனர் எனக் கொள்ளவேண்டிய இடர்ப்பாடு உண்டாயிற்று.
கனகசபைப்பிள்ளை அவர்கள் காலங் கணித்த போது இலங்கைக் கயவாகுவின் ஆட்சிக்காலம் கி. பி. 113 முதல் 135 எனக் கொள்ளப்பட்டது. இதில் சில தவறு இருப்பதாகக் கொள்ளப்பட்டு மேற்படி ஆட்சிக் காலம் 171 முதல் 195 எனத் திருத்தப்பட்டுள்ளது. ஆகவே கனகசபைப் பிள்ளை அவர்கள் கணித்துள்ள காலங்கள் அறுபது ஆண்டுகள் கீழே வருகின்றன. கனகசபைப் பிள்ளை அவர்கள் கணித்துள்ள காலக்குறிப்பையே நாம் ஒவ்வொரு பாட்டின் அடிக்குறிப்பிலும் காட்டியுள்ளோம். கீழ் வருவது (திருத்தப்பட்ட கயவாகுவின் காலப்படி) கனகசபைப் பிள்ளை அவர்களதும் இலக்கிய வரலாறு காரரதும் காலக் கணிப்புகளாகும்.
பாடல்களும்-பாட்டுடைத் கனகசபைப் சுப்பிரமணிய
தலைவரும் பிள்ளை பிள்ளை
முருகாற்றுப்படை-முருகக்
கடவுள். கி. பி. 160-190 கி. பி. 50-
பொருநராற்றுப்படை-
கரிகாற் பெருவளத்தான். கி. பி. 120-150 கி. மு. 220-
சிறுபாணாற்றுப்படை-
நல்லியக்கோடன். கி. பி. 130-150 கி. மு. 30-
பெரும்பாணாற்றுப்படை
தொண்டமான் இளந்திரையன். கி. பி. 110-155 கி. மு. 220-
முல்லைப் பாட்டு-தலையா
லங்கானத்துச் செரு வென்ற
நெடுஞ்செழியன் கி. பி. 150-190
மதுரைக் காஞ்சி-தலையாலங்
கானத்துச் செரு வென்ற
நெடுஞ்செழியன். கி. பி. 150-190 கி. மு. 65-
குறிஞ்சிப்பாட்டு-ஆரிய
வரசன் பிரகத்தன். கி. பி. 150-190 கி. மு. 87-
பட்டினப்பாலை-கரிகாற்
பெருவளத்தான். கி. பி. 150-190 கி. மு. 220-
மலைபடுகடாம்-நன்னன்
சேய் நன்னன். கி. பி. 160-190 கி. மு. 130-
நக்கீரரின் காலம் கி. பி. 225-ஐ அடுத்ததெனக் கூறுவர் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள்.
சிலப்பதிகாரம் கரிகாற் சோழனைக் குறிப்பிடுவதாலும், சேரன் செங்குட்டுவனின் தாய் கரிகாற் பெருவளத்தானின் மகள் சோணை என மேற்படி நூலிற் காணப்படுவதாலும், இலங்கைக் கயவாகு வேந்தனின் தந்தை காலத்துக் காவேரி ஆற்றின் அணை கட்டுவதற்குச் சிறைபிடித்துச் சோழ நாட்டுக்குக் கொண்டு போகப்பட்ட ஈழநாட்டவரைக் கயவாகு மீட்டுக்கொண்டு வந்தானென்றும், அவன் தென்னிந்தியாவினின்றும் பத்தினிச் சிலம்பையும் கண்ணகி வழிபாட்டையும் இலங்கைக்குக் கொண்டு வந்தானென்றும் சிங்கள நூல்கள் கூறுவதாலும் கரிகாற் சோழனின் காலம் சிலப்பதிகார காலத்தை அடுத்ததெனக் கனகசபைப் பிள்ளை அவர்களால் கொள்ளப்படுவதாயிற்று. பத்துப்பாட்டிலுள்ள செய்யுட்களின் பாட்டுடைத் தலைவருள் கரிகாற் பெரு வளத்தானே காலத்தால் முற்பட்டவனாவான். ஆகவே பத்துப்பாட்டிலுள்ள செய்யுட்கள் முன்பின் ஒரு நூறாண்டகளுக்கிடையில் தோன்றியனவாகக் கருதக் கிடக்கின்றன.
கடியலூர் உருத்திரங்கண்ணனார் கரிகாலனையும் தொண்டைமான் இளந்திரையனையும் பாடியுள்ளமையின் இவ்விரு அரசரும் ஒரே காலத்தவ ராவர். ஆகவே பெரும்பாணாற்றுப் படை, பட்டினப்பாலை, பொருநராற்றுப் படை முதலிய மூன்றும் ஒரேகாலத்தனவாகும். நக்கீரர் பாடிய நெடுநல்வாடை யும் மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சியும் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டன. மதுரைக் காஞ்சி மலைபடுகடாத்தின் பாட்டுடைத் தலைவனாகிய நன்னன் சேய் நன்னனைக் குறிப்பிடுகின்றது. (618-9). ஆகவே நெடுநல்வாடை, திருமுரு காற்றுப்படை, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம் முதலிய நான்கும் ஒரு காலத்தன. நக்கீரர் கபிலரைக் குறிப்பிட்டிருத்தலாலும் (அகம் 78) பிற காரணங் களாலும் கபிலர் நக்கீரர் காலத்துக்கு முற்பட்டவராகக் காணப்படுதலின் குறிஞ்சிப்பாட்டு இம் மூன்றிற்கும் முற்பட்டதாகும். முல்லைப்பாட்டின் பாட்டுடைத் தலைவன் யாரெனப் புலப்படாவிட்டாலும் அதன் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனச் சிலர் கருதுவர். நெடுநல் வாடையையும் முல்லைப் பாட்டையும் ஒப்பிட்டு நோக்கும் போது இக் கருத்து வலிபெறுகின்றது. அவ்வாறாயின் முல்லைப்பாட்டும் நெடுநல் வாடையும் ஒருகாலத்தனவாகும். சிறுபாணாற்றுப்படை ஏழு வள்ளல்களைக் குறிப்பிடுகின்றது. கடை ஏழு வள்ளல்களின் காலம் கி. பி. 100-க்கும் கி. பி. 300-க்கு மிடையில் என்று எஸ். கிருஷ்ணசாமி ஐயங்காரவர்கள் ‘கடை வள்ளலார் காலம்’ என்னும் நூலில் கூறியிருக்கின்றார். ஆகவே சிறு பாணாற்றுப்படை இறுதியிற் செய்யப்பட்டதெனக் கொள்ளப்படும்.
திருமுருகாற்றுப்படை பிற்கால நூல் என்னும் கருத்து
திருமுருகாற்றுப்படை சங்ககாலத்து வாழ்ந்த நக்கீரராற் செய்யப்பட்ட தெனவே வழங்குகின்றது. இதன் நடை சங்கச் செய்யுள் நடையாகவே காணப் படுகின்றது. சங்கச் செய்யுட்களில் வட சொற்கள் அருகிக் காணப்படும். சங்க காலத்திலிருந்து கீழ்நோக்கிச் செல்லப் பிற்கால நூல்களில் காணப்படும் வடசொல்லின் விழுக்காடு அதிகமாகும். இதனைக் கொண்டும் பாடல்களின் பழமை ஒருவாறு அறியப்படுகின்றது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் திருமுருகாற்றுப்படையில் காணப்படும் வடசொற்களைக் குறித்துக் கூறியிருப்பது வருமாறு: “சமக்கிருதம் தமிழ் என்னும் இரு மொழிகளுக்கும் பொதுவாகிய தாமரை, மனம், மீன், முத்து, உலகம் முதலிய சொற்களையும் சமக்கிருதச் சொற்கள் எனக் கொண்டு கணக்குச் செய்ததில், 317 அடிக ளுடைய திருமுருகாற்றுப்படையில் அடிக்கு ஐந்து சொல் உண்டு என வைத்துக் கொண்டு பார்த்தால் நூறு தமிழ்ச் சொல்லுக்கு இரண்டு சமக்கிருதச் சொல் விழுக்காடும் காணப்படவில்லை.”1
பதினோராம் திருமுறையில் நக்கீரர் செய்தனவாக பல சிறு நூல்கள் காணப்படுகின்றன. இந் நூல்களைச் செய்தவர் நக்கீரதேவ நாயனார் எனவும் அறியப்படுவர். சங்க கால நக்கீரரும் பதினொராந் திருமுறையிற் காணப்படும் நூல்களைச் செய்த நக்கீரரும் ஒருவரே என்னும் கருத்து மிக அண்மை வரையில் இருந்து வந்தது. ஆகவே சங்ககால நக்கீரரையும் பிற்கால நக்கீரரை யும் தொடர்புபடுத்தும் புராணக் கதைகள் எழுந்தன. ஆராய்ச்சியாளர் சங்ககால நக்கீரரும் பதினோராந் திருமுறையிலுள்ள நூல்களைச் செய்த நக்கீரரும் இருவேறு காலத்தில் விளங்கியவர்கள் என அவர்களின் செய்யுள் நடைகளைக் கொண்டும் அவற்றில் வந்துள்ள வட சொல் விழுக்காடு களைக் கொண்டும் கணித்துள்ளனர். ஆராய்ச்சியாளரும் ஒருவர் திருமுருகாற்றுப் படை பிற்கால நக்கீரராற் செய்யப்பட்டதென எழுதியிருக்கின்றார். இக் கொள்கைக்குத் தக்க ஆதாரம் எதுவும் காணப்படவில்லை. திருமுறையிற் காணப்படும் பாடல்களைச் செய்தவரே திருமுருகாற்றுப் படையையும் செய்தவராவர் என்னும் மயக்கம் உண்டாயிருந்த காலத்தில் எவரோ ஒருவ ரால் திருமுருகாற்றுப்படை திருமுறையில் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும். திருமுருகாற்றுப்படை திருமறையுள் சேர்க்கப்படுதற்கு அதிலுள்ள கருத்துக்கள் இடங்கொடா. இந்திரன், விட்டுணு, சிவன் என்னும் கடவுளர் பிரமனைச் சிறை விடுவிக்க முருகக் கடவுளிடம் சென்றனர் என்னும் கூற்றைச் சிவ வழிபாட்டினர் ஏற்றுக்கொள்ள மறுப்பர். திருமுருகாற்றுப் படைக்கு உரை கண்ட நச்சினார்க்கினியர் முதலியோர் அது திருமுறையி லுள்ளதெனக் குறிப்பிடவுமில்லை. திருமுறைகள் நம்பியாண்டார் நம்பியாரால் வகுக்கப்படவில்லை என்னும் கருத்தும் நிலவுகின்றது.
திருமுருகாற்றுப்படையில் புராண சம்பந்தமான பழங்கதைகள் காணப்படுகின்றமையின் அது பிற்காலத்து நூல் எனக் கருதத்தக்கதாகின்ற தெனக் கூறுவர் ஒரு சாரார். பரிபாடல், கலித்தொகை என்னும் சங்க நூல்களில் புராணக் கதைகள் பலவற்றைக் காணலாம். மேற்படி நூல்களையே நோக்குவாருக்குச் சங்க காலத்திலேயே புராண சம்பந்தமான பழங்கதைகள் தமிழ் நாட்டில் அறியப்பட்டிருந்தன வென்பது நன்கு விளங்கும். புராணக் கதைகள் காணப்படுதலின் திருமுருகாற்றுப்படை பிற்காலத்தது எனக் கொள்ளுதல் மேலும் ஆராய்ச்சிக்குரியது1.
களவியலுரை நக்கீரரால் செய்யப்பட்டதென அவ்வுரையினால் விளங்குகின்றது. இது 7ஆம் நூற்றாண்டில் விளங்கிய ஒரு நக்கீரரால் செய்யப்பட்டதென்றும் அவர் சமண மதத்தினர் என்றும் ஒரு ஆராய்ச்சி யாளர் குறிப்பிட்டுள்ளார். இக்கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. நக்கீரர் செய்த களவியலுரையை உருத்திரசன்மர் கேட்டார் எனப்படுதலாலும், அக்காலத்து மருதனிளநாகனார் முதலிய புலவர்கள் இருந்தனர் எனச் சொல்லப்படுதலாலும், அவ்வுரை பல தலைமுறைகளாகக் கேள்வி வழக்கில் இருந்து வந்ததெனப்படுதலாலும் அதனைப் பிற்காலத்திருந்த ஒருவர் செய்தார் என்பது நம்பத்தக்கதன்று எனத் தோன்றுகிறது.